நாம மகிமை
பகவானை விட அவன் நாமம் பெரிது. அந்த நாமத்தை சொல்லும் அவன் அடியார்கள் பெரியவர்கள். ஞான மார்க்கத்தை விட உயர்ந்ததும் பல படிகள் எளியதுமாக இருப்பது பகவானின் நாமத்தை சொல்லி கொண்டிருக்கும் பக்தி மார்க்கம்தான் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அதனையொட்டியே பஜன் சம்பிரதாயம் ஏற்பட்டது. துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என பகவானின் நாமத்தைப் பாடிப் பாடிக் களித்தவர்கள் எத்தனை பேர்? நாம மகிமையை, பக்தர்கள் பெருமையைக் கூறும் சம்பவங்கள் தான் எத்தனை, எத்தனை?
புண்டலிகன் எனும் பக்தன், தன் தாய், தந்தையருக்குச் சேவை செய்வதில் சிறந்தவனாயிருக்கிறான். அதன் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு அனுகிரஹிக்க வருகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். அப்போது தனது தாயின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டுச் சேவை செய்து கொண்டிருக்கிறான் புண்டலிகன். ஆகவே அவன், தன்னைக் காண வந்த பாண்டுரங்கனை செங்கலின் மீது சற்று நேரம் நிற்குமாறு பணிக்கிறான். இறைவனும் அதை ஏற்று அவ்வாறே அந்தச் செங்கலின் மீது ஏறி நின்று "விட்டலன்" ஆன பெருமையை விவரிக்க வார்த்தைகள் ஏது? இங்கே பக்தன் பெருமைக்குரியவனா? அல்லது அந்த பக்தனுக்காக அவன் வரும் வரை தனது மனைவியோடு இடுப்பில் கை வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டரிபுர நாயகன் பெருமைக்குரியவனா?
பாண்டுரங்கன்
உண்மையான ஒரு பக்தனைப் பெருமைப்படுத்த இறைவன் தான் எந்த அளவிற்கும் இறங்கி வரத் தயாராக இருக்கிறான் என்பதைத்தான் இந்தச் சம்பவம் நமக்குச் சுட்டுகிறது.
நாம மகிமையைக் கூறும் மற்றுமொரு சம்பவம்.
பகவானுடைய நாமம்தான் திரெளபதியை, மானபங்கத்திலிருந்து காப்பாற்றியது என்பதை நாம் அறிவோம். திரெளபதி மீது மட்டும் கிருஷ்ணனுக்கு ஏன் அத்தனை அன்பு என்பதை அறிய ருக்மணியும், சத்யபாமாவும் ஆவல் கொள்கிறார்கள். ஒரு சமயம் கிருஷ்ணர் அவர்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்பொழுது அங்கே அரண்மனையில் திரெளபதி தலைவாராமல், கலைந்த கூந்தலுடன் அமர்ந்திருக்கிறாள். விருந்தினரை வரவேற்று உபசரித்த அவள், பின் தன் தலையை வாரிவிடும்படி, ருக்மணியிடம் வேண்டிக் கொள்கிறாள். அவளும் அன்போடு திரெளபதியின் தலையை வார முற்படுகிறாள். அவள் வார வார சீப்பானது துடிக்கின்றது. ஏன் என்று பார்த்தால் திரெளபதியின் ஒவ்வொரு தலைமயிரும் கிருஷ்ணன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதைக்கண்ட இருவருக்கும் கிருஷ்ணருக்கு திரௌபதியின் மீது இருக்கும் அன்பிற்கான உண்மைக் காரணம் புரிகிறது.
நாம மகிமையால் முடியாததேது? 'ராம' நாம மகிமையால் அன்றோ ஆஞ்சநேயர் பெரும் கடலைத் தாண்ட முடிந்தது!
பகவானின் நாமத்தைச் சொல்வோம். நமது வாழ்வை புனிதமாக்குவோம் .