
ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இந்த சமயத்தில் செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீவரை மாணவர்கள் தரிசித்து வரலாம்.
தல வரலாறு:
ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்தில், இந்த பிரபஞ்சத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தார் மகாவிஷ்ணு. பிறகு புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனர். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனர். தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டனர். பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனர்.
இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.
கோயில் அமைந்த விதம்:
கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரம் தேவநாதன் கோயிலில் இருந்து, அழகான பெருமாள்
விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்தனர். அவற்றை வைகாசி மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைத்தனர்.
கல்விக்கு சிறப்பு பூஜை:
இங்கு வித்யாதோஷ நிவர்த்தி சங்கல்ப ஆராதனை என்னும் கல்வி பூஜை நடத்தப்படும். இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படும். கல்வியாண்டு துவங்கும் வேளையிலும் மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்து வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.
இருப்பிடம்:
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்.
திறக்கும் நேரம்:
காலை 7.30-12, மாலை 4.30-இரவு8.