பக்தியில் பொழிந்த பஜன் மழை
என்.ராஜேஸ்வரி
ஹரி தும்ஹரோ மூலம் மீராவின் பஜன் பாடலை ரசிகர்களின் காதுகளில் சுழலவிட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஹரி நான் உன்னுடையவள் என்ற பொருளில் தொடங்குகிறது இந்த பஜன். இதற்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கையையே ராதை, ஆண்டாள் ஆகியோரைப் போல் ஹரிக்கே அர்ப்பணம் செய்தாள் மீரா. அவள் வாழ்க்கை வரலாறு பக்திக்கு ஒரு சிறந்த சான்று.
குழந்தை மீரா விளையாட்டு பொம்மையாகக்கூட கிருஷ்ண விக்கிரகத்தையே வைத்திருந்தாள். ஒரு கணம்கூட அந்தச் சிலையை இளவரசி மீரா பிரியவில்லை. ஊரும் உலகமும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல், மீராவின் பக்தி குறித்துப் பல கதைகள் புனைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்தார் தந்தையான மன்னர். பக்தி செலுத்துவது குற்றம்போலும்; தன் தந்தையின் கையாலேயே விஷம் கொடுக்கப்பட்டது மீராவுக்கு.
அதையும் புன்னகையுடன் ஏற்ற மீரா விஷத்தை முழுவதுமாக உண்டாள். விஷம் அருந்தினால் உடல் நிறம் மாறும் என்பது உலகோர் அறிந்த உண்மை. ஆம் உடல் நிறம் மாறியது, மீராவுக்கு அல்ல, அவள் கையில் வைத்திருந்த கிருஷ்ண விக்கிரகத்திற்கு.
இதனைக் கண்ட நாட்டு மக்களுக்கு மீராவின் தூய பக்தி புரிந்தது. இச்செய்தி பார் முழுவதும் பரவியது. கிருஷ்ண பக்தனான மேவார் மன்னன் ராணாவையும் இச்செய்தி எட்டியது. தனக்கெனவே பிறந்தவள் மீரா என்று எண்ணி அவளை மணக்க விருப்பம் கொண்டான் மன்னன் ராணா. கண்ணனே தனது புருஷன் என்று வாழ்ந்திருந்த மீரா, தனது கிருஷ்ண பக்திக்கு இடையூறு இனி இருக்காது என்று எண்ணியே ராணாவைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டாள்.
வழக்கம் போல் கண்ணனை எண்ணியே இசைத் தவம் செய்தாள் மீரா. இவளது பக்தியைக் கேள்விப்பட்ட மொகலாயப் பேரரசர் அக்பர், தனது அவை இசைக் கலைஞர் தான்சேனுடன் மாறு வேடத்தில், மீரா, கிருஷ்ண பூஜை செய்யும் மேவார் அரண்மனைக்கு வந்தார். ஏகாதசி நாளான அன்று உலகையே மறந்து, பாடிக்கொண்டே இருந்தாள் மீரா. அதன் உச்சகட்ட உணர்ச்சி வேகத்தில் அழகிய உடல் அசைவுகளுடன் தான் அரசி, மேட்டுக்குடியை சேர்ந்தவள் என்பதையும் மறந்து ஆடினாள்.
அந்த அரங்கனை எண்ணி மேலும் ஊன் உருக, உயிர் உருக தேன் போன்ற பக்தி உள்ள தடாகமாக மாறினாள் மீரா. இதனை கண்டு, கேட்டு, அதிசயத்துப்போன அக்பர், மன்னர்களுக்கே உரித்தான பரிசளிக்கும் குணத்துடன் முத்து மாலை ஒன்றினை எடுத்தார். மீரா, மாற்றான் மனைவி என்பதால் மிகுந்த மரியாதையுடன் அம்மாலையை கிருஷ்ண விக்கிரகத்தின் கழுத்தில் அணி வித்தார் அக்பர். பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்று, தன் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்.
கண்ணனையே அகத்தில் கொண்டிருந்ததால் மீரா இது எதனையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் ராணாவுக்கோ ஒற்றர்கள் மூலம் அக்பர் வந்து சென்றது தெரிந்துவிட்டது. மீரா இதனை தன்னிடம் இருந்து மறைத்துவிட்டதாக ராணா அவளைக் கோபிக்க, இப்பழியினால் தாங்கவொண்ணா துன்பமடைந்த மீரா, பிருந்தாவனம் சென்றாள். இங்குதானே கண்ணன் கோபியருடன் வாழ்ந்திருந்தான்.
அவ்விடத்தில் கோஸ்சுவாமி என்ற பிரபலமான கிருஷ்ண பக்தர் இருந்தார். அவரோ பெண்களைப் பார்ப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க விரும்புவதாக, அவரது இல்ல வாயிலில் நின்று அனுமதி கேட்டாள் மேவார் அரசி, ராணாவின் மனைவி. அவரது சிஷ்யர்கள் அனுமதிக்க மறுத்தனர். அப்போது மீரா, கண்ணனே பதி. மற்ற அனைவரும் பெண்களே. இதில் மாற்றம் உண்டா எனக் கேள்வி எழுப்பினாள். இக்கேள்விக் கணையால் தன்நிலை உணர்ந்தார் கோஸ்சுவாமி. மீராவை கோயிலின் உள்ளே அழைத்தார்.
மீராவுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அறிந்தார் அக்பர். மன்னன் ராணாவுக்கு ஓலை அனுப்பினார். அதில் மீராவிடம் மன்னிப்புக் கேட்டு மேவார் அரண்மனைக்கு திருப்பி அழைத்து வராவிடால், தான் மேவார் மீது படை எடுத்து வந்து போர் புரிய உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மீராவை சந்தித்த ராணா, அக்பர் கூற்றை எடுத்துரைத்து, போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் தீமையை விளக்கினான். மீராவும் இனி ஒருபோதும் ராணாவின் மனைவியாகவோ, ராணியாகவோ இருக்க இயலாது. இதற்குச் சம்மதமெனில் நாடு திரும்புவதாகக் கூறுகிறாள். சம்மதித்தான் ராணா.
கிருஷ்ண ஜெயந்தியன்று வழக்கம்போல் ஒரு கையில் சப்பளாக் கட்டையும், மறு கையில் தம்புராவும் கொண்டு இன்றைக்கும் பிரபலமாக உள்ள பல பஜன்களைப் பாடினாள். அவள் பிறந்ததோ இளவரசியாக. வாழ்க்கைப்பட்டுப் போனதோ ராணியாக. மீராவுக்கு நிலவுலகத் தேவை ஏதுமில்லை. எதிர்பார்ப்பு இல்லாத பக்தி கண்ணன் மீது காதலாகக் கனிந்தது. காற்றினில் கீதமாகக் கரைந்து மறைந்தாள் மீரா. நூற்றுக்கணக்கான மீரா பஜன்கள் இன்றும் பாடப்பட்டுவருவது அவளது பக்திக்கும் படைப்பாற்றலுக்கும் சான்று.
இந்த வரலாறு மீரா என்ற பெயரிலேயே எம்.எஸ். சுப்புலஷ்மி நடிக்கத் தமிழில் திரைப் படமாக வெளிவந்து, உலகம் முழுவதும் பக்தி நடை போட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ் பெற்ற காற்றினிலே வரும் கீதம் உட்பட பன்னிரெண்டு பாடல்களைக் கொண்டிருந்தது இத்திரைப்படம்.
Courtesy - The Hindu