Announcement

Collapse
No announcement yet.

Aavani moolam & pittu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Aavani moolam & pittu

    Aavani moolam & pittu


    அவர் ஒரு மூதாட்டி. வந்தியம்மை என்ற பெயரைக் கொண்டவர். ஆயிரம் பிறைகளுக்கும் மேல் கண்டவர். தளர்ந்த உடல். கூன் விழுந்திருந்தாலும் தனது காலிலேயே நிற்க வேண்டும் என்ற மனஉறுதி. அதனால் தானே உழைத்து இறைவனுக்கும் பங்கு கொடுத்து வாழ்ந்தார்.


    அவரது பக்தியையும் மாணிக்கவாசகரின் பெருமையையும் உலகத்துக்கு உணர்த்த விரும்பிய சிவன், வைகை நதியைப் பெருக்கெடுக்க வைத்தான். வைகையும் அணைகளை உடைத்துக் கொண்டு மதுரையை அழிக்கப்புகுந்தது.
    நதியின் அணைகளை மீண்டும் புதுப்பித்து உயர்த்தாவிட்டால் பேரழிவு ஏற்பட்டு விடும் என்பதைக் கண்ட மன்னன் அரிமர்த்தனபாண்டியன் அமைச்சர்களுடன் ஆலோசித்து நதியின் கரைகளை செப்பனிட உத்தரவு பிறப்பித்தான்.
    வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வேண்டும் என்ற ஆணையின் கீழ் வந்தியம்மைக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.
    வந்தியம்மை பிட்டு விற்றுப் பிழைத்தவர். சிவனின் மீது மிகுந் பக்தி உடையவர் என்பதால் அவிக்கும் முதல் பிட்டை மதுரை சுந்தரேஸ்வரனுக்கு அர்;ப்பணம் செய்வார். சிவனடியார் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து பிரசாதமாக அதனைக் கொடுத்து விடுவார். சிவனடியார்களிடத்தில் சிவனையே கண்டவர் அவர்.


    பிட்டை விற்று காலம் ஓட்டிக் கொண்டிருந்த வந்தியம்மையையின் உடல் நிலையையும் கவனத்தில் எடுக்காது ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால், நதியின் கரையை அடைக்க அவர் கூலிக்கு ஆள் தேடினார்.


    எவருமே கிடைக்கவில்லை. மன்னின் தண்டனைக்கு ஆளாக வேண்டி வருமே என்று வந்தியம்மை கலங்கினார். சுந்தரேஸ்வரை மனம் உருக வேண்டினார். தினமும் பிட்டை நைவேத்தியம் செய்து தொழுது நின்ற பக்தைக்கு உதவிட சொக்கநாதப் பெருமான் திருவுளம் கொண்டார்.


    கந்தல் துணையுடன் வந்தியம்மையை நாடி வந்தார். "கூலிக்கு ஆள் தேடுவதாக அறிந்தேன். அதனால் வந்தேன்" என்றார். வந்தியம்மைக்கு பெரும் மகிழ்ச்சி. எனினும் கூலி கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்திய அவர், கூலியாக பிட்டுத்தான் தரமுடியும் என்றார்.


    கூலியாளாக வந்த சிவனும் இணங்கினார். சுந்தரேஸ்வரருக்கு நிவேதனம் செய்த பிட்டை வந்தியம்மை அளிக்க அதனை ரசித்துச் சாப்பிட்ட இறைவர் தான் கொண்டு வந்திருந்த மண்வெட்டி கூடையுடன் வந்தியம்மைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தார்.


    சுறுசுறுப்பாக மண்வெட்டினார். ஆனால் பின்னர் களைப்படைந்தவர் போன்று அருகில் இருந்த மர நிழலில் ஓய்வு எடுத்தார். வந்தியின் வீட்டுக்கு மீண்டும் சென்று பிட்டு கேட்டு உண்டார். மற்றவர்களுடனும் பங்கிட்டுக் கொண்டார்.
    மண்ணை கூடையில் அள்ளுவார். கூடையைத் தலையில் வைக்கத் தூக்கும் போது பாரம் தாங்காமல் அதனை கீழே தவற விடுவது போலப் போட்டு நிற்பார். ஆடுவார். பாடுவார். ஆனால் கரையை அடைக்கும் பணியைச் செய்யவே இல்லை.
    அதனை அவதானித்த கண்காணிப்பாளர் கூலியாளாகிய சிவனைக் கண்டித்தார்.


