Announcement

Collapse
No announcement yet.

Nayagi swamigal & Azhwar songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Nayagi swamigal & Azhwar songs

    Nayagi swamigal & Azhwar songs
    Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
    திருவடி பெருமை


    நாயகி சுவாமிகளும்
    ஆழ்வார் பாடல்களும்


    51வது பாட்டிலே திருவடிகளைத் தொழுவது நமது கடமை என்பதை வலியுறுத்துவார்.


    ஒப்பற்ற கொடியவர்களான ஐம்புலன்கள் நம் மனத்தைக் கெடுத்த கெட்டபாதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். திசை திருப்பும். இறைவன் பால் நம் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றால் இந்த ஐம்புலன்களையும் நாம் அடக்க வேண்டும். அதை எப்படி நாம் செய்வது? எம்பெருமான் திருவடிகளைக் கண்டு வணங்குவதையே மனத்தின் தொழிலாகக் கொள்ள வேண்டும். அப்போது சிறிதுசிறிதாக ஐம்புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்கு வரும். இல்லாவிட்டால் மதயானை போல் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி அழிவுகளை உண்டாக்கும் நம் மனம். எனவே அடியவர்கள் என்றால் திருவடிகளை வணங்க வேண்டும். அதன்மூலம் ஐம்புலன்களை வெல்ல வேண்டும். குறும்பர் என்றால் கொடியவர்.
    67வது பாட்டிலே இன்னும் அழகாகச் சொல்லுவார். நெஞ்சே நீ இந்த உலகத்தை விட்டுச் சென்று பரமபதம் அடைய வேண்டும் என்று விரும்புகிறாயா? விரும்பினால் எளிதில் பெறலாம். அது இயலாத காரியமே அல்ல. வேண்டாம் வேண்டாம் இந்த உலக அரசாட்சி தான் வேண்டும். முதலமைச்சர் ஆக வேண்டும். பிரதம மந்திரி ஆகவேண்டும். ஏதாவது அதிகாரம் உள்ள பதவியில் அமரவேண்டும் என்று விரும்புகிறாயா? அதுவும் எளிது. எப்படி? எம்பெருமான் நீ கேட்டதைத் தந்தருளும் வல்லமை உடையவன். கருணாகரன். கண்ணன் இவற்றைத் தருவான். எப்போது நீ கண்ணன் திருவடியை வாழ்த்தக் கற்றுக்கொள்ளும் போது.


    அதுவோ நன்று என்று அங்க அமரர் உலகோ வேண்டில்
    அதுவோ பொருளில்லை அன்றே? – அது ஒழிந்து
    மண் இன்று ஆள்வேன் எனினும் கூடும் மடநெஞ்சே
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.


    கல் என்றால் கற்றுக் கொள் என்று பொருள்.


    இதேபோன்று 80வது பாடலில் அருமையாகச் சொல்வார். பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதிகள் ஆகியவற்றைக் கடந்தபின் நாம் இன்பமாகிய கைவல்யம் என்ற நிலையை அடைய ஆசைப்படுவோம். அது கூட அப்படி பிரமாதமான – சிறப்பான இடமல்ல என்று தான் நான் கூறுவேன். உலகளந்த அந்த பெருமாளின் தாள்களை துதிக்காமல் கழியும் நாட்கள் –துதிக்க மறந்த பொழுதுகள் – இவையெல்லாம் துன்பம் தரும் நாட்கள் ஆகும். எங்கே போனாலும் இறைவனது தாள்களில் விழுந்து துதிக்க வேண்டும்.
    பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து – பின்னும்
    இறக்கவும் இன்புடைத்தாம் ஏலும் – மறப்பெல்லாம்
    ஏதமே என்றல்லால் எண்ணுவனே – மண்ணளந்தான்
    பாதமே ஏத்தாப் பகல்.
    இவ்வளவு தெரிந்தும் இறைவனது திருவடிகளை வணங்கவில்லை. நம்மாழ்வாருக்குக் கோபம் வருகிறது. பாழாய்ப் போன விதியால் அலைக்கழிக்கப்படுகிறது என் மனம். மனதிற்குக் கட்டளை இட்டு திருவடிகளை துதி செய் – தலையாலே வணங்கு – கைகளால் கூப்பித் தொழு என்று சொல்லிப் பார்க்கிறது மனம். ஆனால் ஐம்புலன்கள் மதம் பிடித்த யானை போல் கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை. எனவே மனதைப் பார்த்து எப்படியப்பா உன்னால் இறைத் திருவடியைத் துதிக்காமல் இருக்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார். மனம், மெய், செயல் ஆகிய மூன்றாலும் இறைவனைத் துதிக்க வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும்.
    வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து
    நின் தலையைத் தாழ்த்து
    இருகை கூப்பு என்றால் கூப்பாத
    பாழ்த்த விதி எங்குற்றாய் என்று அவனை
    ஏத்தா நல்நெஞ்சமே
    தங்கத் தானா மேலும் தங்கு.


