Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya 6,7,8 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 8 அத்தியாயம் 6.- அம்ருத மதனம் 1


    அப்போது ஹரியானவர் அவர்களிடையே தோன்றி பாற்கடலைக் கடைந்து அமுதத்தை அடையும்படியும் அதை உண்டவர்க்கு மரண பயம் இல்லை என்றும் கூறினார்.


    மேலும் எல்லாவிதமான புல் பூண்டு செடிகொடிகளையும் பாற்கடலில் போட்டு மந்தரமலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்கள் உதவியுடன் கடலிலிருந்து தோன்றும் ஆலஹாலத்தால் பயமோ அல்லது மற்ற பொருள்களிடம் ஆசையோ வைக்காமல் அமிர்தம் வரும் வரையில் கடையுமாறு கூறி மறைந்தார்.


    தேவர்கள் மந்தர மலையைத் தூக்க முயற்சித்து அதன் கனத்தால் முடியாமல் கீழே போட அதனால் பலர் நசுக்கப்பட்டு இறந்தனர்.


    அப்போது பகவான் அங்கு வந்து இறந்தவர்களை எழச்செய்து ஒரு கையால் எளிதாக மலையைத் தூக்கி கருடன் மேல் வைத்தார். கருடன் பாற்கடலுக்குச்சென்று அந்த மலையை அங்கு வைத்துச் சென்றான்.


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8 அத்தியாயம் 7- அம்ருதமதனம் -2


    தேவர்கள் வாசுகியிடம் அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி கயிறாக இருக்க சம்மதிக்க வைத்து அசுரர்களுடன் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது பகவானும் தேவர்களுடன் வாசுகியின் தலைப் பக்கம் நின்று கடைய ஆரம்பித்ததைப் பார்த்த அசுரர்கள் வால் பக்கம் நிற்பது தங்களுக்கு கௌரவக் குறைவு எனக்கூற அதை ஹரியானவர் புன்முறுவலுடன் ஏற்று தேவர்களுடன் வாலைப் பிடித்தார். ஏனென்றால் கடையும் வலி தாங்காமல் வாசுகியின் வாயிலிருந்து வரும் விஷக்காற்றை தேவர்களால் தாங்க இயலாது என்று அவர் போட்ட திட்டமே அது.


    அவர்கள் வேகமாகக் கடைய ஆரம்பித்தபோது மந்தர மலை அடியில் தாங்க ஒன்றும் இல்லாததல முழுகத் தொடங்கிற்று. அப்போது பகவான் ஆமை உரு எடுத்து அதைத் தன் முதுகில் தாங்கினார். அதுதான் கூர்மாவதாரம்.அதை சுகர் பின்வருமாறு வர்ணிக்கிறார்.


    ததார ப்ருஷ்டேன ஸ லக்ஷ யோஜனா
    ப்ரஸ்தாரிணா த்வீபம் இவாபரோ மஹான்
    அதாவது பகவான் ஆமை உருவம் எடுத்த போது அவர் முதுகு ஒரு லக்ஷ யோஜனை விஸ்தீர்ணத்துடன் ஒரு தீவைப்போல் இருந்ததாம்.


    வேதாந்த தேசிகர் தசாவதார ஸ்தோத்திரத்தில் கூர்மாவதாரத்தைப் பற்றிக் கூறுகையில்
    கண்டூயனை: அத்ரிணா நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷ: என்கிறார்
    இதன பொருள், பரமாத்மா ஆமை வடிவத்தில் மலை முதுகில் சொறிந்து கொடுக்க சுகமாகத் தூங்கினாராம்.


    அதுமட்டுமா ! பகவான் தேவர்களுக்காக என்னென்னதான் செய்யவில்லை! கடையும்போது சிரமம் தெரியாதிருக்க அவர்கள் உடலில் புகுந்து வலிவூட்டி வாசுகியின் உடலில் வலி தெரியாமல் செய்து, மந்தர மலையின் மேல் பாகத்தில் கையை வைத்து அதைப் பாதுகாத்து, அவர்கள் நீண்ட நேரம் கடிந்தும் பலன் இல்லாமல் போகவே தானும் முன்னின்று கடைந்தார்.
    இதைப்பற்றி யாமுனாசார்யர் ஒரு ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார. அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


    பாற்கடலைக் கடையும்போது அதிலிருந்த ஜீவராசிகள் பயத்தால் வெளிவந்தனவாம். அடுத்து கொடிய ஹாலாஹல விஷம் கிளம்பிற்று. அது எல்லா திசையிலும் பரவ அதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று பிரார்த்தித்தனர். அவர் அதை அப்படியே விழுங்கி விட்டார். அது அவர் கழுத்தில் நீலநிறமாகத் தங்கித் தன் வீரியத்தைக் காட்டிவிட்டது. அதுவும் அவருக்கு ஓர் ஆபரணமாகவே திகழ்ந்து நீலகண்டன் என்ற பெயரையும் தந்தது..
    இதைப் பற்றி சங்கரர் சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்,


    கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
    ந சம்போ: தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா
    கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவனுக்கு காலம் முடியவில்லை ஏனென்றால் அன்னையே அது உன் தாடங்கத்தின் மகிமை.


