Announcement

Collapse
No announcement yet.

Prahalada and God Narashima

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Prahalada and God Narashima

    PRAHALADA and God Narashima

    பக்தனைக் கண்டு உருகிய இறைவன்




    ‘என் இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்’ என்ற பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்க மஹா விஷ்ணு, இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்து தூணில் இருந்து வெளிப்பட்டார்.


    இது வரை பார்த்திராத அதிபயங்கர உருவம். சிங்க முகமும்... மனித உடலுமாக... இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்து, குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட தேவர்களும் நடுங்கினர். நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி அவர்கள் வேண்டிக் கொண்டும் பயனில்லை.



    மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதன் ஒருவனுக்கு மட்டுமே இருந்தது.


    தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதனோ அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் வாஞ்சையுடன் அள்ளி எடுத்து மடியில் வைத்து நாக்கால் நக்கினார். "பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?" என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. "சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?" என்றான்.




    "உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு" என்றார் நரசிம்மர். என்னே… தெய்வத்தின் கருணை.

    பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. "மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்", என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,"ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது" என்றான்.


    பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பொதுவாக பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ மிகவும் உக்கிரமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த இளம் வயத்தில் அவனுக்கிருந்த மனமுதிர்ச்சி அவரை பிரமிக்க வைத்தது.

    சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை.


    "இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்", நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், "இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்" என்றான்.


    நரசிம்மர் அவனிடம், "பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்" என்றார். இறந்த பின்னும் தனது தந்தைக்கு வைகுந்தம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த பிரகலாதனுக்காக இறைவன் உருகியதில் என்ன வியப்பு.
    ஓம் நமோ நாராயணாய...


    Source:
    .news./devotional


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights

Working...
X