    இறுதிப்பாட்டு 87வது பாடல். அதர்வண வேதத்தை முடித்து வைக்கும் போது கூட திருவடியை வணங்குவது பற்றி கூறியே முடிக்கிறார்.


    இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
    எப்போதும் ஈதே சொல் நன்நெஞ்சே – எப்போதும்
    கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
    மொய் கழலே ஏத்த முயல்.
    கையை விட்டு எப்போதும் அகலாத சக்கரப் படையை உடையவர் திருமால். அவன் நம் மேல் உள்ள முன்வினை – நுகர்வினை ஆகியவற்றை அகற்றுவான். சக்கரப்படை உடையவன் அல்லவா? எனவே நம் பாவங்களை – கொடிய வினைகளைக் களைய அவனையே துதிக்க வேண்டும். அதிலும் சிறப்பாக அவன் கழலையே –திருவடிகளையே துதிக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியும் என முத்தாய்ப்பாக முடிக்கிறார்.




    என்று திருவாய்மொழியிலே வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வார் இறைவனிடம் வேண்டுவார். திருவடிகளே சரணம் என்ற தாரக மந்திரத்தை உலகத்துக்கு எடுத்து உரைத்தவர் அவரே. திருவடியை விட்டால் வேறு தஞ்சம் நமக்கு எங்குமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியவர் வேதத்தை அழகிய தமிழிலே நமக்குத் தந்த நம்மாழ்வாரே ஆவார். இந்த திருவடிகளைக் காண – கண்டு தொழ பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இங்கே நமக்கோ மிக எளிதாக அந்தப் பேறு கிடைத்து உள்ளது. திருவடிகளின் பெருமையை உணர வேண்டும் என்பதற்காகவே பெருமை மிக்க சடாரியின் வடிவமாக நம்மாழ்வாரே உருப்பெற்று உள்ளார். சடாரியை நம் தலையின் மீது வைப்பதினால், அதை தலைவணங்கி அடியவர்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் திருவடி தொடர்புக்கு நம்மை எல்லாம் ஏற்றவர்களாக ஆக்குகிறார் நம்மாழ்வார். இதைத்தான் மகாதேசிகன் அவர்கள் தமது பிரபந்தத்தில் அருமையாகக் கூறுகிறார்.


    மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
    வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
    தந்தை என நின்ற தனித் திருமால் தாளில்
    தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே


