Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன் - 4


    மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறதென்றும், எல்லாவற்றையும்
    கடந்திருக்கிறதென்றும், அதனுடைய மஹிமையை இவ்வுலகப் பொருள்கள்
    விளக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் முந்திய நாள்களில் கேட்ட மூன்று உபதேசங்களின்
    சாராம்சத்தை ஆழ்ந்து எண்ணிக் கொண்டிருந்தான். அவ்வமயம் நீர்ப்பறவையொன்று
    அங்கு பறந்துவந்தது. முக்கியப் பிராணன் அந்நீர்ப்பறவையின் வடிவெடுத்து
    அவனுக்குப் பிரம்மத்தின் நான்காவது தன்மையை உபதேசிக்கலாயிற்று–


    “பிராணன், நேத்திரம், செவி, மனம் இந்நான்கையும் பிரம்மமே இயக்குகிறது.
    அத்தியாத்மத்தில் பிரம்மத்தினுடைய தன்மை இந்நான்கின் மூலம் விளக்கப்படுகிறது.
    பிரம்மத்தின் இத்தன்மை ‘ஆயதனவான்’ என அழைக்கப்படுகிறது”. புறத்திலும் அகத்திலும்
    பிரம்மத்தின் தன்மை இங்ஙனம் இருப்பதாக ஸத்தியகாமன் உபதேசிக்கப்பட்டவுடன்
    அவனுக்கு ஓர் உண்மை விளங்கிற்று. பிரம்மமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும்
    இதை அறிவதே பிரம்மத்தை அறிவதற்கு நிகராகுமென்றும் இந்த ஞானம் தன்னை
    அறிவதிலிருந்தே எளிதில் கிடைக்கிறதென்றும் தெளிவாக அவன் உணர்ந்தான்.
    மேலும் ஆத்ம சொரூபத்துக்குத் தான் புறம்பாக இருக்கும்வரையில் பிரம்மத்தை
    அறிந்தவன் ஆகமுடியாது என்பதையும் அவன் நன்கு உணர்ந்தான்.


    பிரம்மத்தைப் பற்றிய ஞானம் அவனிடத்தில் தெளிவானதும் அவன் உள்ளம் சாந்தியடைந்தது.
    அருள்தாகம் தணிந்து பிரம்மஞானம் உள்ளவனாக குருவிடம் தனது வணக்கத்தைத் தெரிவிக்க
    அவரது ஆசிரமத்துக்கு அவன் சென்றான். ஆசிரமத்தை அடைந்து குருவை வீழ்ந்து நமஸ்கரித்தான்.
    அவனுடைய முகத்தில் பிரம்மதேஜஸ் ஜொலித்துக்கொண்டிருப்பதைக் கண்ட குரு
    ஆனந்தமடைந்தவராய்,
    “ஸத்தியகாமா!” என்று அன்புடன் கூவி, “நீ பிரம்மஞானம் அடைந்தவன் போல் காட்சியளிக்கிறாய்.
    உன் முகத்தில் தவழ்கின்ற புன்சிரிப்பு உன்னிடத்திலுள்ள பரமசாந்தியை வெளிப்படுத்துகிறது.
    உனக்குப் பிரம்ம ஞானத்தைப் புகட்டியவர் யார்?” என்று கேட்டார்.


    வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் அவனுக்குக் கிடைத்த
    ஞானத்தை குருவினிடம் எடுத்துப் பகர்ந்தான். தேவதைகளின் மூலம் மறைமுகமாக
    அவனுக்குக் கிடைத்த ஞானத்தை அவன் பெரிதாகக் கருதவில்லை. குருவினிடம் நேரே
    உபதேசம் பெறுவதுதான் சிறந்தது எனக்கருதி, தன் கருத்தைக் குருவிடம் தெரிவித்தான்.
    குருவும் சிஷ்யனுடைய விசுவாசத்தை மெச்சி மீண்டும் அவனுக்கு பிரம்மஞானத்தைப்
    புகட்டினார். ஏற்கனவே அவன் அறிந்த ஞானத்தை ஸ்திரப்படுத்துவதற்கும்
    தெளிவுபடுத்துவதற்கும் குருவின் உபதேசம் அவனுக்குப் பயன்பட்டது.
    இங்ஙனம் மாதா, தெய்வம், குரு ஆகியோரின ஆசீர்வாதத்தால் ஸத்தியகாமன்
    ஞானத்தைப் பெற்றான். சாதனையில் நாட்டங்கொண்டு முறையாகச் சாதனம்
    செய்பவர்களுக்குத் தாயிடம் இருந்தும், குருவினிடம் இருந்தும், தெய்வத்தினிடம் இருந்தும்
    உதவியும் ஆசியும் கிட்டுகின்றன என்பதை ஸத்தியகாமன் கதை தெளிவாக்குகிறது.


    மாடு மேய்த்தல் மூலம் ஸத்தியகாமனுக்கு ஞானம் ஏற்படுகிறது. ஆகையால்
    மனபரிபாகத்துக்குத் தொழில் எத்தகையது என்பது முக்கியமன்று;
    அது என்ன நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்பதே முக்கியமானது.
    நமக்கு அமைந்த தொழிலைக் கடவுளுக்காக என்று நாம் செய்து வந்தால்
    அது நம் மனதைப் பரிசுத்தமாக்குகிறது. மனம் பரிசுத்தம் அடையும்பொழுது
    அது ஞானத்தைப் பெறத் தகுதியுடையதாகிறது. பரிசுத்த உள்ளத்தில் ஞானோதயம்
    உண்டாகிறது. அந்நிலையில் வானும் மண்ணும், ஒளியும், வெளியும், மலையும்,
    நதியும் ஒவ்வொன்றும் உபகுருவாய் இருந்து பேசாமல் பேசி நமக்கு ஞானத்தைப்
    புகட்டுகின்றன.


    இவ்வுண்மையை ஸத்தியகாமனுடைய கதை நமக்குப் புகட்டுகிறது.


    continue.................
Working...
X