Announcement

Collapse
No announcement yet.

மனதால் தரிசிப்போம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனதால் தரிசிப்போம்!

    நவ., 26 - திருவண்ணாமலை திருவிழா ஆரம்பம்





    சில கோவில்களை, தரிசித்தால் தான் முக்தி என்பர்; ஆனால், அண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைத்து விடும்.
    ஒருசமயம் திருமாலை விடவும், படைக்கும் கடவுளான தானே பெரியவர் என்ற அகந்தை, பிரம்மாவிற்கு ஏற்பட்டது. அதனால், திருமாலிடம், 'நான் படைப்பதால் தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது; நான் படைப்பை நிறுத்தினால், உமக்கு காக்கும் தொழில் இல்லாமல் போய் விடும்...' என்று கர்வத்துடன் பேசினார். அதற்கு திருமால், 'உன் தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக்கொள்ள முடியவில்லை;அப்படிஇருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும்...' என்றார். இதனால், யார் பெரியவர் என முடிவெடுக்க, இருவரும் சிவனிடம் சென்றனர்.
    சிவனோ, தன் அடி அல்லது முடியை யார் முதலில் கண்டு வருகிறாரோ... அவரே பெரியவர் என்று கூறி, உயர்ந்து நின்றார். திருமால், வராக வடிவம் எடுத்து பூமிக்கடியில் சென்றார். அன்னப்பறவையாக மாறி உயரே பறந்தார் பிரம்மா. இருவராலும் சிவனின் அடியையோ, முடியையோ காணமுடியவில்லை. திருமால், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, தான் சிவனின் முடியைக் கண்டதாக பொய் உரைத்தார். அவர்களிருவருக்கும் நெருப்பு மலையாக காட்சி தந்தார் சிவன்.
    ஆணவமும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத தன்மையும் இருத்தல் கூடாது என்று உபதேசித்த சிவன், பொய் கூறிய பிரம்மாவை வழிபாடுகளில் இருந்து ஒதுக்கி வைத்தார். சிவனே இத்தலத்தில் மலையாய் தங்கி, 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றார். 'அண்ணா' என்றால், பெரிய என்று பொருள். ஆரம்பத்தில் இந்த மலை, நெருப்பு வடிவாய் இருந்து, பின், குளிர்ந்து விட்டது.
    கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தில்தான் இந்த நிகழ்வு நடந்தது. நெருப்பு மலையையே சிவனாக கருதுவதால், திருக்கார்த்திகை அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்தக் காட்சியை காண்பதற்காக தேவர்களும், மகரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று, இத்தலத்திற்கு வருவதாக தல வரலாறு கூறுகிறது.
    திருக்கார்த்திகைக்கு பத்து நாட்கள் முன்னதாக கொடியேற்றம் நடக்கும். இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் அண்ணாமலையாரும், அபிதகுஜாம்பிகையும் தினமும் நகர்வலம் வருவர். திருக்கார்த்திகை அன்று மாலையில், தீபம் ஏற்றப்படும்முன் பஞ்சமூர்த்திகள், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கோவிலில் இருந்து வெளியே வருவர். மலையில் தீபம் ஏற்றியபின், அர்ச்சகர்கள் சுவாமி சன்னிதிக்குள் சென்று, அண்ணாமலையாருக்கு தீபாராதனை காட்டுவர். அதன்பின் பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    அண்ணாமலையை சுற்றி வர, 14 கி.மீ., செல்ல வேண்டும். வழியில் எட்டு திசைகளிலும் எண்திசை அதிபர்கள் வழிபட்ட லிங்கக் கோவில்கள் உள்ளன. அண்ணாமலைக்கு போக முடியவில்லையே, கிரிவலம் வர முடியவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கும். இது தேவையற்றது. ஏனெனில், அண்ணாமலையை நினைத்தாலே பிறப்பற்ற நிலை ஏற்படும். பிறகென்ன, அண்ணாமலையாரையும், அந்தத் தலத்தையும் உங்கள் மனக்கண்களால் தரிசியுங்கள்; அண்ணாமலையார் அருளைப் பெறுங்கள்!


    தி.செல்லப்பா
Working...
X