    என்று கூறுகிறது தேசிகப் பிரபந்தம். வேதத்திலே தேர்ச்சி பெறாத –வேதத்தைப் படிக்க முடியாத – படிக்க நேரமில்லாத – படிக்க வாய்ப்பில்லாத பாமரர்களும் நாராயணின் திருவருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே நம்மாழ்வார் தாமே திவ்யமணி பாதுகையாக அவதரித்து உள்ளார். பரம பக்தரான நம்மாழ்வாரின் அம்சமே பாதுகை வடிவான சடாரி ஆகும்.
    இறைவனின் திருவடிகளை விட திருவடி நிலைகளுக்கு உள்ள ஏற்றம் அளப்பரியது. சுவாமி தேசிகன் இதனால் தான் பாதுகை மீது ஆயிரக்கணக்கில் பாடல்களைப் பாடியுள்ளார். திருவடி சம்பந்தம் பெற திருவடிநிலைகளான திருப்பாதுகைகளைத் தஞ்சமடைவது பக்தர்களுக்கு உகந்தது. இராமரே இல்லை என்றாலும் பரதம் திருவடிகளைக் கொண்டுபோய் இராமருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அந்த திருவடிகளுக்குக் கொடுத்து அரசாளவில்லையா? இதைத்தான் இந்த சடாரி நமக்கு உபதேசிக்கிறது. சரணாகதி மார்க்கத்திற்கு அணிகலனாக அமைவது இந்த பாதுகைகள் – திருவடிகளே ஆகும். பக்தியை விட சரணாகதி தான் சிறந்தது. இறைவனைச் சரணடைய வேண்டும். அதற்கு எளிய வழி சரணாகதி தான். பரதன் இராமபிரானின் திருவடிநிலைகளைத் தஞ்சமென்று கருதியதைப் போல நாம் இங்கே உள்ள இந்த திருவடிகளைத் தஞ்சமென்று கருதவேண்டும். பிராட்டியும் இறைவனும் அடியவர்களை மறந்தாலும் மறக்கலாம். ஆனால் இந்த திருவடி உங்களை மறக்காது. எம்பெருமான் உங்களைக் கைவிட்டாலும் திருவடிகள் சரணடைந்தவர்களைக் கைவிடாது. "திண்கழல்கள்" இவை.
    பகவத் கைங்கர்யத்தை விட பக்தனுக்கு கைங்கர்யம் செய்வதிலே ஈடுஇணையற்றது இந்த பாதுகைகள் – திருவடிகள். திருவடிகளின் திருவருளுக்கு ஒப்பில்லாத உறுதுணை இந்த திருவடி நிலைகளே ஆகும்.
    பசு தான் பால் கொடுக்கிறது. ஆனால் காலில் இருந்து பால் கிடைக்குமா? வாலிலிருந்து பால் கிடைக்குமா? காம்பிலிருந்து தான் கிடைக்கும். அதுபோல இறைவன் திருவுருவம் பல கோவில்களில் இருந்தாலும் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமெனில் அந்த அர்ச்சாவதார மூர்த்திகளை வழிபடும் யதிகள் – மடாதிபதிகள் மூலமாகத் தான் விரைவில் பெறமுடியும். அதுமாதிரி திருவரங்கனின் அனுக்கிரகம் வேண்டுமா? திருவரங்கத்திற்குச் சென்று பெரியபெருமாளைத் தரிசித்து அங்குள்ள சடாரியைத் தலையிலே சூடிக்கொள்ள வேண்டும். பலர் கோவிலுக்குப் போவார்கள். ஆனால் அர்ச்சகர் சடாரியைக் கொண்டு வரும்வரை காத்திருப்பதில்லை. வேலை இருக்கிறது. மிக அவசரமாகப் போகவேண்டும் எனக் கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். சடாரியின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. சரி திருவரங்கத்திற்குச் செல்ல முடியவில்லை. இறைவனின் அருள் பெற வழியே இல்லையா? திருவடிகளை வழிபடுங்கள். திருவருள் கிடைக்கும். உள்ளம் உருகப் பிரார்த்திக்க வேண்டும். மனம் விட்டு கசிந்து கண்ணீர் விட்டு நம் கஷ்டங்களை ஆண்டவனிடம் – திருவடிகளிடம் கூற வேண்டும். இப்படி சில சுலோகங்களை நாம் சில காரியங்களுக்காக மனமுருகி வேண்டினால் இந்தத் திருவடிகள் நீங்கள் வேண்டிய பலனை உங்களுக்குத் தரும். உங்களுக்காக ஆண்டவனிடம் உங்கள் குறையை இந்த திருவடிகள் எடுத்துச் சொல்லி வாதாடும். இறைவன் அருளை உங்களுக்குப் பெற்றுத் தரும். அது தான் திருவடி வழிபாட்டின் மகிமை.
    கோதை ஆண்டாளும் தினம்தினம் மார்கழியில் ஆண்டவனைத் துதித்து நோன்பு முடிவடையும் நேரம் 29ஆம் நாள் கூறுவதைப் பாருங்கள்
    "சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்"


    இறைவனைச் சேவித்ததை முதல் அடியிலே கூறுகிறார்கள். என்ன பலன் வேண்டும் என்று தாமரை அடியைப் பார்த்துத் தான் கேட்கிறார்கள்.


