Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya 9 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 4-அத்தியாயம்9


    பகவான் துருவனுக்கு முன் தோன்றினார். ஆனால் அவன் தன்னுள்ளே அவரைக் கண்டுகொண்டு இருந்ததால் வெளியேகாட்சியளித்ததைக் காணவில்லை. அப்போது அவன் உள்ளத்தில் தோன்றிய வடிவம் மறைந்தது. உடனே கண்விழித்து வெளியே நோக்க தன் எதிரே தோன்றிய பகவானைப் பார்த்து மெய் மறந்து அவரடியில் வீழ்ந்தான்.


    பிறகு, கண்களால் அவ்வுருவைப் பருகி ஆரத்தழுவுவது போல் உணர்ந்தான். அவரை துதிக்க ஆசைப்பட்டபோதும் உணர்ச்சி மிகுதியாலும் பாலனாக இருந்ததாலும் வார்த்தைகளே வராமல் துயருற்றான். அப்போது அவன் கன்னத்தை பகவான் தன் பாஞ்சஜன்யத்தினால் தடவினார்.


    இங்கு மைத்ரேயர் சொல்கிறார்,
    க்ருதாஞ்சலிம் ப்ரம்மமயேன கம்புனா பஸ்பர்ச பாலம் க்ருபயா கபோலே ,
    வணங்கி நின்ற அந்த பாலனை ( அவன் எண்ணத்தை அறிந்து) கருணை மேலிட்டு வேதமே உருவான பாஞ்சஜன்யத்தினால் அவன் கன்னத்தை தொட்டார். (பாஞ்ச ஜன்யம் ப்ரணஸ்வரூபம்.)
    உடனே ஞானமும் வாக்கு வன்மையும் பெற்று துருவன் பகவானை துதிக்கலானான்.


    துருவன் துதி.
    "எல்லா சக்திகளையும் உடைய எந்த பகவான் தனது மகிமையால் என்னுள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த வாக்கையும் இந்த்ரியங்களையும் பிராணனையும் உயிர்ப்பிக்கிறாரோ அந்த பகவானும் பரமபுருஷனும் ஆகிய உமக்கு நமஸ்காரம்.


    உங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றாலும் உங்கள் மாயையால் மஹத் முதலான பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறீர்கள் . பின்னர் அவைகளின் உட்புகுந்து அக்னி ஒன்றாயினும் பல த்ரவியங்களில் பலவாறாகத் தோன்றுவதைப் போல் பல உருவையும் குணங்களையும் தோற்றுவிக்கிறீர்கள்.


    பிரம்மாவுக்கும் ஆக்க சக்தி உங்களிடமிருந்து தான் உண்டாகிறது. எல்லாம் கொடுக்கும் உங்களிடம் இந்த அல்பமான உலக சுகத்தை வேண்டுவோர் மூடர்களே ஆவர்,.தங்கள் சேவையாலும் கதைகளை கேட்பதனாலும் த்யானிப்பதனாலும் உண்டாகும் சுகம் ஸ்வர்கவாசிகளாலும் பெற இயலாதது.


    எனக்கு எப்போதும் உங்கள் பக்தர்களின் சங்கம் கிடைக்குமாக. அதனால் பக்தி வரப்பெற்று இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும்.


    பிரபஞ்சமாகிய தாமரையைக் கையில் வைத்துள்ள உங்கள் பாதக் கமலத்தின் மணத்தினால் அடியார்கள் உடல் உணர்வை மறக்கின்றனர். நாங்கள் காணும் இந்த பிரபஞ்சத்தை மகாப்ரளயத்தில் உள்ளடக்கி அனந்த சயனத்தில் இருக்கும் தங்கள் நாபியில் இருந்து தங்கத்தாமரை எழ அதில் ஸ்ருஷ்டிகர்த்தாவான பிரம்மா தோன்றுகிறார்.


