Notice
சிவம் என்கிற சொரூபத்தையும் விஷ்ணு என்கிற சொரூபத்தையும் ஒரே சொரூபமாக பல இடங்களில் சேர்துச் சொல்வதுண்டு.' சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணு, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ: " என்று, இவர் அவரது பிராணன் என்றும் அவர் இவரது பிராணன் என்றும் சொல்வார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள ஒற்றுமையை, வேறுபாடற்ற தன்மையை விளக்க அநேக இடங்களில் இவர்க்ளது நாமாக்களைச் செர்த்துச் சொல்வதைக் கவனிக்கவேண்டும், ஹரிஹரன், சங்கரநாராயணன், ராமலிங்கம், ராமேசுவரன் இப்படி அநேக நாமாக்கள் உண்டு. விஷ்ணுவும் ராமனும் ஒரே அம்சம்தானே? சுவாமிக்கு அந்த ராமனோடு அதிகமாக இருக்கும் உறவை ராமலிங்கம், ராமநாதன், ராமேசுவரன் போன்ற பெயர்கள் காட்டுகிறது.
இந்த ராமேசுவரன் / ராமேசுவரம் என்ற பதத்தைப் பார்த்து தேவதைகளுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. அதாவது இலக்கணத்திலே சந்தேகம் வந்துவிட்டதாம். வியாகரணதிலே தத்புருஷம் என்றொண்டு. அதாவது, 'அரண்மனை மாடு' இதற்கு அரண்மனையின் மாடு என்று அர்த்தம். அதேபோல் ''சிகப்பு மாடு ' என்று சொல்வது சிகப்பான மாடு என்று பொருள்படும். இதை கர்மதாரயம் என்பர். மேலும் ' வடிவேல் ' எனும் சொல்லுக்கு வடிவேலை உடையவன் என்று பொருள். இதை பஹூவ்ரீஹி என்பர். இவ்வாறு மூன்று தொகைகள் உள்ளன. இதில் ராமேசுவரன் எதில் வரும் என்ற சந்தேகம் தேவதைகளுக்கு வந்தது. இராமேசுவரத்தில் உள்ள சுவாமிக்கு ராமேசுவரன் என்று நாமம். ராமேசுவரன் என்பது வியாகரண சாஸ்திரப்படி எந்த சமாஸத்தைச் சேர்ந்தது? என்கிற சந்தேகம் தேவர்களுக்கு வந்தது.
Information
ராஜசேவகன் என்றால் ராஜாவின் சேவகன் என்பது மேற்சொன்ன மொன்று சமாஸத்தில் தத்புருஷம் என்பதாகிறது. ராஜா வேறு, சேவகன் வேறு. ராஜாவுக்குட்பட்டவன் சேவகன். உயர்ந்தவன் ராஜா. அந்த மாதிரி ராமேசுவரன் என்றால் தத்புருஷ சமாஸம? ராமனுடைய ஈசுவரன் என்றால் ராமனுடைய ஈசுவரன் என்று எடுத்துக்கொள்வதா? ஈசுவரன் என்றால் உயர்ந்தவன், எனில், ராமனைவிட உயர்ந்தவனா? ராமனே சர்வலோக சரண்யன் ஆயிற்றே! அவனுக்கு மேலே வேறு ஒருவரைச் சொல்வதா? சிவதனுசை ஒடித்தவன் ராமன், அப்படியிருக்க, ராம்னைவிட உயர்ந்தவன் சிவன் என்று எப்படிச் சொல்வது? இப்படி, தேவர்களுக்குள் அநேகக் குழப்பங்கள்.
ராமேசுவரன் என்ற பதத்திற்கு சமாஸம் கண்டுகொண்டு, ராமன் உசத்தியா ஈசுவரன் உசத்தியா இன்று தீர்மானம் செய்வதற்கு அலைந்த தேவர்களுக்கு, கடைசியில் " ஈசுவரன் வேறே, ராமன் வேறே என்பது இல்லை, रामश्च असौ ईश्वरश्च रामेश्वर:இரண்டும் ஒரே தத்துவந்தான். இரண்டும் ஒரு பரதத்துவந்தான் என்று பிரம்மா சொன்னதாக இதிலிருந்து நமக்குத் தெரிகிறது. இந்த ஒற்றுமையை நாம் அனைவரும் உணரவேண்டும். இந்தத் தத்துவத்தை நாம அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைதல் அரிது"