Announcement

Collapse
No announcement yet.

ஆனந்தம் இன்று ஆரம்பம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆனந்தம் இன்று ஆரம்பம்!

    2007 பிப்ரவரியில், காஞ்சிபுரம் மகாபெரியவர் பிருந்தாவனத்தில் ஒரு வயதான சுமங்கலி அழுது கொண்டிருந்தார். அதைக் கண்ட சிலர், அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.
    ""அழுகிறேனா! இது ஆனந்தக்கண்ணீர்,'' என்று பதிலளித்தார் அம்மையார். மலர்ந்த முகத்துடன் அவர் பேச ஆரம்பித்தார்.
    ""எனது ஊர் திருவையாறு. 70 வயதாகிறது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது (1942), மகாபெரியவர் திருவையாறு வந்திருந்தார். அங்குள்ள ஐயாறப்பர் கோயிலுக்குச் சென்று சுவாமியைத் தரிசித்த பிறகு, பல்லக்கில் ஏறி தஞ்சாவூருக்கு போய்க் கொண்டிருந்தார். சிறுமியான நானும் பல்லக்கின் பின்னால் சென்றேன். என்னை மகாபெரியவர் கவனித்து விட்டார்.
    சீடர் ஒருவரை அழைத்து,""என் பின்னால் ஒரு சிறுமி வருகிறாள். அவளது தாய், தகப்பனார் யாரும் உடன் வருவது போல் தெரியவில்லை. என்ன ஏதென்று விசாரி,'' என்று சொல்லியிருக்கிறார். அப்போது, பல்லக்கு திருவையாறை விட்டு ஐந்தாறு கி.மீ., கடந்திருந்தது. சீடரும் என்னிடம் வந்து விசாரித்தார்.
    ""ஏம்மா...தனியாவே வர்றே! அப்பா, அம்மாவை எங்கே?''
    நான் தனியாக வருவதை அவரிடம் தெரிவித்தேன்.
    விஷயம் பெரியவரிடம் தெரிவிக்கப்பட்டது.
    என்னை அவர் அழைத்தார்.
    ""உன் பேர் என்னம்மா!'' என்று வாஞ்சையோடு கேட்டார்.
    ""ராஜலட்சுமி'' என் மழலைக்குரல் கேட்ட அவர், ""நான் தஞ்சாவூர் போறேன். உன்னால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. இப்போது ஊருக்குப் போ. நாளை பெரியவர்களுடன் தஞ்சாவூர் வா,'' என்றார்கள். அத்துடன், ஒருவரை அழைத்து, "இந்தச் சிறுமியை பத்திரமாக அவள் வீட்டில் விட்டு வா' என்று உத்தரவும் பிறப்பித்தார்.
    மறுநாள் பெற்றோருடன் தஞ்சை சென்றேன். பெரியவர் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்து எனக்கு தீர்த்தம் கொடுத்த பெரியவர், பாவாடை, சட்டை, கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ், மஞ்சள்கிழங்கு தந்து ஆசிர்வதித்தார்.
    அன்று முதல் எனக்கு குரு, தெய்வம் எல்லாம் அவர் தான். எனக்கு இரண்டு மகன்கள். நல்ல வேலையில் உள்ளார்கள். சொந்த வீடு, நிறைந்த வசதியுடன் உள்ளேன். சமீபத்தில் என் இரண்டாவது பையன், வீட்டுமனை ஒன்றை வாங்க இருந்தான். அட்வான்சாக ஒரு லட்சம் கேட்டான்.
    ""எது செய்தாலும் மகாபெரியவரின் அனுமதியின்றி செய்யமாட்டேன். கேட்டுப் பார்த்து தருகிறேன்,'' என்றேன்.
    அன்று அவரது படத்தின் முன் நின்று உத்தரவு கேட்டேன். என்ன அதிசயம் நிகழ்ந்ததென்று எனக்கு தெரியாது...படம் அப்படியும்
    இப்படியுமாக ஆடியது. மகாபெரியவர் வேண்டாம் என சொல்கிறார் எனத் தோன்றியது. நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். பையனுக்கு அதில் மிகவும் வருத்தம்.
    பிடிவாதமாக அட்வான்ஸை எடுத்துச் சென்ற போது, அருகில் இருந்த சிலர் அவனை தடுத்து நிறுத்தி, ""உங்களுக்கு கொடுப்பதாக சொன்ன இடத்தை ஏற்கனவே சிலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றி பணம் வாங்கி விட்டார்கள். அவர்களை போலீஸ் கைது செய்து விட்டது,'' என்று சொல்லி இருக்கிறார்கள்.
    பையன் அதிர்ந்து விட்டான்.
    "மகாபெரியவரின் உத்தரவையும் மீறிச் சென்றேன். பணத்தைக் கொடுத்திருந்தால் பெருத்த நஷ்டத்துக்கு உங்களை ஆளாக்கியிருப்பேன்,'' என்று சொல்லி அழுதான்.
    என்னை நஷ்டத்தில் இருந்து காத்த தெய்வம் இவர். அதற்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன். இப்போது சொல்லுங்கள்!
    மகாபெரியவரை நம்பிக்கையுடன் வணங்கினால் எல்லார் வாழ்விலும் ஆனந்தம் தானே!'' என்றார்.
    "ஆம்...ஆனந்தம் இன்று ஆரம்பம்' என்ற பதில் எல்லார் முகத்திலும் பளிச்சிட்டது.

    Sourceinamalar
Working...
X