    அவர் விஷத்தைப் பருகும்போது சிந்திய சிறு பகுதியை தேளும் பாம்பும், விஷ மூலிகைகளும் மற்ற விஷ ஜந்துக்களும் க்ரஹித்துக் கொண்டன.


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8 அத்தியாயம் 8- லக்ஷ்மி , அம்ருதம் , மோகினி


    பரமசிவன் விஷத்தை உண்டபின் தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். முதலில் அதிலிருந்து காமதேனு புறப்பட அதை ரிஷிகள் யக்ஞத்திற்காக எடுத்துக் கொண்டனர்.


    பின்னர் சந்திரன் போல் வெண்மையான உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை தோன்றியது. பிறகு ஐராவதம் என்ற யானை வெளிப்பட்டது. அதன் பின் தாமரைபோல் சிவந்த கௌஸ்துபம் உண்டாயிற்று. அதை ஹரி தனக்கு ஆபரணமாக எடுத்துக் கொண்டார்.


    பிறகு தேவலோகத்திற்கு அணியாக விளங்கும் பாரிஜாதம் தோன்றிற்று. அதன் பின் அழகிய ஆபரணங்களுடனும் ஆடைகளுடனும் கூடிய அப்சர்சகள் உண்டானார்கள். அடுத்து மின்னல் ஒளியுடன் பகவான் விஷ்ணுவிடம் மனம் வைத்தவளான ஸ்ரீதேவி தோன்றினாள்.


    அவளுடைய சௌந்தர்யத்தினாலும் மற்ற குணங்களினாலும் எல்லோருடைய மனதையும் கவர்ந்தவளான அவளுக்கு தங்கக் குடங்களால் அபிஷேகம் செய்து ஒவ்வொருவரும் அவளுக்கு அணிகலன்களையும் , ஹாரங்களையும், பட்டாடைகளையும் அளித்தனர்.


    கையில் தாமரை மாலையுடன் தான் உகந்து வசிக்கக் கூடிய இடத்தையும் தக்க நாயகனியும் தேடியவளாய், பார்த்த எவரிடமும் குறை இல்லாத நற்குணங்களைக் காணவில்லை.


    துர்வாசர் முதலிய முனிவர்களிடம் தவம் இருந்தாலும் கோபம் இருக்கிறது. ஞானம் உள்ள சுக்ரன் முதலியவர்கள் பற்றை ஒழிக்காதவர்கள். சந்திரன் முதலிய தேவர்கள் காமத்தை ஜெயித்தாரில்லை. இந்திரன் தேவர்களின் தலைவனாயினும் இடர் வந்திடில் பிரம்மா விஷ்ணு சிவன் இவர்களை ஆச்ரயிக்கிறான். இந்தக் குறை ஒன்றும் இல்லாதவர் சிவன் ஆனால் அவர் ச்மசானபூமியில் வசிக்கிறார்.


    இவ்விதம் யோசித்த ஸ்ரீதேவி நாராயணன் ஒருவரைத் தவிர வேறு யாரும் குறையற்றவர் இல்லை எனக் கருதினாள். . ஆனால் அவரோ அவளை விரும்புவதாகவே தெரியவில்லை. . எதையும் வேண்டாதவராக இருந்தார்.


    இவ்விதம் ஆராய்ந்த லக்ஷ்மீ தேவி மாறுபடாத நற்குணங்களில் சிறந்தவரும், பிரக்ருதியின் குணங்களுக்கப்பாற்பட்டவரும், எதிலும் அபேக்ஷையில்லாதவருமான முகுந்தனையே தனக்குப் பிடித்தவராகவும் சிறந்தவராகவும் வரித்தாள்.


    மூவுலகுக்கும் பிதாவான பகவான் லோக் மாதாவும் சகல ஐஸ்வர்யங்களுக்கும் உறைவிடமானவளும் ஆன அந்த ஸ்ரீதேவிக்குத் தன் மார்பை வாசஸ்தலமாக அளித்தார். ஸ்ரீதேவியும் அங்கிருந்துகொண்டு மூவுலகங்களையும் தன் கருணை மிகுந்த பார்வையால் ரக்ஷித்தாள்.