    அந்தச் சமயம் பார்த்து அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்து விட்டான். மன்னன் வருவதைக் கண்ட சுந்தரேஸ்வரர் எதுவும் அறியாதவர் போன்று பாசாங்கு செய்து மீண்டும் மரத்தடிக்குச் சென்று நித்திரை செய்வது போன்று நடித்தார். வந்தியம்மையின் வேளையாள் தூங்குவதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்தான்.
    வீரர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் கூளியாளாக இருந்த சிவன் ஒரு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் மேலும் சீற்றம் அடைந்த மன்னன் பிரம்பினால் அடித்தான். அந்த அடி சிவபெருமானைத் தவிர எல்லோரது முதுகிலும் விழுந்தது.


    தான் அடித்த அடி தன்மீதே விழ மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.
    நடந்தது எதுவும் தெரியாதது போன்று எழுந்த கூலியாளான சிவன் கூடையில் ஒரு தடவை மண் எடுத்து வைகைக் கரையில் போட்டார். கரை அடைக்கப்பட்டது. வெள்ளமும் கட்டுக்கடங்கியது.


    வேளையாளாக வந்த சிவனாரும் மறைந்தார். தமது சுயரூபத்துடன் காட்சி அளித்தார். "மன்னா, வந்தியம்மைக்கு உதவ வந்து பிட்டுக்கு மண் சுமந்தேன். அறவழியில் வந்த உனது செல்வத்தை மாணிக்கவாசகன் எனக்காகச் செலவிட்டான். அதனை நான் மனம் உவந்து ஏற்றுக் கொண்டேன். நரிகளை குதிரைகளாக ஆக்கி லீலை புரிந்ததும் நானே" என்று கூறி மறைந்தார்.


    இந்த அற்புதங்கள் நிகழ்வதற்குக் காரணமான வந்தியம்மையைத் தேடி மன்னன் சென்ற போது சிவகணங்கள் அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்வதைக் கண்டான்.
    குதிரை வாங்கக் கொடுத்த பெருநிதியை கோவில் கட்ட செலவழித்து விட்டார் என்ற கோபத்தில் சிறையில் அடைத்த மாணிக்கவாசகரைக் கண்டு மன்னிப்புக் கோர மன்னன் அவரைத் தேடிச் சென்றான்.
    மாணிக்கவாசகர் அங்கில்லை என்பதைக் கண்டதும் கோவிலுக்குச் சென்றான். சுந்தரேஸ்வரப் பெருமான் முன் நிஷ்டையில் இருந்த மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான். மீண்டும் அமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினான். மாணிக்கவாசகர் அதனை ஏற்காது, தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.


    வந்தியம்மைக்கு சிவபெருமான் மோட்ச அருள் புரிந்த இடத்தில் இன்று பிட்டு சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரை ஆரம்பாளையம் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலிலும் புட்டு சொக்கநாதருக்கு அருகில், வலப்பக்கத்தில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. வந்தியம்மைக்கும் தனி சன்னதி இங்கு இருக்கிறது.
    வருடம் தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர தினத்தில் பிட்டுத்தோப்பில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்குப் பிட்டுத் திருவிழா நடைபெறும். மதுரை சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், பிரியாவிடை நாயகி ஆகியோர் அன்றைய தினம் எழுந்தருளுவார்கள்.
    பிட்டுத் திருவிழாவைக் கண்டு களிக்க திருப்பரங்குன்றத்து முருகப்பெருமான் தெய்வானையுடன் வருவார். விசேட அம்சமாக மாணிக்கவாசகரின் வரவும் இடம்பெறும்.
    பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நிகழும் போது பக்தர்கள் சொக்கநாதர், பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன், வந்தியம்மை போன்று வேடமிட்டு சிவபெருமானாரின் திருவிளையாடலை கூடியிருப்பவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.
    பிட்டுத்தோப்பில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதருக்கு பிட்டுத் திருவிழா நடத்தப்படும் தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் இரண்டும் நடைகள் சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தனக்காகவும் வந்தியம்மைக்காகவும் இறைவன் நடத்திய நாடகத்தை மாணிக்கவாசகர் திருஅம்மானை பதிகத்தின் இந்தப் பாடலில் நினைவு கூறுகிறார்.


