Announcement

Collapse
No announcement yet.

1001 SHIVA LINGA

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 1001 SHIVA LINGA

    ஒரே இடத்தில் 1001 லிங்கங்கள்!

    “உலகிலேயே மிக நீளமான பாலம் எது’ இந்தக் கேள்விக்கு ஜப்பான் நாட்டின் கென்சு சிக்கோ நகரில் உள்ள பாலம் என்று நீங்கள் பதில் சொன்னால், உங்களுக்கு பொது அறிவு அதிகம் என்று அர்த்தம்.




    இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே போடப்பட்டிருக்கும் பக்திப் பாலம் என்று சொன்னால் உங்களுக்கு சகஸ்ர லிங்கக் கோயில் பற்றித் தெரியும் என்று பொருள்.

    Please see the Video

    sfU4D9RqS2E

    என்ன, பக்தி பாலமா? ஆயிரம் லிங்கக் கோயிலா? இந்தியாவில் இருந்து கம்போடியா பல ஆயிரம் மைல் தள்ளியல்லவா இருக்கிறது? இரண்டுக்கும் இடையே எப்படிப் பாலம்?
    எல்லாம் தெரிந்துகொள்ள, முதலில் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சால்மலா நதிக்குச் செல்வோம்.

    கர்நாடகாவின் வடகன்னடப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் “சலசல’ என்று ஓடுகிறது சால்மலா ஆறு. கொஞ்சம் உற்றுக் கேட்டால் ஆற்று நீர் “சிவசிவா’ என்றபடி ஓடுவதாகத் தோன்றும். காரணம், இதன் நீரோட்டத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரம் லிங்கங்கள்!

    ஓடும் நதிக்குள் ஓராயிரம் லிங்கங்கள்! அமைத்தவர் யார் என்பது வரலாறும் அறியாத புதிர். ஒருவேளை சதா அபிஷேகம் காணும் ஆசையில் அந்த சதா சிவனே இங்கே ஆயிரம் வடிவெடுத்து வந்து விட்டானோ என்ற ஆச்சரியம் இங்கே வரும் ஒவ்வொருவருக்கும் எழும் என்பது நிச்சயம்!

    தென்மேற்குப் பருவமழை பெய்யும் சமயங்களில் சால்மலா நதி, ஆயிரம் லிங்கங்களையும் ஆரத் தழுவியபடி ஓடும் அழகு கண்டால் மட்டுமே உணரக்கூடியது.

    சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்கும் நதி, ஆங்காங்கே நந்திகள் இத்தனையையும் விஞ்சியதாக ஆவுடையுடன் காட்சிதரும் அழகழகான ஆயிரத்து ஒரு லிங்கங்கள் அத்தனையையும் அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டுபோக வேண்டும் என்று எத்தனைபேர் ஆசைப்பட்டார்களோ... ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கம்போடியாவை ஆண்ட மன்னர்கள்.

    கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளை ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்துக்களே ஆட்சி செய்தார்கள். தெய்வபக்தி மிகுந்த அகத்தியர், கவுண்டியன்யர் என்கிற இரு அந்தணர்களே அதற்கு வித்திட்டார்கள். (அகத்தியர், கவுண்டின்யர் என்ற பெயரில் இருந்த முனிவர்கள் இவர்களா என்பது தெரியவில்லை) வீரத்தோடு அங்கே பக்தியும் தழைத்திபருந்தது. அதிலும் குறிப்பாக சிவ, விஷ்ணு வழிபாடுகள் எங்கும் பரவி இருந்தன.

    அந்தக் காலகட்டத்தில், பதினோராம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட முதலாம் சூரியவர்மன் என்ற மன்னனுக்குத்தான் ஓராயிரம் லிங்கங்களை ஓடும் நதியில் அமைக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. ஆயிரம் மைல் தூரத்துக்கு அமைந்த கனவுப் பாலத்தில் (உலகின் நீண்ட பாலம்!) சென்று பார்த்ததுபோல், சிர்சியில் அதே அமைப்பில் இருக்கும் சிவலிங்கங்களின் தரிசனம் அவனுக்கு மனக் கண்ணில் தெரிந்தது.
    அப்படியே காட்சியினைப் பெயர்த்தான் அரசன். மந்திரி பிரதானிகளிடம் சொன்னான்.

