Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 10 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 1௦


    ஜடபரதர் உபாக்யானம் 2


    அத்தியாயம் 1௦
    ஒரு சமயம் சிந்து சௌவீர தேச அரசனான ரஹுகணன் பல்லக்கில் கபில முனிவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தான். அப்போது பல்லக்குத் தூக்குவோரின் தலைவன் பல்லக்குத் தூக்க ஆள் தேடுகையில் பரதர் தென்பட அவர் வாட்ட சாட்டமாக இருப்பதைக்கண்டு அவர் பெருமை அறியாமல் அவரை பல்லக்குத் தூக்க அழைத்தான். அவரும் ஒப்புக்கொண்டு பல்லக்கைச் சுமந்தார்.


    பரதர் 'இஷுமாத்ராவலோகனகதிமான்,' அதாவது புழு பூச்சிகளை மிதித்து விடாமல் இருக்க ஒரு அம்பு அளவில் மட்டுமே பார்த்து அடி எடுத்து வைப்பவர். இதனால் மற்றவர்களின் வேகம் தடைப்பட்டதால் பல்லக்கு ஒழுங்காகச் செல்லவில்லை. ரஹுகணன் கோபம் கொண்டு பரதரை நோக்கி எகத்தாளமாக அவர் பலமற்று இருப்பதால் பல்லக்கை சுமக்க முடியவில்லை போலும் என்று இழித்துரைத்தான்.


    அப்போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர் தன் போக்கிலேயே செல்வதைக் கண்டு மேலும் கோபம் கொண்டு " நீ உயிருள்ள பிணமாக இருக்கிறாய். அரசனான என்னை பொருட்படுத்தாது உன் போக்கிலேயே போய்க்கொண்டு இருக்கிறாய். உனக்கு புத்தி வரும் வகையில் உன்னை தண்டிக்கப் போகிறேன்" என்று கூறினான்.


    பரதர் பேச ஆரம்பித்தார் .
    " என்னைத்தான் கூறுகிறீர் என்று நான் உணரவில்லை. ஏனென்றால் நான் இந்த தேகமல்ல. தேகத்திற்குத்தான் வலிமை , பலஹீனம், பசி , தாகம், வியாதி, முதுமை எல்லாம். உம் பரிஹாசமோ கடும் சொற்களோ அர்த்தமற்றவை. ஏனென்றால் நான் தேகமல்ல ஆத்மா. உம் கட்டளைக்கு கீழ்ப் படிதல் என்பது எஜமான் சேவகன் என்ற நிலையைப் பொருத்தது. அது நிலையல்ல.


    எவன் ஆள்பவன் எவன் அடிமை? இது பேத புத்தியுடையவனுக்குத்தான் பொருந்தும். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்? இயற்கையாகவே ஆத்மாவில் நிலைத்து பித்தனைப்போலவும் ஜடம் போலவும் உள்ள என்னை தண்டிப்பதனால் என்ன பயன்? அது ஏற்கெனவே பிசைந்த உணவைத் திரும்ப பிசைவது போலத்தான்." இதைச் சொல்லிவிட்டு பரதர் பல்லக்கை முன்போல சுமந்து கொண்டு போனார்.


    பரதருடைய பிரம்ம தேஜஸ் அவர் பேச ஆரம்பிக்கும்வரை சாம்பல் மூடிய நெருப்பு போல வெளியில் தெரியவில்லை. இதுவரை அவர் யாரிடமும் பேசியதில்லை ஆனால் ரஹுகணன் செய்த பாக்கியம் அவனுக்கு நீண்ட உபதேசம் கிடைத்தது.
    தத்துவ விசாரத்தில் ஸ்ரத்தை உள்ளவனாதலால் ரஹுகணன் யோக கிரந்தங்களின் சாரமாயிருக்கும் அவர் வார்த்தைகளைக் கேட்டு விரைவில் கீழிறங்கி அவர் பாதத்தில் தலையை வைத்து வணங்கினான். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தான் அரசன் என்ற கர்வம் நீங்கியவனாய் பின்வருமாறு கூறினான்.


    "தாங்கள் யார்? அவதூதஸ்ரேஷ்டர்களில் ஒருவரா? ஒருவேளை எனக்கு அனுக்ரஹம் செய்ய வந்த கபிலரா? அள்ளது வேறு மகாபுருஷரா? யோகேச்வரரும் சாக்ஷாத் ஹரியுமான கபிலதேவரை நாடி நான் புறப்பட்டேன். தாங்கள் அவரேதானா? உலகைக் கடாக்ஷிக்க அடையாளம் காண முடியாமல் சஞ்சரிக்கின்றீர்களா?"


    இவ்வாறு கூறிய ரஹுகணன் க்ஷத்ரியனானதால் கபிலர் போன்ற மகாபுருஷர்களின் தொடர்பிருந்தாலும் தேஹாத்ம புத்தியை விட முடியவில்லை. அதனால் பரதரின் வார்த்தைகளைக் கேட்டு இவ்விதம் பதில் கூறினான்.


    தேகம் என்று ஒன்று இருந்தால் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா? உலகில் ஏற்படும் உடலின் தாபம் உலையில் ஏற்றிய பானையைப்போல அதனுள்ளிருக்கும் ஆத்மாவையும் பாதிக்காதா. உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்றான்


    .மேலும் உடல் பேதங்களால் எஜமான் சேவகன் என்ற பேதம் ஏற்படுகிறது. அந்தந்த உடலில் உள்ளவரை அரசன் , சேவகன் என்ற ஸ்வதர்மத்தை பின்பற்றத்தானே வேண்டும் என்றும் கூறினான்.இதற்கு பரதர் அடுத்த அத்தியாயத்தில் விடை கூறுகிறார்
Working...
X