    "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் –உனக்கே நாம் ஆட்செய்வோம் – மற்றை நம் காமங்கள் மாற்றேலேராய் எம்பாவாய்"


    சமீபத்திலே திருமலைக்குச் சென்றிருந்தேன். அப்போது சாலையோரக் கடை ஒன்றில் அரி கவசம் என்று ஒரு சிறு நூலை வாங்கினேன். சென்னை சி.பி.கோவில் தெருவில் உள்ள மதி நிலையத்தால் வெளியிடப்பட்டது அந்த நூல். யார் அதைத் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால் ஏழுமலையானை மிக அழகாகத் துதிக்கும் பாடல்கள் அதிலே இருந்தன. இலக்குமியைப் போற்றித் துதிக்கும் தோத்திரத்தில்,


    உலகம் யாவயும் காத்து அளித்து அழிக்கின்ற ஒருவன்
    இலகு மார்பகத்து இருந்து மெய்யன்புடன் நிற்கும்
    அலகில் பல்லுயிர்க் கணங்களுக்கு அருட்கொடை கொடுக்கும்
    திலக வாணுதல் தெந்திருவடியிணைத் தொழுவாம்


    என்று இருந்தது.
    அதிலேயே திருவேங்கடமாலை என்று ஒரு பாடல் தொகுப்பு இருந்தது. மிக அருமையானது. அதிலே,
    "எமக்கருள் புரிய என வலக்கரம் அபயமாய் எடுத்த பேரழகு போற்றி
    சென்னிமிசை வைத்து யாம் தினம் தினம் தொழுகின்ற சேவடி மலர்கள் போற்றி"
    "பள்ளத்தில் வீழ்கையில் ஆதாரமாய் எதைப் பற்றுவாய் சொல்லு மனமே
    பதறி விழி நீர் பெருகப் பச்சைமால் திருவடி போற்றியே போற்றி மனமே"
    "போரால் இலங்கை பொடி செய்த பாதம் போற்றி போற்றி"
    "மதுர பிருந்தாவனப் புழுதியில் தோய்ந்திடும் மலரடிகள் போற்றி போற்றி"
    ஆதியான் போசியான் வேங்கடத்து எம்பிரான் அடிகளே போற்றி போற்றி"
    "இகபரம் நல்கிடும் நிகரற்ற வேங்கடன் இருபாதம் போற்றி போற்றி"
    "வேண்டுவோர்க்கு அனைத்தும் ஈயும் வித்தகன் மலர்ப்பூம்பாதம் போற்றி போற்றி
    வேங்கட ரமணனான வேணுகோபால்ன் பாதம் போற்றி போற்றி"
    "இச்சைக்கு நல்ல என் பச்சைமால் அண்ணலின் இருபாத தாமரை போற்றி போற்றி"
    "உயர் துளசி மாலைகள் சாத்திடும் கோயிலில் துயர் மாலையோடு வந்தேன்
    சரணமே நீயென்று அரணாக நானும் உன் தாமரைத் தாளில் வீழ்ந்தேன
    சங்கு சக்கரமோடு சாரங்கம் ஏந்திய தேவனே போற்றி போற்றி"
    "கோணல்கள் படமெடுத்தாடும் என் உள்ளத்தைக் கொண்டு நின் பாதம் உற்றேன்
    குளிராடும் திருவடி கொண்டாடு நெஞ்சத்தில் கோபாலா போற்றி போற்றி"
    முத்தாய்ப்பான இறுதிப் பாடலில்,
    நதிகள் எல்லாம் அந்த நாதக் கடலினை நாடியே வருவதுண்டு
    நாலுவகை முகில்களும் கோலமாமலைத் தேடி இளைப்பாற வருவதுண்டு
    அதிரவரு தேர்களும் ஆலயம் வலம் வந்த பின் நிலை சேர்வதுண்டு
    புதிதுபுதிதாக வளர் வேர்களும் நீருள்ள பூமியைத் தொடர்வதுண்டு
    போர்வீரன் அம்புகள் புயலாக இலக்கினைப் போய்த் தாக்க விரைவதுண்டு
    இதயங்கள் வேங்கடத் திருமலை நாடுவதும் இயற்கையின் லீலை அன்றோ
    இக்கணம் பொற்பதம் சிக்கெனப் பற்றுவோம் ஏழுமலை போற்றி போற்றி"
    திருமலை செல்லும் யாரும் அன்னமாச்சாரியாவை அறியாமல் இருக்க முடியாது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ராஜம்பேட் தாலுக்காவில் தலப்பாகா என்ற சிறு கிராமத்தில் கி.பி.1408இல் பிறந்த அவர் ஏறத்தாழ 32000 பாடல்களை திருமலையான் மீது எளிய தெலுங்கில் பாடி உள்ளார். இவற்றைப் படித்து பொருளைப் புரிந்து கொண்டால் வேதம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. கீர்த்தனைகள் தான் அவர் பாடியவை.


