Announcement

Collapse
No announcement yet.

பக்தியை இசையாக உருவேற்றிய மாமேதை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பக்தியை இசையாக உருவேற்றிய மாமேதை

    தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.
    இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள 'எந்தரோ மகானுபாவுலு' வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால், அது உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது.
    இவருக்குச் சிறுவயதிலேயே 'ராமநாம மந்திரம்' அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது. அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.
    ராம தரிசனம்
    கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் 'ராமா' என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.
    திகைத்துப் போன தியாகராஜர், "தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே" என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் 'ராமா' என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்.
    ஒரே நாளில் பூர்த்தியடையும் பாடல்
    வேதமானது எப்படி சிஷ்ய பரம்பரையில் வழிவழியாக ஓதப்பட்டு தொடர்கிறதோ, அது போலவே இவரது பாடல்களும் சிஷ்யர்களாலே பரப்பப்பட்டது. வர கவியான இவர் பாடல்களை காளமேகம் போல் பொழிந்து தள்ளி விடுவாராம். அதனால் இவரது சிஷ்யக்கூட்டத்தினர் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து வரிசையாக அமர்ந்து இருப்பார்களாம்.அன்றைய தினத்தில் தியாகராஜர் முதல் பாடல் பாட அதனை வரிசையில் அமர்ந்துள்ள முதல் குழு, குறிப்பெடுத்துக் கொள்வார்களாம்.
    ஒருவர் பல்லவி மட்டும் நினைவில் கொள்வாராம். அடுத்தவர் அனுபல்லவி, மூன்றாமவர், சரணத்தில் பகுதி ஒன்று, நான்காமவர் சரணத்தில் பகுதி இரண்டு என்ற கணக்கில் நினைவில் கொண்டு, அந்தப் பாடல் முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார்களாம். பின்னர் ஆற்றங்கரையில் அமர்ந்து அதனை அழகாக கோர்வைப்படுத்தி அந்த குழுவில் உள்ள அனைவரும் அந்த குறிப்பிட்ட பாடலை மனனம் செய்து விடுவார்களாம். இது அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடும்.
    அடுத்த பாடலுக்கு மற்றொரு குழு. இப்படியாகத்தான் தியாராஜரின் பாடல்கள், குளத்தில் கல் போட்டால் வட்டமாக நீர் அலைகள் உருவாவது போல, பல கிராமங்கள், நகரங்கள், தலை நகரங்கள் என்று விரவி இந்தியா முழுவதும் பரவியது.
    தியாகராஜ சுவாமிகளின் திகட்டாத சங்கீதம் ரசிகர்களுக்கு என்றென்றும் வரப்பிரசாதம்.
    Courtesy - The Hindu
Working...
X