    இதை யாமுனாசார்யர் என்னும் ஆளவந்தார் ஸ்தோத்திரத்தினத்தில் அழகாகக் கூறுகிறார்.
    சகர்த்த யஸ்யா: பவனம் புஜாந்தரம் தவ ப்ரியம் தாம யதீய ஜன்மபூ:
    ஜகத்ஸமஸ்தம் யதபாங்கஸம்ச்ரயம் யதர்த்தமம்போதிரமந்தி அபந்தி ச


    இதன் பொருள்: எவளுக்குத் தன் மார்பையே வாஸச்தலமாக்கினாரோ, எவளுடைய பிறந்த வீடான பாற்கடலையே தமக்குகந்த இருப்பிடமாகக் கொண்டாரோ, எவளுக்காக கடலைக் கடைந்தும் கடலுக்கு அணை கட்டியும் பாடுபட்டீரோ அவளுடைய கடைக்கண் பார்வையால் உலகம் அனைத்தும் விளங்குகிறது.


    கருடன் மேல் மந்தர மலையை ஏற்றி ஆமையின் உருவில் அதை சுமந்து மேலும் தன் கையினால் அதன் மேல் அழுத்திக்கொண்டு, அதைக் கடைபவர்களுக்கு சக்தியைக் கொடுத்து , வாசுகியின் களைப்பையும் தீர்த்து, அம்ருதத்தை பங்கிட்டு அளித்தான். அவன் என்னதான் செய்யவில்லை தேவர்களுக்கு? இதன் மூலம் நாம் அவனை அடைய முயலும் ஒவ்வொரு அடியிலும் அவன் அருள் இன்றி இயலாது என்று தெரிகிறது.


    யாமுனாசார்யர் வேடிக்கையாகச் சொல்லுகிறார் பகவான் இவ்வளவு கஷ்டப்பட்டது எதற்காக என்றால் அது லஷ்மியை அடையவே என்று. அதைப் படித்ததும் எனக்குத் தோன்றியது என்னவென்றால்,


    மகாலக்ஷ்மியை அடையவே இவ்வளவு சிரமம் மேற்கொண்டான் என்றால் அது சுயநலம் அல்ல. அவனுடைய கருணையே. உலகத்துக்கெல்லாம் கருணை காட்டி ஆட்கொள்ளும் தாயாரைத் தன் ஹ்ருதயத்தில் வைக்கவே இவ்வாறு செய்தான். ஏனென்றால் அவள் இருக்கும் ஹ்ருதயத்தில் கருணை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது அல்லவா?


    தேவர் அசுரர் என்பது நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களுமே. இவைகளுக்குள் எப்போதும் யுத்தம் தான். இறைவன் அருளால் சுத்த ஞானம் ஆகிய அம்ருதத்தைப் பெற்றால் மட்டுமே நல்லெண்ணங்கள் வெற்றி பெறும்.


    இதன் பிறகு தோன்றிய மதியை மயக்கும் மதுவின் உருவான வாருணீ என்னும் தேவியை ஹரியின் அனுமதியுடன் அசுரர்கள் ஸ்வீகரித்தனர்.


    கடைசியாக விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி அம்ருத கலசத்துடன் தோன்றினார். அப்போது அசுரர்கள் அவரிடம் இருந்து அம்ருத கலசத்தை அபகரித்தனர். அதனால் மனமுடைந்த தேவர்கள் பகவானை சரண் அடைந்தனர். அவர் அவர்களைத் தேற்றி தன் மாயையால் அம்ருதத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதாகக் கூறி மறைந்தார்.


    .அப்போது அஸுரர்களிடையே அம்ருதத்திற்காகப் போட்டியும் கலகமும் ஏற்பட்டது. இதற்கிடையில் பகவான் அதி அற்புதமான மோகினி வேஷத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் முன் தோன்றினார்.


    அதை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது.
    ப்ரேக்ஷணீய உத்பலச்யாமம் ஸர்வாவயவ ஸுந்தரம்
    ஸவ்ரீடஸ்மிதவிக்ஷிப்த ப்ரூவிலாசாவலோகனை:
    தைத்ய யூதபசேதஸ்ஸு காமம் உத்தீபயன் முஹு:


    அழகான நீலோத்பல வர்ணம், சர்வ அவயவ சௌந்தர்யம், வெட்கத்துடன் கூடிய புன்முறுவல் , வளைந்த புருவம் , கடைக்கண் பார்வை இவற்றால் அசுரத்தலைவர்களுக்கு காமத்தீயை வளர்ப்பவளாய் தோன்றினாள்
Working...
X