    எனக்கு தெலுங்கு தெரியாது. எனவே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.








    ஆழ்வார்கள் மட்டுமா? நாயன்மார்களும் அப்படித்தான் திருவடிகளைப் போற்றுகிறார்கள். திருஞானசம்பந்தர் திருப்பிரமபுரத்தில் பாடிய திருவெழுகூற்றிருக்கையில் மிக அழகாகச் சொல்வார். "ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதும் ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை" என்பார். திருவடிகள் இரண்டினையும் முப்பொழுதும் ஏத்தியவர்களுக்காக கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து தென்திசைக் கடவுள் சனகர் முதலான நால்வருக்கும் அற்புதமான நெறியினைக் காட்டி அருளினார். இதேபோல திருஞானசம்பந்தர் திருவாழ்கொளிபுத்தூர் தலத்தில் உள்ள இறைவனைப் பாடிய பாடல்கள் அனைத்திலுமே திருவடிப் பெருமையைப் பேசுவார்.
    "கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிற்றான் அடி காண்போம்"
    "விரைகமழ் மாமலர் தூவி வரி சடையான் அடி சேர்வோம்"
    "மாமல்ர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்"
    "இனமல்ர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம்"
    "தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன் தாளிணை சார்வோம்"
    "தடமலர் ஆயின தூவித் தலைவன் தாள் நிழல் சார்வோம்"
    "மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்"
    "விரிமலர் ஆயின தூவி விகிர்தன் சேவடி சேர்வோம்"
    தாண்டகம் பாடுவதில் சிறப்பானவர் திருநாவுக்கரசர். அவர் திருவதிகை வீரட்டானத்தில் அமர்ந்திருக்கும் இறைவனைப் போற்றும் போது திருவடிகளைப் பற்றி திருத்தாண்டகம் பாடி உள்ளார்கள். தித்திக்கும் தீந்தமிழில் உள்ள அந்த பாடல்களைக் கேட்டாலே உடல் புல்லரிக்கும்.


    அரவு அணையான் சிந்தித்து அரற்றும் அடி
    அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
    சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
    சார்ந்தார்க்கு எல்லாம் சரணாம் அடி
    பரவுவார் பாவம் பறைக்கும் அடி
    பதினெண் கணங்களும் பாடும் அடி
    திரை விரவு தென்கெடிலநாடன் அடி
    திருவீரட்டானத்து எம் செல்வன் அடி


    கொடுவினையார் என்றும் குறுகா அடி
    குறைந்து அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி
    படு முழவம் பாணி பயிற்றும் அடி
    பதைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி
    கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி
    கடல் வையம் காப்பான் கருதும் அடி
    நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி
    நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி


    வைது எழுவார் காமம் பொய் போகா அடி
    வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி
    கைதொபது நாம் ஏத்திக் காணும் அடி
    கணக்கு வழக்கைக் கடந்த அடி
    நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
    நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி
    தெய்வப் புனல் கெடில நாடன் அடி
    திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி


    சோமனையும் காலனையும் காய்ந்த அடி
    செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி
    மந்திரமும் தந்திரமும் ஆய அடி
    அடியவருக்கு ஆர் அமுதமாய அடி
    பணிபவருக்கு பாங்கு ஆகவல்ல அடி
    பற்று அற்றார் பற்றும் பவள அடி
    மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி
    அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
    முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி
    வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி
    வீரட்டம் காதல் விமலன் அடி


    இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி
    இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
    உரையால் உணரப்படாத அடி
    வரைமாதை வாடாமை வைக்கும் அடி
    வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி


    சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருபுன்கூரில் திருவடிகள் பற்றிப் பாடும் போது மிக அழகாக,


    எந்தை நீ எனை நமன்தமர் நலியில்
    இவன் மற்று என் அடியான் என விலக்கும்
    சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன்


    தாதை தாள் அற எறிந்த சண்டிக்கு உன்
    சடைமிசை மலர் அருள் செயக் கண்டு
    பூத ஆளி நின் பொன்அடி அடைந்தேன்


    குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
    கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்


    நீலமார் கடல்விடந்தனை உண்டு
    கண்டத்தே வைத்த பித்த நீ செய்
    சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்


    இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
    இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
    மயக்கம் இல் புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
    அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை
    அர்ச்சித்தார் பெரும் ஆரருள் கண்டு
    திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்


    பார்த்தனுக்கு அன்று பாசுபதங் கொடுத்து
    அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
    ஆர்த்து வந்து இழியும் புனற்கங்கை
    நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
    தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன்


    மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
    இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
    காவலாளர் என்று ஏவிய பின்னை
    ஒருவன் நீ கரிகாடு அரங்காக
    மணிமுழா முழுக்க அருள் செய்த
    தேவதேவ நின் திருவடி அடைந்தேன்


    இலங்கையர்கோனைத்
    துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
    குறிகொள் பாடலின் இன்இசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த (சந்திரகாசம்)
    செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்.


    பெரியபுராணத்திலே சேக்கிழார் பெருமான்
    கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
    அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
    சிற்பர வியோமமாகும் திருச்சிறம்பலத்துள் நின்று
    பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல்கள் போற்றி போற்றி
    என்று அழகாகக் கூறுவார்


    சமீபத்திலே சரபோஜி மன்னர் காலத்திலே வாழ்ந்தவர் அபிராமி பட்டர். இவர் அபிராமி மீது நூறு பாடல்களை அந்தாதியாகப் பாடி உள்ளார். ஒரு பாட்டின் இறுதியில் வரும் எழுத்து, அசை, சீர், அடி, சொல் இவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்து வரும் பாடலில் முதலாக வைத்துத் தொடுக்கப்படுவது தான் அந்தாதி. எப்படிப்பட்ட நேரத்தில் அந்தாதி பாடி உள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு அமாவாசை நாளன்று சரபோஜி மன்னர் கோவிலுக்கு வருகிறார். பைத்தியக்காரன் போல் இவர் அமர்ந்து இருக்கிறார். இன்று என்ன திதி என்று கேட்கிறார் மன்னர். இன்று பௌர்ணமி என்கிறார் பட்டர். நிலவைக் காட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறார் மன்னர். கீழே நெருப்பு. நெருப்பின் மேல் ஒரு ஊஞ்சல். அதிலே நிற்கிறார் அபிராமிபட்டர். நிலவைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாட்டுகள் பாடுகிறார். 79வது பாடலான விரீக்கே அருளுண்டு என்ற பாடல் பாடும் போது அபிராமி அம்மை தன் கம்மலைக் கழற்றி வீசுகிறாள். அது பூரண நிலவொளியாக வானில் சுடர்விட்டு பிரகாசித்தது. மன்னன் ஓடோடி வந்து பட்டரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அவன் வேண்டுகோளை ஏற்று நூறு பாடல்களைப் பாடுகிறார் அபிராமி பட்டர். அது தான் அபிராமி அந்தாதி. இப்படிப்பட்ட சூழலில் தான் அந்தாதி அமைப்பில் பாடல்களைப் பாடி இருக்கிறார். இந்த அந்தாதிப் பாடல்களிலும் பல பாடல்களில் திருவடிகளைப் போற்றிப் பாடி உள்ளார். இதோ அந்த பாடல்கள்.


    வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே.
    சிவபெருமான் அருந்திய ஆலகால விடத்தைத் தன் தளிர்க் கரத்தால் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கியவள் அன்னை. எனவே தான் கரைமிடற்றான் என சிவபெருமான் அழைக்கப்படுகிறான். நீலகண்டன் என போற்றப்படுகிறான். எல்லாம் அன்னையின் மகிமை. அப்படிப்பட்ட அபிராமி அன்னையின் திருவடி எளியேனது தலையின் மேல் உள்ளது என்கிறார் பட்டர்.
    கண்ணியது உன் புகழ்,
    கற்பது உன் நாமம்
    கநிந்து பத்தி பண்ணியது
    உன் இரு பதாம்புயத்தில்


    தியானிப்பது உன் பெரும் புகழை. உணர்வுடன் ஓதுவது உன் திருப்பெயரை. நெஞ்சம் நெகிழ்ந்து உருகி பக்தியுடன் வழிபட்டது உன் இணைத் திருவடித் தாமரைகளே என்கிறார் பட்டர்.


    சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
    வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே


    என் உள்ளத்திலே இருந்த யான் எனது என்னும் அகந்தையைப் போக்கி என்னை ஆட்கொண்டு அருளிய பொன்னார் திருவடிகளும் ஆகி, கொடிய இயம தர்மன் என்னை நோக்கி என் இறுதிநாளில் வரும்போது, நீங்கள் இருவரும் வெளிப்பட்டு நின்று அவனால் வரும் துன்பத்தைப் போக்கிக் காத்தருள்வாரீர்


    இருபத்திநான்காம் பாடல் திரைப்படப்பாடல் மூலம் நாம் அனைவரும் அறிந்த வரிகள்.


    மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கும் அழகே,
    அணுகாதவருக்குப் பிணியே,
    பிணிக்கு மருந்தே,
    அமரர் பெருவிருந்தே
    பணியேன் ஒருவரை
    நின் பத்மபாதம் பணிந்த பின்னே


    எளிதாகப் பொருள் விளங்கும் வரிகள். என்ன சொல்கிறார் அபிராமி பட்டர்? நின்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கிய பிறகு வேறு ஒருவரையும் நான் வணங்க மாட்டேன் என்று கூறுகிறார்.


    உடைத்தனை வஞ்சப் பிறவியை
    உள்ளம் உருகும் அன்பு படைத்தனை
    பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை
    நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை
    சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே


    அருமையாகச் சொல்லுகிறார். நின் திருவடிகள் இரண்டினையும் வணங்கும் திருத்தொண்டினை எனக்கே தனி உரிமையாக ஒப்படைத்துள்ளாய். என் உள்ளத்து அழுக்கை எல்லாம் நின் அருள் வெள்ளத்தால் கழுவி நீக்கினாய் என்கிறார்.


    நின் புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே
    அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சிந்திக்குமே


    நின்னுடைய புதிய மலர் போன்ற திருவடிகளை இரவிலும் பகலிலும் மறவாமல் இடைவிடாது வழிபடுகின்றவர்களுக்கு, இம்மையில் அழிவு இல்லாத அரச போகமும் மறுமையில் சிவலோகமும் எளிதாகவும் முழுதாகவும் கிடைக்கும் என்கிறார்.


    ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
    பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
    வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட
    நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே


    பலதரப்பட்ட ஆசை என்னும் கடலில் விழுந்து அகப்பட்டு இரக்கம் சிறிதும் இல்லாத இயமதர்மனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு பெரிதும் துன்பப்பட இந்த எளியவனை தங்கள் திருவடி என்னும் மணமிக்க தாமரை மலரை என் தலை மீது தாங்களே முன்வந்து சூட்டி ஆட்கொண்ட அருட்பெருக்கை என்னவென்றுப் போற்றிப் புகழ்வேன்? என்று ஆச்சரியப்படுகிறார்.


    திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
    எங்கட்கு ஒரு தவம் எய்தியவா – எண் இறந்த விண்ணோர் தமக்கும் இந்தத் தவம் எய்துமோ?


    பதினாறு கலைகளில் ஒன்றான பிறைச் சந்திரனின் நறுமணம் கமழ்கின்ற நினது சிறிய திருவடிகளை எந்தத் தகுதியும் இல்லாத எங்கள் தலையிலே சூட்டி வணங்குவதற்கு மானிடர்களாகிய எங்களுக்கும் ஒப்பற்ற ஒரு பெருந்தவப் பயன் உள்ளதே – அளவற்ற தேவர்களுக்குக் கூட இப்படிப்பட்ட பயன் கிடைக்கவில்லையே


    ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு – அந்தகன் பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு


    என்னை அடிமை கொள்வதற்கு உந்தன் திருவடித் தாமரைகள் உள்ளன. இறக்கும்போது இயமதர்மனிடம் இருந்து மீண்டு உய்வதற்கு உன்னுடைய கடைக்கண்ணின் திருநோக்கம் உள்ளது.


    புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
    கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
    நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
    பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதிந்திடவே


    அபிராமி அம்மையும் சிவபெருமானும் ஒன்று சேர்ந்து உமையொருபாகனாக வடிவுகொண்டு இஙகே எழுந்தருளி, நம்மை ஆட்கொள்ளும் காரணத்திற்காக, நம்மைத் தம் அடியார்கள் நடுவே இருக்கச் செய்து, நம்முடைய தலையின் மீது தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பதியும்படி செய்வதற்கு நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்கிறோம் போலும்.




    Continues
Working...
X