Announcement

Collapse
No announcement yet.

Bhakti-Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhakti-Periyavaa

    Courtesy: Sri.Anand Vasudevan


    தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)


    பக்தி


    இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.


    சிருஷ்டியில் பலவிதமான சக்திகள் பல்வேறு வஸ்துக்களிடம் வியாபித்திருக்கின்றன. இயற்கையைப் பார்த்தால் ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம்; அதையும்விட இன்னொன்றுக்கு அதிகம் சக்தி; என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.


    பௌதிகமான நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கனம் தூக்குகிறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்குகிறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதற்கும் அதிக கனத்தைத் தூக்க முடிகிறது.


    புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக அறிவு இருக்கிறது. புழுவை விட எரும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுக்கு அதிக அறிவு. அவற்றைவிட மனிதனுக்கு புத்தி அதிகம்.


    இந்த ரீதியில் யோசித்து ஆராய்ந்து பார்த்தால் இந்த பௌதிக பலம், புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.


    அதைத்தான் ஸ்வாமி என்கிறோம்.


    நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு கூட்டைக் கட்டுகிறது. இந்த உலகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் ஸ்வாமி.


    ஒன்றிலிருந்து ஒன்றாக சக்தி அதிகமாகிக் கொண்டே போகிற இயற்கையிலிருந்து இப்படி ஈசுவர தத்துவத்துக்குப் போகிறோம்.


    ஒன்றுக்கு ஒன்று மாறாக pair of opposites என்கிற எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பார்க்கிறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலம் ஒன்று இருக்கிறது. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒன்று இருக்கிறது. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல் கூரான முட்கள் இருக்கின்றன. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கிறது. அன்புக்கு எதிராக துவேஷம் இருக்கிறது. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது. இந்த ரீதியில் ஆலோசனை செய்தால் மனித மனசுக்கு மாற்றாகவும் ஒன்று இருக்கத்தானே வேண்டும்? மனித மனஸின் சுபாவம் என்ன? ஆசாபாசங்களில் முழுகிச் சஞ்சலித்துக்கொண்டே இருப்பது; திருப்தியே இல்லாமல் தவிப்பது. இதற்கு மாறாக ஆசாபாசமின்றி, சஞ்சலமே இன்றி, சாசுவத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.


    இயற்கையில் சகலமும் மாறிக்கொண்டிருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையில் எதுவுமே சாசுவதம் இல்லை. இதற்கு எதிராக மாறாமலே ஒன்று இருக்கத்தான் வேண்டும். அது தான் ஸ்வாமி என்பது.


    இயற்கையில் படிப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று என்றும், அதே இயற்கையில் எந்த ஒன்றுக்கும் மாறுதல் உண்டு என்றும் அம்பாள் காட்டி, இந்த இரண்டாலும் கடைசியில் பரமாத்ம தத்துவம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று உணர்த்துகிறாள்.


    அது இருந்து விட்டுப்போகட்டுமே. அதை எதற்கு உபாஸிக்க வேண்டும் என்று கேட்கலாம். நாம் எப்படி இருக்கிறோம்? எப்போதும் எல்லையில்லாத தேவைகளோடு (wants) இருக்கிறோம். பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கிறோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார். நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை; தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள்; அவர் நிறைந்தவர். நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகளைப் போக்குகிறார்.


    குறை இருக்கிறது என்றால் எதுவோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அடியோடு தேவையே இல்லாவிட்டால் அப்படியே நிறைந்து விடலாம். நம் குறைகளை நிவிருத்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவும் தேவையே இல்லை என்ற நிறைவையும் தந்துவிடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, அதாகவே ஆகியிருப்போம்.
Working...
X