Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 2 adhyaya 9 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம்-ஸ்கந்தம்2 அத்தியாயம் 9
    அத்தியாயம் 9
    பிரம்மா உலகை சிருஷ்டிக்க நினைத்தபோது அதை எவ்வாறு செய்வது என்று அறியவில்லை. அப்போது ஒரு அசரீரி 'தப ,'தப,' என்று கேட்க பிரம்மா ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார். தவத்தின் முடிவில் பகவான் பரத்யக்ஷமாகையில் ப்ரம்மாவின் கண்முன் பரமபதமாகிய வைகுண்டம் விரிந்தது.அங்கு அவர் கண்ட காட்சியை சுகர் விவரிக்கிறார்.


    தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
    வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம்
    ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்


    இவ்வாறு பிரம்மாவால் ப்ரீதிசெய்யப்பட்ட பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ, எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ அந்த அவருடைய இடமாகிற வைகுண்டத்தை காட்டி அருளினார்.


    ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
    ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:


    அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால். ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.


    அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக்கண்களுடனும் காணப்பட்டனர்.


    கற்பனைக்கெட்டாத சௌந்தர்யத்துடன் ஸ்ரீதேவி பகவானின் பாதபூஜை செய்ய அவருடைய பரிவாரங்களான ஸுனந்தன், நந்தன் பிரபலன், அர்ஹணன் முதல்யவர்கள் புடை சூழ , அரியாசனத்தில் அமர்ந்து கிரீட குண்டலங்களுடன் கமலக்கண்கள் அழகுற மந்தகாசத்துடன் கூடிய வதனத்துடன் பீதாம்பரம் நான்கு புஜங்கள் சங்கு சக்ரம் இவற்றோடு ஹ்ருதயத்தில் ஸ்ரீயுடன் காட்சி அளித்த பகவானைக் கண்டார் பிரம்மா.


    பிரகிருதி முதலிய இருபத்து ஐந்து ஸ்ருஷ்டி தத்துவங்கள் , பகவான் என்ற பெயருக்கேற்ப ஆறு குணங்கள் இவைகளுடன் அவைகளைக் கடந்த மகிமை கொண்ட பகவானைக் கண்ட பிரம்மா உவகை மேலிட்டு மெய் சிலிர்க்க தண்டனிட்டார்.


    பிரம்மா தன்னைக் கைப்பிடித்து அன்புடன் வினவிய பகவானிடம் கூறலானார்.
    " தாங்கள் சர்வவ்யாபியாயும் அந்தர்யாமியாயும் உள்ளவர். அதனால் எல்லோருடைய உள்ளக்கிடக்கையும் அறிந்தவர். என்னுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டும்.


    .,ஒரு சிலந்தி தன் வலையை தனக்குள்ளே இருந்து வெளிக்கொணர்ந்து பிறகு இழுத்துக்கொள்வதைப்போல உங்களுடைய மாயையினால் இந்த உலகத்தை சிருஷ்டித்து காத்துப பிறகு தன்னுள்ளே ஒடுங்க வைக்கிறீர்கள்.


    இதை எனக்குப் புரிய வைக்க வேண்டுமாறு கோருகிறேன். உங்களால் கற்பிக்கப்பட்டு நான் சிருஷ்டியை முழு கவனத்துடனும் பந்தத்திற்கு உட்படாமலும் உங்கள் சேவகனாகச் செய்வேன். எனக்கு அகந்தை ஏற்படாமலிருக்க அருள் செய்ய வேண்டும்.


    பிறகு பகவான் அவருக்கு தத்வஞானத்தை உபதேசித்துப பிறகு கூறினார்.
    அஹமேவ ஆஸம் ஏவ அக்ரே நான்யத் யத் ஸதஸத் பரம்
    பஸ்சாத் அஹம் யத் ஏதத் ச யோ அவசிஷ்யேத ஸோ அஸ்மி அஹம் (ஸ்ரீ.பா. 2.9.32)


    ஆதியில் நான் மட்டுமே இருந்தேன். என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. கடைசியில் எஞ்சி இருக்கப்போவதும் நானே.


    ருதே அர்த்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத ச ஆத்மனி
    தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதா ஆபாஸோ யதா தம:
    ( 2.9. 33)


    பொருள் இல்லாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றமும் இருப்பது இல்லாதது போன்ற தோற்றமும் எனது மாயை என்று அறிக.


    யதா மஹாந்தி பூதானி பூதேஷு உச்சாவசேஷு அனு
    பிரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம்
    (2.9. 34)


    ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாவற்றிலும் உட்புகுந்தாலும் அவைகளின் இயற்கையை இழப்பதில்லையோ அதுபோல நான் எல்லாவற்றிலும் இருந்தாலும் உண்மையில் அவை என்னிடம் உள்ளன நான் அவற்றில் இல்லை.


