Announcement

Collapse
No announcement yet.

நவகிரக வழிபாடும் பரிகாரங்களும் அவசியமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவகிரக வழிபாடும் பரிகாரங்களும் அவசியமா?

    நவகிரக வழிபாடும் பரிகாரங்களும் அவசியமா?


    1. கிரக பலன்கள் குறித்த அச்சமும், பரிகார நிமித்தமான கிரக வழிபாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வழிபாடுகள் தேவையாஎன்பது குறித்து சில கோணங்களில் ஆய்வு செய்வோம்.

    2. கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.
    3. பூவுலகில் பிறவி எடுக்கும் ஆன்மாக்களைப் போல் கிரக அதிபதிகளுக்கும் ஆயுட்கால வரையரை உண்டு. கிரக தேவதைகளின் ஆயுள் நிறைவுக்குப் பின் மற்றொரு அதிகாரி ஒவ்வொரு கிரகத்துக்கும் நியமிக்கப் படுவார்.
    4. ஆன்மாக்களின் வினைப் பயனுக்கு ஏற்ப நன்மை தீமைகளை வழங்கும் பொறுப்பு மட்டுமே ஒன்பது கிரகங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது. வழிபாடுகளை ஏற்று, தீய பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் இக்கிரகங்களுக்கு வழங்கப் படவில்லை.
    5. ஆகம விதிகளின் படியே ஆலயங்கள் அமைக்கப் படுகிறது. வைணவ ஆகமங்களில் நவகிரக சந்நிதி கிடையாது. சைவ சமய ஆகமங்களில், கிரகங்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டவை என்று உணர்த்தும் முறையில் நவகிரகங்களுக்கு தனிச்சந்நிதி உள்ளது.
    6. ஒன்பது நவகிரக தலங்களும் அடிப்படையில் சிவத்தலங்களே. இங்கு இறைவனை வழிபடுவதால் மட்டுமே பரிகாரம் கிட்டுமே அன்றி, கிரக வழிபாட்டால் அல்ல என்ற புரிதல் மிக அவசியம்.
    7. கிரகங்களை இறைவனின் அடியவர்கள் என்ற உணர்வுடன் வணங்கினால், அது அடியவர் வழிபாடாக மாறி நற்பலன்களை நல்கும். இறைவனை விடுத்து, கிரகங்களே பலன்களை நல்கி விடும் என்றெண்ணி வழிபட்டால் வழிபாடு வியர்த்தமாகும்.
    8. மேலும், கிரகங்கள் என்றுமே நமக்குத் தீமை புரிவது இல்லை. நாம் சேர்த்து வந்துள்ள கர்ம வினைகளே நமக்கு நன்மை தீமைகளை விளைவிக்கின்றன. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று புறநானூறு பேசுகிறது.
    9. இந்து தர்மம் காட்டும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, எந்தவொரு உயிரினத்துக்கும் தீங்கு இழைக்காமல், இயன்ற அளவில் பிறருக்கு உதவி புரிந்து, இறைவனின் கருணையை மட்டுமே வேண்டி வழிபடுவதே, இந்து தர்ம ஞானிகளும் அருளாளர்களும் காட்டிய நல்வழி.
    அருணகிரிநாதர் அருளிய அற்புத கந்தர் அலங்காரப் பாடல்:
    நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
    கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசர் இரு
    தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் ஷண்முகமும்
    தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
    திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகம் - முதல் பாடல்:
    வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
    சனி பாம்பு இரண்டும் உடனே
    ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே!!!
    சூரிய பகவான் - சனீஸ்வர பகவான் என்று அழைப்பது தவறான வார்த்தைப் பிரயோகம். 'பகவான்' என்ற பதம் தோற்றமும் மறைவும் இல்லாத பரம்பொருளையே குறிக்கும். கிரக பதவி வகித்து, பிறந்து மடியும் கிரக அதிபதிகளான தேவதைகளை 'பகவான்' என்று அழைப்பது ஏற்புடையது அல்ல.


    Source: FB:PSKhanna.
Working...
X