    ''பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
    பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
    விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
    கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
    மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
    புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்''
    .
    பண்களைக் கொண்ட பாடல்களை மகிழ்ந்து ஏற்று வரமருளும் பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தில் உள்ளவர்களும் ஏற்றிப் போற்றும் சிறப்பினைக் கொண்டவனும், மண்ணுலகத்தின் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள், மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னன் கைப் பிரம்படியினால் புண்பட்ட பொன் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.


    பண் சுமந்த பாடல்- பண்களைக் கொண்ட பாடலுக்கு, பரிசு படைத்தருளும் - ஏற்ற பரிசினை வழங்கி அருளுகின்ற, பெண் சுமந்த பாகத்தன் - பெண்ணை ஒரு பாகமாகத் தாங்கியுள்ளவனும், பெம்மான் – பெம்மானும், பெருந்துறையான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும், விண் சுமந்த கீர்த்தி – தேவலோகத்தில் உள்ளவர்களும் புகழ்ந்து போற்றும் பெருமையை உடையவனும், வியன் – பெருமையுள்ள, மண்டலத்து ஈசன் - மண்ணுலகத்துக்கு இறைவனாக இருப்பவனும், கண் சுமந்த நெற்றிக் கடவுள் - நெற்றிக் கண்ணை உடையவனுமாகிய பெருமான், கலிமதுரை – ஆரவாரிக்கும் மதுரையில், மண் சுமந்து – (வந்திக்காக) மண் சுமந்து, கூலி கொண்டு – (பிட்டை) கூலியாகப் பெற்று, அக்கோவால் - பாண்டிய மன்னனால், மொத்துண்டு – (பிரம்பால்) அடியுண்டு, புண் சுமந்த – புண்பட்ட, பொன்மேனி – பொன்போன்ற மேனியின் புகழை, பாடுதுங்கான் அம்மானாய் - அம்மானைப் பாட்டாகப் பாடுவோமாக.
    அருளாளர்கள் இறைவனை இசை வடிவாகப் போற்றினர். "ஏழிசையாய் இசைப்பயனாய்" என்கிறார் சுந்தரர். இசையும் இறைவனே. அந்த இசையின் பயனும் அவனே. அதனால்தான் பண்ணோடு கூடிய பக்திப் பாடல்களாக அருளாளர்கள் இறைவனைப் பாடி மகிழ்ந்தனர். இறைவனும் அவர்களுக்கு வரம் அருளினான்.
    இசையின் பிறப்பிடமே இறைவன் என்பதாதல் "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" என்று அப்பர் கூறுகிறார்.
    ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் இருப்பதனால்தான் இறைவன் பண்சுமந்த பாடல்களுக்கு ஏற்ற பரிசில்களை வழங்குகிறான்.


    இறைவன் எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். "உள்ளொடு புறங்கீழ் மேலா யுயிர்தொறு மொளித்து நின்ற கள்வன்" என்பது திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவரின் வாக்கு. அதனால் தான் மன்னன் இறைவனாகிய கூலியாளர் மீது அடித்த அடி எல்லோர் மீதும் பட்டது.

  • #2
    Re: Aavani moolam & pittu

    Dear Soundarrajan
    Nice to read after a long time. One request. Why don't you post here,in this forum, all the 64 Thirivilaiyaadalgal of Lord Siva?
    Sure every one will be interested and we can pass on to our kids,grandkids these stories.
    Anyicipating them,
    Thanks.
    Varadarajan

    Comment

    Working...
    X