Sri Saraswathi
இமயமலைச் சாரலில் அமர்ந்து வேதங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தார் வியாசர். அப்போது, சிறுமியான சரஸ்வதி தன் தோழிகளுடன் கலகலவென்று பேசி விளையாடிக் கொண்டிருந்தாள். சரஸ்வதியின் சப்தம் வியாசருக்கு இடையூறாக இருந்தது. பலமுறை சொல்லியும் கேட்காததால் கோபமுற்ற வியாசர், “நீ பூமிக்குள் மறைந்துபோவாய்’ என்று சாபமிட்டார். பயந்துபோன சரஸ்வதி, வியாசரை வணங்கி சாபவிமோசனம் கேட்டாள். கைகூப்பிய நிலையில் தன்முன் நிற்கும் அவள்மீது இரக்கப்பட்டு, “நீ பூமிக்குள் மறைந்தாலும் நதியாக மாறி மக்களை புனிதம் பெறச்செய்வாய். அதேசமயம் நீ தேவரூபமாக மாறி கல்விச் செல்வத்தையும் அளிப்பாய். நானே உன்னை வணங்கும் காலம் வரும். என் சாபம் உனக்கு வரம்!’ என்று அருளினார்.
பூமிக்குள் நதியாக மாறியதால் சரஸ்வதி நதியானாள். இந்த நதிதான் அலகாபாத் திரிவேணியில் கங்கை, யமுனை நதிகள் கூடுமிடத்தில் அந்தர்வாகினியாக வந்து சங்கமிக்கிறாள் என்கிறது புராணம்.
அறிவியல் கூற்றின்படி, சரஸ்வதி நதியானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்திலும் சில பழமை வாய்ந்த நூல்களிலும் சிந்து நதியைப்போன்று சரஸ்வதி நதியும் பரந்து விரிந்து ஓடியதாக சான்றுகள் உள்ளன. கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் முதல் 1,800 கிலோமீட்டர் வரையிலான நீளத்தையும், மிகுந்த அகலத்தையும், ஆழத்தையும் கொண்ட நதியென்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 300-க்கும் கி.மு. 400-க்கும் இடைப்பட்ட காலத்தில், பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இமயமலையின் அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. அதனால் சரஸ்வதியின் உற்பத்தி தடைப்பட்டு மறைந்துவிட்டது. இதன் காரணமாகவே வளமான பூமியான ராஜஸ்தானில் பாலைவனம் தோன்றியது என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இமயமலை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பனியில் நிறைந்துள்ளது. இங்குள்ள பந்தர்பூஞ்ச் பகுதியில்தான் சரஸ்வதி நதி பிறந்தது. இது வற்றாத நதியாக ஓடியதாக வரலாறு கூறுகிறது.
ஜோத்பூரிலுள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையம் சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியில் வெற்றிகண்டுள்ளது. ராஜஸ்தான் பாலைவனத்தில் பதின்மூன்று இடங்களில் தோண்டப் பட்டதாகவும், அதில் 35 முதல் 40 மீட்டர் ஆழத்தில் தண்ணீர்ப் படுகை இருப்பதாகவும், அந்தத் தண்ணீர் பரிசுத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ அறிக்கை.
பராசக்தியின் அருளால் தோன்றியவள் சரஸ்வதி என்று சொல்லப்பட்டாலும், பிரம்மனால் படைக்கப்பட்டவள் என்றும் புராணம் கூறுகிறது.
சரஸ்வதி அவதரித்தது குறித்து பலவாறு சொல்லப்பட்டாலும், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி அவதரித்தாள் என்ற கருத்து நிலவுகிறது. எனவே நவராத்திரி காலங்களில் மூல நட்சத்திரத்தன்று சரஸ்வதி பூஜையைத் தொடங்கி மூன்று நாட்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. விஜயதசமியன்று புதிய கல்வி மற்றும் கலை சம்பந்தமான பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பது விதியாகும்.
வேதங்களில் புகழப்படும் பல தெய்வங்களில் முக்கியமான தெய்வம் சரஸ்வதி. அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும்; யாகம் நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப்படுகிறாள்.
நதி ரூபமாக அந்தர்வாகினியாக இருக்கும்போது மக்களைப் புனிதப்படுத்தும் சரஸ்வதி, தேவரூபத்தில் கலைவாணியாக மாறி தனி சக்தி பெற்று, பிரம்மனுக்கு மனைவியாகவும் ஆனாள் என்றும் புராணம் கூறுகிறது.
http://worldkovil.com/?page_id=988