Announcement

Collapse
No announcement yet.

Saraswathi - Mahaperiyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saraswathi - Mahaperiyavaa

    Courtesy: Sri.GS.Dattatreyan




    "கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்?"



    பெரியவாளின் அருள்வாக்கு-சரஸ்வதி பூஜை


    ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. 'சரத்' காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே 'சாரத' நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)
    காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். 'பண்டிட்' என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு எல்லாம்கூட இப்படிப்பட்ட பண்டிட்கள்தாம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே 'சாரதா பீடம்' என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.
    நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் 'ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே' என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு 'சாரதா மடம்' என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.
    ஆதியிலிருந்தே காஞ்சியில் 'கடிகாஸ்தானம்' என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் 'கடிகை ஏழாயிரவர்' என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் 'பல்லவேந்திரபுரி'யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் "கல்வியில் கரையில்லாத காஞ்சி" என்கிறார்.
    'மூக பஞ்சதீ'யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. 'விமலபடீ' என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். 'சரத் சந்திரன்' என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான 'வித்யை' சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.
    ஸரஸ்வதி பூஜா காலத்தை நினைக்கிறபோது, இந்த தாப சாந்தியைச் சொல்லும்போது, இதற்கு அநுகூலமாக இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. வெளி உலகம் எப்படியிருக்கிறதோ அது நம் மனஸையும் அப்படி ஆக்குகிறது. பல பலவென்று விடிவதைப் பார்த்தால் நமக்கும் ஒரு உற்சாகம் உண்டாகிறது. மப்பும், மந்தாரமும், அழுகைத் தூற்றலாகவும் இருந்தால், நமக்கும் களையே இல்லாமல் என்னவோபோல் துக்கமாயிருக்கிறது. விடிவதற்கு முந்தின ப்ராம்ம முகூர்த்தத்திலும், ஸாயங்கால ஸந்தியிலும் வெளி உலகில் ஒரு சாந்தி பரவியிருப்பதால் அப்போது நமக்கும் மனசு அடங்கி தியானத்தில் உட்காரத் தோன்றுகிறது. வெளியுலகம் இப்படித் தன்மயமாகும்போது, உள்ளத்தையும் தன் மயமாக்கப் பிரயாசை செய்தால், சாதாரணமாக மற்ற சமயங்களில் இருப்பதைவிட சுலபமாக மனசை நிறுத்தி, உள்ளும் புறமும் ஒன்றாகி, சாந்தத்தில் தோய்ந்திருக்க அநுகூலமாயிருக்கிறது. தினந்தோறும் வைகறை சந்தியையில் இப்படி இருப்பதைப் போல், ஒரு வருஷம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட பக்ஷம் முழுவதுமே இப்படி மனோலயத்திற்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது ஸரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம்தான். சீதோஷ்ணம் பரம சுகமாக, ஹிதமாக, வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கிற காலம் இது. சாந்தமான சூரியன், தாவள்யமான சந்திரிகை, வெள்ளை வெளேர் என்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இருக்கிற காலம்.
    இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஒரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கே நம் ஊரைவிட பத்து, பன்னிரண்டு டிகிரிக்குமேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமில்லை என்கிற மாதிரி, வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. நம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்தியப்பிரதேசத்திலும் மான்ஸுன் மழை கொட்டுகிறது. இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுஸாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய்க் குளிரில் நடுங்க வைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது. இந்த சமயத்தில் காச்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமாரி என்று எல்லா ஊர் Weather report -ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிகள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்தது போல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில் இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், அதாவது துவந்தம் போய் எல்லோரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம். ஞானத்தினால் எல்லாம் ஒன்று என்று துவந்தத்தைப் போக்கி வைக்கிற வித்யா அதிதேவதையின் தெளிவான ஸ்வரூபம் போலவே இந்த சீதோஷ்ணம் இருக்கிறது. நம் தேசம் முழுவதும் இப்படி சமசீதோஷ்ண நிலையும், வெண்ணிறமும் சாந்தமும் அமையும்போது, வெளியுலகின் ஹிதத்தால் உள்ளுக்கும் சுலபத்தில் அந்த சமநிலையை உண்டாக்கிக்கொள்ள வசதியாக இருக்கிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட குண விசேஷமே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனமும் வருவதால். சகல ஜனங்களும் இதை எல்லாம் உணர்ந்து பூஜித்தால் ஞானமும் தெளிவும் பெற முடியும்.
    ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.
    ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. 'வித்யை' என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்.
    கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்?
    அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, 'நாம் வித்வான்' என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும். இதனால்தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: வித்யா விநய ஸம்பன்னே!
    இப்போது படிப்பு எல்லாம் லௌகிகத்துக்காகத்தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகளைத் தெரிந்து கொண்டு வெகுசாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக்கொண்டு பெருமைப்படுகிறோம். இப்போதைய படிப்பினால் வருகிற விஷய அறிவை ஞானம் என்று சொல்வதானால், அஞ்ஞானம்தான் மோக்ஷ சாதனம் என்று கூடச் சொல்லி விடுவேன். ஞானம் ஒன்றே மோக்ஷ உபாயம் என்று சொல்ல வந்த அத்வைதத்துக்கு நான் பிரதிநிதி என்று பேர். ஆனால், இப்போது படித்தவர்களின் 'நாகரீக' தேசங்களில் நடக்கிற அகாரியங்களைப் பார்க்கிறபோது, எதுவுமே தெரியாமல், எழுத்தறிவே இல்லாமல், பரம அஞ்ஞானிகளாக இருந்துகொண்டு, பகவான் என்கிற ஒருத்தனை நம்பிப் பாவத்துக்குப் பயந்து, கள்ளங் கபடமில்லாமல் இருக்கிற ஆதிவாசிகளும் காட்டுக் குடிகளும்தான் ஈஸ்வரப் பிரசாதம் பெறுபவர்கள் என்றே தோன்றுகிறது. நாம்கூட அப்படி ஆகிவிட்டால் தேவலை போலிருக்கிறது.
    ஆனால், இப்போதுள்ள வித்யைகளும் போதனை முறைகளும் வெற்று லௌகிகத்துக்கும் அகங்காரத்துக்குமே ஆஸ்பதமாக இருக்கின்றன என்பதால், ஆத்மார்த்தமான சாஸ்திரங்களை, கலைகளை, வித்யைகளைக் குறைவாகப் பேசக் கூடாதுதான். இவை எல்லாம் அகங்காரத்தைக் கரைத்து, லோக க்ஷேமத்தையும் ஆத்ம க்ஷேமத்தையும் தரவே நம் தேசத்தில் ஏற்பட்டிருந்தன. இப்போதும்கூடப் புதிது புதிதாக விருத்தியாகியிருக்கிற வித்யைகள், டெக்னாலஜி ஆகியவற்றால் எத்தனையோ லோக க்ஷேமத்தை உண்டாக்கலாம். நல்லறிவை வளர்த்துக் கொள்ளலாம். எல்லா 'எலிமென்டு'களுக்கும் மூலமான 'எனர்ஜி' ஒன்றேதான் என்று கண்டுபிடித்து விட்ட அடாமிக் (அணு) ஸயன்ஸிலேயே நன்றாக ஊறினால், அதுவேகூட ஆத்மிக அத்வைதத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். ஒயாமல் ஆசை வாய்ப்பட்டுப் பறப்பாகப் பறந்து கொண்டிராமல் ஆன்றோர்கள் போட்டுத் தந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொண்டு, வித்யைகளை அப்பியசித்து வந்தால், இன்றும் அவை புறத்துக்கு நல்லது செய்யும்; உள்ளுக்கு ஞானமும் தரும்.
    மருந்தோடு பத்தியமும் முக்கியம். வித்யை என்கிற மருந்துக்கு அடக்கம், விநயம் என்கிற பத்தியம் அவசியம். இப்போது அது இல்லாததால் மருந்தே விஷமாகியிருக்கிறது. ஆனால், அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும். அதனால்தான் ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி இரண்டு பேரையுமே வித்யா தேவதைகளாகவும் வைத்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, சகல கலாவாணி, வித்யா ஸ்வரூபிணி என்று எல்லோருமே அறிவீர்கள். 'சர்வ வித்யைகளுக்கும் பிரபு (ஈசானன்)' என்றே வேதம் ஸதாசிவனான தக்ஷிணாமூர்த்தியைச் சொல்லுகிறது. பேச்சு, காரியம் அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையிலிருக்கிற தக்ஷிணாமூர்த்தியே 'மேதா தக்ஷிணாமூர்த்தி'யாகிப் பெரிய புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வ சக்தி எல்லாம் தருகிறார். ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிறார்கள். அதற்குப் பேரே 'கலை'. 'கலை' என்றால் எது வளருகிறதோ அது. வித்யைக்கு முடிவே இல்லை. 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு' என்று ஸரஸ்வதியே விநயத்தோடு நினைக்கிறாளாம். இவள் தலையில் வைத்திருப்பது மூன்றாம் பிறை. அது பூரண சந்திரனாக வளர வேண்டும்.
    ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.
    இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன
Working...
X