    மன்னன் ஆணையிட்டால் அது நிறைவேறாமல் இருக்குமா? உடனடியாகத் தொடங்கப்பட்டது பணி. ஆனாலும் தான் கண்ட கனவு முழுமையாக எல்லாம் அமைக்கப்படும் முன்பே அவன் காலம் முடிந்தது. ஆனாலும் அவனுக்குப் பின்வந்த அரசர்களும் அந்தப் பணியைத் தொடர்ந்தார்கள்.


    பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலத்தில் நிறைவுற்றது, முதலாம் சூரியவர்மனின் கனவு. ஓடும் நதியில் உருவான சகஸ்ர லிங்கங்கள் முதல் பலப்பல இந்துக் கோயில்களும் கம்போடியாவில் கட்டிமுடிக்கப்பட்டது அப்போதுதான் என்கிறது வரலாறு. கர்நாடகாவில் இருக்கும் சகஸ்ர லிங்கங்களை தரிசிக்க சிவராத்திரி சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.


    கம்போடியாவிலோ தினம் தினம் திருவிழாபோல் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆயிரம் லிங்கங்கள் என்பதை “சகஸ்ரலிங்கம்’ என்று சமஸ்கிருத வார்த்தையாலேயே கம்போடியர்கள் சொல்கிறார்கள்.


    கர்நாடகாவிற்கு ஒருபடி மேலாக, சிவனோடு விஷ்ணுவையும் பார்க்க முடிகிறது கம்போடியாவில். பாறை ஒன்றில் புடைப்புச் சிற்பமாக பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், நாராயணன் என்ற தமது திருநாமத்திற்கு ஏற்றவாறு நதிநீரில் ஏகாந்த சயனம் செய்வது பரவச தரிசனம்! ஆற்றில் அபிஷேகம் காணும் ஆயிரத்தொரு லிங்கங்களையும் மனம் குளிரக் குளிர பார்த்தபடி பள்ளிகொண்டிருக்கிறார் பாற்கடல் வாசன்.





    சுற்றிலும் உள்ள பாறைகளில் சிவன், பார்வதி, ராமர், அனுமன், மகாலட்சுமி சிலைகளைச் செதுக்கியிருப்பதைப் பார்க்கலாம். இயற்கைக் காட்சிகளை ரசிக்கவும், இறைவனை தரிசிக்கவும் காடு, மலை, மேடு, பள்ளங்களைக் கடந்து இங்கே வருபவர்கள், உள்ளத்தில் நிறைவோடும், மனதில் குளிர்வோடும் திரும்புகிறார்கள்.

    எப்படித் தோன்றியது ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் இரு நாடுகளில் ஒரே மாதிரி எண்ணம். இந்தப் புதிர்க் கேள்விக்கு விடை சொல்வதுபோல் இருக்கிறது, கம்போடியாவில் ஆயிரத்தொரு லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்தின் பெயர். கபால் சியான் என்ற அந்தப் பெயருக்கு அர்த்தம், இயற்கையான பாலம்...! இயற்கையாக இரு பாறைகள் இணைந்து அமைந்த பாலம் ஒன்று இங்கே இருக்கிறது. ஆனால் ஆயிரத்து ஒரு வடிவம் கண்ட ஆண்டவனுக்கு மட்டுமே இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே இந்த பக்தி பாலம் எப்படி அமைந்தது என்று தெரியும்.

    உங்களால் இந்த இரு இடங்களுக்கும் நேரில் செல்ல முடியாமல் அல்லது அந்த வாய்ப்பு கிட்டாமலும் இருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல அந்த ஈசனின் திருப்பெயரை ஆயிரம் முறை சொல்லுங்கள். நிச்சயம் அவன் பக்தி பாலம் அமைத்து உங்களுக்கும் மனக்கண்ணில் காட்சிதருவான்.

    எங்கே இருக்கு?

    கர்நாடகாவில் கோயில் இருப்பது வடக்கு கன்னடப் பகுதியில். சிர்சி எனும் இடத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் சால்மலா ஆற்றில் இருக்கிறது ஆயிரத்தொரு லிங்கம்.
    கம்போடிய நாட்டில் பாண்டேய்ஸ்ரீ எனும் இடத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இருக்கிறது சகஸ்ரலிங்கம். கடினமான மலைப் பாதை வழியே செல்ல வேண்டும்.

    - ஆர். நாகராஜன்


    Source: dinamalar.

    This post is for sharing Knowledge only, no intention to violate any copy rights
    Last edited by Padmanabhan.J; 27-11-19, 06:31.
Working...
X