Announcement

Collapse
No announcement yet.

THIRUMALA SRI VENKATESA PERUMAL

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • THIRUMALA SRI VENKATESA PERUMAL


    THIRUMALA SRI VENKATESA PERUMAL






    நாமெல்லாம் ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?
    வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்!

    ‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர்.

    திருவையாறு சங்கீத மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார்.

    கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை முடிந்தது.

    எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறிச் சட்டென்று திரையைப் போட்டுவிட்டார்கள்.


    தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு, தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார். அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர்கள் அதிர்ந்துபோய், ஸ்ரீதியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதன்பின் ஏகாந்த சேவையை மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக ஒரு கதை உண்டு.


    ஏகாந்த சேவை முடிந்ததும் பெருமாளின் பிரசாதமாக திராட்சை, முந்திரி தூவிய கெட்டியான பசும்பால் தியாகராஜருக்கும் அவரது சீடர்களுக்கும் தரப்பட்டதாம்.




    பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும். அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும். சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்!

    பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள். இரவு வேளையில் வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்ன மாச்சார்யர் பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப் பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும் திறக்கப்படும்.

    அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். பெருமாளை எழுப்புவதற்காக இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் ஏந்திய ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னிதியின் முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களை நமஸ்கரிப்பார்கள். பின்னர், ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னிதியைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் பெருமாளை வணங்கிவிட்டு, சன்னிதியின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.
    சரியாக இந்த வேளையில், வெளியே காத்திருக்கும் ஒரு குழுவினரால் சுப்ரபாதம் பாடப்படும். தீப்பந்தம் கொண்டு செல்பவர் சன்னிதியில் தீபங்களை ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, அதுவரை துயில் கொண்டிருந்த போக ஸ்ரீநிவாசமூர்த்தியை மூலவருக்கு அருகில் கொண்டு வந்து அமர்த்துவார்கள். இதுவே திருப்பள்ளி எழுச்சி.

    சுப்ரபாதம் பாடி முடிந்ததும் சன்னிதியின் கதவு திறக்கப்படும். பெருமாளுக்குப் பாலும் வெண்ணெயும் நிவேதனம் செய்து ‘நவநீத ஆரத்தி’ எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ‘விஸ்வரூப தரிசனம்’ என்று சொல்லப்படுவது இதுதான்.

    திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்று மாலை பூஜைக்கும், இன்னொன்று இரவு பூஜைக்குமாக எடுத்து வைப்பார்கள் (பிரம்மோத்ஸவ காலத்தில் யானைமீது தீர்த்தம் வரும்).

    காலை பூஜைக்கான ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி கிண்ணங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் அதை எடுத்து மந்திரங்கள் உச்சரித்து மிக பவ்யமாக பெருமாள் முன் அர்ச்சகர் நீட்டுவார். ஸ்வாமி அதில் முகத்தைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பின்னர் எஞ்சி உள்ள நீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்குப் பதிலாக போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் நடக்கும். வாசனைத் தைலம், மஞ்சள், பசும்பால், சந்தனம், தேன் போன்றவை இந்த அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும். அலங்காரம் செய்து, சாமரம் வீசி, தீபாராதனை காட்டியதோடு சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

    ப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னிதியைத் திரை போட்டு மறைத்து, ஸுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள்.

    பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். இந்த சேவைக்கு ‘தோமாலா சேவா’ என்றுபெயர். அதிகாலை 3.45 மணிக்கு இது தொடங்கும். சன்னிதிக்கு பூக்கூடை வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை வெளியே அமர்ந்திருப்போர் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நிறைவுறும்.

    இதை அடுத்து கொலுவு நிகழ்ச்சி. சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தி உத்ஸவர் விக்கிரகம், ஸ்ரீவேங்கடவனின் சன்னிதிக்குள் இருக்கிறது. இந்த விக்கிரகத்தை வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி, வெள்ளிக் குடை பிடித்து சன்னிதியில் இருந்து எடுத்து வருவர். ஓரிடத்தில் பல்லக்கை இறக்கி எள்ளுப்பொடி, வெல்லம்,வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து அர்ச்சனை, ஆரத்தி நடத்துவார்கள். அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத் தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத் தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இவை எல்லாம் முடிந்த ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும்.

    என்ன நைவேத்தியம்? ஏற்கெனவே சொல்லி இருந்தோமே! தயிர் சாதம்! மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும். அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள் ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்!

    பெருமாளின் நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா?!

    நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்) and P.Swaminathan
    Source…balhanuman.wordpress
    Natarajan
    natarajan46.rssing.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X