Announcement

Collapse
No announcement yet.

பறக்கும் தெய்வம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பறக்கும் தெய்வம்!

    ஜூலை 24 கருடாழ்வார் திருநட்சத்திரம்


    காக்கும் கடவுளான திருமாலுக்கு, விஷ்ணு எனும் திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால், எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். இவருக்குரிய வாகனம் கருடன்; அதனால், இதை, தெய்வீகப் பறவை என்பர்.
    கந்தர்வர்கள் இருவர் தாங்கள் செய்த தவறின் காரணமாக, கஜேந்திரன் என்ற யானையாகவும், கூகு என்ற முதலையாகவும் பிறக்க சாபம் பெற்று, திரிகூடமலை பகுதியில் உள்ள ஆற்றில் கூகுவும், காட்டில் கஜேந்திரனும் வாழ்ந்து வந்தனர்.
    விஷ்ணுவை வழிபாடு செய்தால் தான், சாப விமோசனம் கிடைக்குமென கருதிய யானை, தினமும் ஆற்றில் இறங்கி மலர் பறித்து, விஷ்ணுவுக்கு சமர்ப்பித்தது. அவ்வாறு ஒருமுறை மலர் பறிக்க, ஆற்றில் இறங்கிய யானையின் காலை பிடித்துக் கொண்டது கூகு முதலை. வலி தாளாமல் கதறிய யானை, 'ஆதிமூலமே... இந்த மலரை உனக்கு அர்ப்பணித்து விட்டு இறக்க தயாராக இருக்கிறேன்; என்னைக் காப்பாற்று...' என்று கதறியது.
    இந்த ஓலம், வைகுண்டத்தில் இருந்த விஷ்ணுவின் காதில் விழுந்தது. அப்போது, அருகில் இருந்த கருடன், கணநேரம் கூட தாமதிக்காமல் விஷ்ணுவை ஏற்றி, மின்னல் வேகத்தில் பறந்து ஆற்றை அடைந்தது. கஜேந்திர யானை காப்பாற்றப்பட்டது. கூகு முதலையும், பகவானின் அருட்பார்வையால் முக்தி பெற்றது.
    இதனால் தான், விஷ்ணு கோவில்களுக்குள் நுழையும் போதே, முதலில், கருடன் சன்னிதியை அமைத்தனர். கருடனை வணங்கி அனுமதி பெற்ற பின்தான், விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. கருடனிடம் கோரிக்கை வைத்தால், விஷ்ணுவிடம் அது எடுத்துச் சொல்லப்பட்டு, விரைவில் நிறைவேறும். இவரை, ஆழ்வார்களுக்கு இணையாக, 'கருடாழ்வார்' என சிறப்பித்து சொல்வர். பெரிய திருவடி என்ற சிறப்பு பெயரும் கருடனுக்கு உண்டு.
    இவர் விஷ்ணுவின் பாதங்களை தன் கைகளில் தாங்கியிருக்கும் வகையில், கருடசேவையின் போது அலங்கரிப்பர். பெருமை மிக்க திருமாலின் திருவடிகளைத் தாங்குவதால் இவர், 'பெரிய திருவடி' என சிறப்பிக்கப்படுகிறார்.
    கருட வழிப்பாட்டில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஞாயிற்றுக்கிழமை வணங்கினால் நோய், திருஷ்டி நீங்கும்; திங்கள் - கஷ்டமெல்லாம் விலகும். செவ்வாய் - நிலப்பிரச்னைகள் தீரும். புதன் மற்றும் வியாழன் - கிரக தோஷங்கள் விலகும். வெள்ளி மற்றும் சனி - தீர்க்காயுள், செல்வவளம் கிடைக்கும்.
    கருடனைத் தரிசிக்கும் போது, 'ஹரி' என்றும் 'கிருஷ்ணா' என்றும் விஷ்ணுவின் திருநாமங்களை ஏழு முறை சொல்ல வேண்டும். கருடன் வானில் பறப்பதைப் பார்த்தால், எதிர்காலத்தில் நற்பலன்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
    பெருமாள் கோவில் பிரம்மோற்சவங்களில் கருடசேவைக்கே முக்கியத்துவம் தரப்படும். திருப்பதியில் நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளான கருடசேவையன்று ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
    பறக்கும் தெய்வமான கருட பகவான், ஆடி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் பிறந்த நன்னாளன்று, அவரது அருள் பெற புறப்படுவோமா!


    தி.செல்லப்பா
Working...
X