    பகவானே பரமாநந்த மூர்த்தியாகிய உமது பாதகமலங்களையே விரும்பி எவர்கள் வழிபடுகின்றார்களோ அவர்கள் விரும்புவதும் அடைவதும் ஒன்றே ஏனென்றால் உன் பாதகமலங்களே மோக்ஷமாகும். ஆனாலும் தீனர்களையும் தங்கள் கருணையால் பசு தன் கன்றைக் காப்பதைப்போல் காத்து ரக்ஷிக்கிறீர்கள்
    .
    பகவான் துருவனை நோக்கிக் கூறினார்.
    "திட வ்ரதம் கொண்ட உன் மனக்கிடக்கையை நான் அறிவேன்.அடைவதற்கரிய அந்த உயர்ந்த இடத்தை நான் உனக்கு அளிக்கிறேன். எந்தப் பதவியானது மற்றவர்களால் அடையப்படவில்லையோ எந்தப்பதவியில் கிரகங்கள் நக்ஷத்திரங்கள் இவைகளின் கூட்டங்கள் அமைக்கப் பட்டுள்ள தோ அப்பேர்ப்பட்ட ஒளி வீசும் நிலையான பதவியை உனக்குக் கொடுக்கிறேன்.


    பூமியை உனக்களித்துவிட்டு உன் தந்தை காட்டிற்குச் சென்றதும் தருமமே மூலமாகக் கொண்டவனாய் இந்த்ரியங்களை அடக்கியவனாய் 36000 வருடங்கள் ஆட்சி புரிவாய். உன் சகோதரனாகிய உத்தமன் வேட்டையில் இறந்ததும் அவன் தாய் அவனைத் தேடுகின்றவளாய் காட்டுத்தீயில் உயிர் துறப்பாள்.


    யாகங்களின் ஹ்ருதயமாகிய என்னை பூர்ண தக்ஷிணைகளால் திருப்தி செய்து இந்த உலக சுகங்களை அனுபவித்து கடைசியில் என்னை தியானம் செய்வாய். பிறகு எங்கு சென்றால் ஒருவன் திரும்பமாட்டானோ அந்த ரிஷிமண்டலத்துக்கு அப்பாற்ப்பட்ட எனது ஸ்தானமாகிய த்ருவமண்டலத்தை அடைவாய்."


    இவ்வாறு த்ருவனுக்கு வரமளித்துவிட்டு அவன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே பகவான் கருடவாகனராய் தன் இருப்பிடம் அடைந்தார். துருவன் பகவானின் அருளால் பரமானந்த நிலை கிட்டியும் தன் சங்கல்பத்தால் உண்டான ஆசையின் பூர்த்தியை வரமாகப்பெற்று திருப்தி இல்லாத மனத்தினனாய் நகரத்திற்குத் திரும்பினான்., என்று மைத்ரேயர் கூறினார்.


    விதுரர் வினவினார்.
    "கிடைத்தற்கரியதும் பல பிறவிகளில் அடையக்கூடியதும் ஆன பதவியை விஷ்ணுவின் பாதாரவிந்தத்தை தியானம் செய்ததால் ஒரே பிறவியில் அடைந்து துருவன் ஏன் த்ருப்தியுறவில்லை? "


    மைத்ரேயேர் கூறலானார்.
    "அவன் தவம் செய்யக் காரணம் மாற்றாந்தாயின் சொற்களால் ஏற்பட்ட மனவருத்தம் . மோக்ஷத்தை விரும்பி அல்ல. அதனால் அவன் விரும்பியதே கிடைத்தது. ஆனால் அவன் தவத்தின் பயனாக உயர்ந்த பதவி அவனுடைய கர்மாவை அனுபவித்த பிறகே கிடைத்தது. "


    இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் பக்தர்கள் எதை விரும்புகிறார்களோ அதை பகவான் தந்து விடுகிறார். மோக்ஷத்தை விரும்பாதது நம் தவறு. ஆனாலும் கடைசியில் அவரகள் கேட்காமலே மோக்ஷமும் தந்து விடுகிறார்.
Working...
X