Announcement

Collapse
No announcement yet.

shiva stotram to ward off poverty

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • shiva stotram to ward off poverty

    தாரித்ரிய தகன சிவ ஸ்தோத்திரம்.


    (அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி, சிவபெருமானிடம் வசிஷ்ட முனிவரால் பாடப் பட்டது )


    விஸ்வேஷ்வராய நரகார்னவ தாரணாய
    கர்ணாம்ருதாய சசி சேகர தாரணாய
    கற்பூர காந்தி தவலாய ஜடா தராய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    அண்ட சராசரங்களின் தலைவனை, (பிறவி என்னும்) பெரும் நரகத்தைக் கடக்க உதவும் பெருமானை, அமுதம் போல் கருணை மழை பொழிபவனை, உச்சியில் பிறை நிலவைச் சூடியிருப்பவனை, கற்பூர ஜோதி போன்று வெண்மை நிறமுடையவனை, நீண்ட ஜடாமுடியோடு திகழும் எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    கௌரிப் ப்ரியாய ரஜனீஷ கலாதராய
    காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
    கங்காதராய கஜராஜ விமர்தனாய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    பார்வதி நாதனை, எல்லையில்லா இருள் சாம்ராஜ்ஜியத்தின் வளர்பிறையை சிரசில் அணிந்திருப்பவனை, காலனை அழித்த காலகாலனை, ராஜ நாகத்தைக் கங்கணமாக அணிந்திருப்பவனை, பொங்கும் கங்கையை ஜடையில் தரித்திருப்பவனை, கஜ ராஜனை அழித்து ஒழித்த எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    பக்தப் ப்ரியாய பவ ரோக பயாபஹாய
    உக்ராய துர்க பவ சாகர தாரணாய
    ஜோதிர் மயாய குண நாம ந்றுத்யகாய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    தன் பக்தர்களுக்கு மிகவும் பிரியமானவனை, நோய்களினால் வரும் துன்பத்தை நீக்கி அபயமளிப்பவனை, உக்கிரமானவனை, துன்பம் தரும் சம்சார சாகரத்தினின்று நம்மைக் கரையேற்றுபவனை, ஜோதி மயமானவனை, நற்பெயர் கொண்டு திருநடனம் புரியும் எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    சர்மாம்பராய சவ பஸ்ம விலேபனாய
    பாலேக்ஷனாய மணி குண்டல மண்டிதாய
    மஞ்சீர பாத யுகலாய ஜடா தராய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    கட்புலனாகாத மறைவெளியை உடுத்தியிருப்பவனை (மிகவும் சூட்சுமமானவனை), உடல் முழுவதும் சுடலைப் பொடி பூசியிருப்பவனை, நுதல் விழியானை, காதில் அழகிய மணிகளால் ஆன குண்டலங்களை அணிந்திருப்பவனை, கால்களில் கலகலக்கும் பன்மணிச் சலங்கை அணிந்திருப்பவனை, நீண்ட ஜடாமுடியுடைய எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    பஞ்சா நனாய பனி ராஜ விபூஷணாய
    ஹேமாம் ஷுகாய புவன த்ரய மண்டிதாய
    ஆனந்த பூமி வரதாய தமோமயாய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    ஐந்து முகத்தவனை, ராஜ சர்ப்பத்தை அணிகலனாகக் கொண்டவனை, மின்னும் பொன்னாலான ஆடையை அணிந்திருப்பவனை, மூவுலகையே அணிமணியாகக் கொண்டவனை, கேட்கும் வரங்களை எல்லாம் அருள்பவனை, ஆனந்தமயமான எம் சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    கௌரி விலாச புவனாய மஹேஷ்வராய
    பஞ்சா நனாய சரணாகத கல்பகாய
    சர்வாய சர்வ ஜகதாம் அதிபாயா தஸ்மை
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    உமையாளின் அருள் உலகமயமானவனை, எம் மஹேஷ்வரனை, கர்ஜிக்கும் சிங்கம் போன்றவனை, அண்டினோர்க்கு சரணாகதி அளிப்பவனை, கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவனை, அனைத்திலும் வியாபித்திருக்கும் சர்வேஸ்வரனை, அனைத்து உலகிற்கும் அதிபதியான எமது சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    பானுப் ப்ரியாய பவ சாகர தாரணாய
    காலாந்தகாய கமலாசன பூஜிதாய
    நேத்ர த்ரயாய சுப லக்ஷண லக்ஷிதாய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    சூரிய தேவனுக்குப் பிரியமானவனை, பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெருமானை, காலனை தகனம் செய்தவனை, தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனை, முக்கண்களோடு அனைத்து சுப லட்சணங்களும் பொருந்திய எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    ராமப் ப்ரியாய ரகு நாத வர ப்ரதாய
    நாதப் ப்ரியாய நரகார்னவ தாரணாய
    புண்யேஷு புண்ய பரிதாய சுரார்ச்சிதாய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    ஸ்ரீ ராமனுக்குப் பிரியமானவனை, ரகு குல நாதனுக்கு வரமளித்தவனை, நாதத்தில் உறைபவனை, (பிறவி எனும்) நரகத்தை அழிப்பவனை, புனிதத்திலும் புனிதமானவனை, தேவர்கள் வழிபடும் தேவதேவனை, எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    முக்தேஷ்வராய பலதாய கணேஷ்வராய
    கீதப்ரியாய வ்ருஷபேஷ்வர வாஹனாய
    மாதங்க சர்ம வசனாய மஹேஷ்வராய
    தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.


    முக்தி நல்கும் எம் ஈஷ்வரனை, விநாயகனுக்கு அருள்பவனை, இசைக்கு மயங்குபவனை, ரிஷப வாகனனை, மதம் கொண்ட யானைத் தோலை உரித்து ஆடையாகக் கட்டியவனை, மேலே சொல்லப்பட்ட எல்லா பெயர்களுக்கும் உரித்தான மஹேஷ்வரனை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.


    பல ஸ்ருதி (பலன் துதி):


    வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
    சர்வ தாரித்ரிய நாசனம்
    சர்வ சம்பத்கரம் ஷீஃக்ரம்
    புத்ர பௌத்ராதி வர்தணம்
    த்ரிசந்த்யம் யஹ் படே நித்யம்
    ச ஹி ஸ்வர்கமவாப்னுயத்.


    ரிஷி வசிஷ்டரால் அருளப்பட்ட இந்தத் துதியைப் பாடுபவர்களின் அனைத்து தரித்திரங்களும் நீங்கப் பெறும். சகல செல்வங்களும் விரைவில் வந்து சேரும். மனைவி மக்களோடு இன்ப மயமான வாழ்வு அமையும். தினமும் மூன்று வேளை இந்தத் துதியைப் பாடுபவர்களை சுவர்க்கம் புகுமாறு இறைவன் அருளுவான்.
Working...
X