    ஏதாவதேவ ஜிக்ஞாஸ்யம் தத்வ ஜிக்ஞாஸுனா ஆத்மன:
    அன்வயவ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா


    இதுதான் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் ஆத்மதத்துவத்தை அறிய வேண்டுபவர் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
    (2.9.35)


    இந்த நான்கு ஸ்லோகங்களும் சதுச்லோகீ பாகவதம் எனப்படும். பகவானால் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்ட இதுவே பாகவதம் என்னும் பெரிய மரத்தின் விதை போல் ஆயிற்று.
    இதன் விளக்கம் பின்வருமாறு.


    முதல் ஸ்லோகம்
    இது உபநிஷத்தில் காணப்படும் வாக்கியத்தை ஒட்டி இருக்கிறது. 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .' சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. (சாந்தோ. உப. 6.2.1)
    பிரம்மத்தைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதால் பகவானே உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஆகிறார். ( பானைக்கு மண் உபாதான காரணம் – குயவன் நிமித்த காரணம்)


    இரண்டாவது ஸ்லோகம்.
    இல்லாதது இருப்பதாகத் தோன்றுவது. .இதற்கு உதாரணம் கயிறைப் பார்த்து பாம்பு என்று நினைப்பது. இருப்பது இல்லாததாகத் தோன்றுவது என்னவென்றால் பாம்பு என்று நினைத்தால் அங்கு இருக்கும் கயிறு மறைந்து விடுகிறது அல்லவா?


    இதை திருமூலர் எளிதாகச் சொல்லி இருக்கிறார் .
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    மரத்தை மறைத்தது மாமதயானை
    பார்த்ததில் மறைந்தது பார் முதல் பூதம்
    பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
    என்று.


    இதன் விளக்கம் என்னவென்றால் ,
    ஒரு யானை மரத்தில செய்தது. அதை ஒரு குழந்தை பார்த்து , 'ஹாய் யானை ,' என்கிறது. அதையே ஒரு தச்சன் பார்த்து நல்ல மரம் என்கிறான்.
    யானையைப் பார்த்தால் மரம் தெரிவதில்லை . மரத்தைப் பார்க்கின் யானை தெரிவதில்லை.


    அதேபோல பார் முதல் பூதம் என்பது பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகம்.அதில் ஈடுபட்டால் இறைவனைக் காண்பதில்லை. இறைவன் உணர்வு வந்தால் இந்த உலகம் இல்லை.


    அடுத்த ச்லோகம் அனுப்ரவேசம் . அதாவது எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும் இறைவன் அதைக்கடந்து நிற்கிறான். ஆகாசம் அங்கும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் என்பது ஒன்றுதானே பல அல்லவே. இது பஞ்ச பூதங்களுக்கும் பொருந்தும்.


    இதை எளிதாகப புரிந்து கொள்ள வேண்டுமானால் , ஒரு குடத்தின் உள் ஆகாசம் இருக்கிறது. குடத்தின் வெளியிலும் இருக்கிறது. அந்தக் குடத்தை உடைத்து விடுகிறோம். அப்போது அந்த ஆகாசம் எங்கு போயிற்று? குடம் போல்தான் எல்லா பஞ்சபூதங்களும் ஒரு வரையறைக்குட்பட்டன அல்ல.


    கீதையில் இதையே
    மத்ஸ்தானி சர்வபூதானி ந சாஹம் தேஷு அவஸ்தித: (ப.கீ. 9.4)
    எல்லாம் என்னிடம் உள்ளன நான் அவைகளிடம் இல்லை என்று கூறுகிறார்.


    நான்காவது ஸ்லோகத்தில் உண்மையை நேரிடையாகவும் எதிர்மறையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அர்த்தம் , எது எங்கும் உள்ளதோ அதுதான் உண்மை. இது நேரிடையான வாதம். எது எங்கும் இல்லையோ அது உண்மை அல்ல. இது எதிர்மறையான வாதம். இது பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகத்திலேயே கூறியுள்ளது.


    "ஜன்மாத்யஸ்ய யத: அன்வயாத் இதரசஸ்ச அர்த்தேஷு அபிக்ஞ: ஸ்வராட்" (ஸ்ரீ. பா. 1.1.1.)
    எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை (பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ அதுதான் பிரம்மம். இந்த பிரம்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.


    . அன்வயம் என்பது உடன்பாடு. பிரம்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் , சர்வம் கலு இதம் பிரம்ம , இவை எல்லாமே பிரம்மம் என்று கூறுபவை. வ்யதிரேகம் என்பது எதிர்மறை . பிரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.
    பிரம்மா இதை தெரிந்துகொண்டபின் நாரதருக்கு உபதேசித்தார். பின்னர் நாரதரால் வியாசருக்கு உபதேசிக்கப்பட்டது.
Working...
X