பல இல்லங்களில் அவர்களது குழந்தைகளுக்கு பிரஹ்மோபதேச வைபவம் நடத்த யோசித்து வரலாம். உபநயனத்தின் ஒரு அங்கமாக உதக சாந்தியும் உண்டு என நமக்கு தெரிந்திருக்கும்.
இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம் ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும். மிகவும் உசத்தியான கர்மாவாகும். ஒரு சிலர் விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.
அந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை
இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப்பட்டதாகும்.
உபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம். சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நாநன, மடி வஸ்த்ரங்கள் அவசியம்.
பூணுல் போட்டுகொள்ளும் பையனை க்ருஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்க்ககவும், எல்லோரும் சுபிஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது. லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.
இதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
இதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்குத் தெரியுமா? பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்...
ரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் 'ஸிகும்ஹே..' எனத் துவங்கும் யக்ஞ மந்திரங்கள், ...என்ன படிக்கும்போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா... அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை......தொடர்ந்து...
அன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.
இப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும்போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.
ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.