Announcement

Collapse
No announcement yet.

sumangali prarthanai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sumangali prarthanai

    சுமங்கலி ப்ரார்த்தனா.

    5 பெண்டுகள் + கண்யா பெண்.
    சிராத்ததின் போது பித்ருக்களை அழைத்து வருபவர் விசுவேதேவர் . இந்த விசுவேதேவருக்கு சிராத்த தினத்தின் போது சாப்பாடு போடுகிறோம். இந்த விசுவேதேவரின் மனைவிக்கும், பெண் குழந்தைக்கும் சாப்பாடு போடுவதை சுமங்கலி ப்ரார்த்னை என அழைக்கிறோம். இவர்களுடன் நம் வீட்டில் காலமான சுமங்கலிகளையும் சேர்த்து அழைத்து சாப்பாடு போடுகிறோம்.

    யார் சுமங்கலி பெண்டுகளாக அழைக்க படுகிறார்களோ, அவர்கள் வீடுகளுக்கு முதல் நாள் சாயங்காலமே சென்று எண்ணைய், சீயக்காய், மஞ்சள், குங்குமம் கொடுத்து எங்காத்துக்கு பெண்டுகளாக பெரியவாளா இருக்க வாங்கோ என்று அழைக்க வேண்டும்.

    வீட்டிலுள்ள பெண்டுகளுக்கு காலையில் மஞ்சள் குங்குமம் கொடுத்து தலையில் எண்ணைய் வைத்து குளிக்க சொல்ல வேண்டும்.

    வீட்டு வாசலில் பெரிய மாக்கோலம் போட்டு காவி இட வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய புதிய 9 கஜம் புடவை, ரவிக்கை துணியை வீட்டு மருமகள் தன் கையால் மணையில் புடவை வைத்து , விளக்கேற்றி அக்ஷதை போட்டு, நமஸ்கரித்து ஆரத்தி எடுக்க வேண்டும். பின்னர் சிறிது மஞ்சள் கலந்த நீரில் நனைத்து உலர்த்த வேண்டும். புடவை நுனி தெற்கு பக்கம் வராமல் பார்த்து உலர்த்த வேண்டும். புடவை நீரில் நனைக்கும் போதும் தெற்கு பார்த்து நின்று கொண்டு நனைக்க கூடாது.

    பூஜை செய்யும் இடத்தில் ,கிழக்கு பார்த்து பெரிய மாக்கோலம் போட்டு காவி இட வேண்டும். பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி யை சுவற்றில் சாய்த்து வைத்து தங்க சங்கிலி, நெக்லஸ் போன்றவற்றையும், தொடுத்த பூவையும் புடவை மேல் வைக்க வேண்டும்.

    கண்ணாடிக்கு முன் இரு மணைகளில் மாக்கோலம் போட்டு வைக்கவும். அதற்கு முன்னால் புடவை கலம் என்னும் இலைகளை கோலங்களின் மீது வைக்கவும். தவிர பெண்டுகள் சாப்பிடும் இடங்களில் சிறிதாக மாக்கோலங்கள் போட்டு உலர வைக்கவும். எல்ல இடங்களிலும் செம்மண் இட வேண்டும்.

    உலர்த்திய பெண்டுகள் புடவையை எடுத்து அதன் தலைப்பின் நுனியில் 5 மஞ்சள் கிழங்கையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் முடித்து, தலைப்பு வெளியில் தெரியும் படியாக அழகாக கொசுவி தலைப்பு வடக்கு பார்த்து இருக்கும்படியாக வைத்து , அதன் மீது ரவிக்கை துணியையும் வைக்கவும். இவற்றை கோலம் போட்ட மணையின் மீது வைக்கவும். மற்றொரு மனையில் கன்யா பெண்ணுக்காக , பாவாடை சட்டையை வைக்கவும்.

    மணையில் வைத்திருக்கும் புடவை ரவிக்கை துணியின் மீது, வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம், மட்டை தேங்காய், மருதானி பவுடர், கண் மை, வளையல், சீப்பு, கண்ணாடி, போன்ற மகளிரை மகிழ்விக்குமெல்லா ஸெளபாக்கிய திரவியங்களையும் வைக்க வேண்டும். கன்யா பெண்ணிற்கு கொடுக்கும் ரிப்பன், க்லிப் போன்றவற்றையும் வைக்கலாம்.

    இவற்றுக்கு வலது பக்கத்தில் குத்து விளக்கில் 5 திரி போட்டு clock wise ஆக விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு குடத்தில் வழிய வழிய நீர் வைக்க வேண்டும்.
    பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம் பாத்திரத்துடன் பக்கத்தில் வைக்க வேண்டும். இது தவிர நிவேதனம் செய்ய – வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், போன்றவற்றை ஒரு தட்டில் இலைக்கு எதிரில் வைக்க வேண்டும்.

    மற்ற பெண்டுகளுக்கு கொடுக்கும் எல்லா மங்கள பொருட்களையும் , அழகாக பைகளில் போட்டு அங்கேயே அருகில் வைக்கலாம்.

    கற்பூரம், கற்பூர கரண்டி,அக்ஷதை, மஞ்சள் பொடி, குங்குமம், உதிரி பூ, தீப்பெட்டி, விளக்குக்கு விடும் எண்ணைய், திரி நூல், ஒரு பக்கத்தில் தயாராக இருக்க வேண்டும். பெண்டுகளுக்கு கொடுக்க 4 மட்டை தேங்காயும், கன்யா பெண்ணிற்கு ஒரு மட்டை தேங்காயும் தேவை.

    இப்போது பெண்டுகளாக உட்கார போகும் வீட்டு பெண்கள் குளித்து, மடி புடவையை மடிசார் வைத்து கட்டி கொண்டு, தயாராக இருக்க வேண்டும்.
    சமையல் முடிந்த வுடன், வெளியிலிருந்து வரும் பெண்டுகளும் வந்த பின்னர், எல்லா பெண்டுகளுக்கும் தண்ணீர் கலந்து பிசைந்த மஞ்சள் பொடியை கொடுத்து கால்களில் தேய்த்து அலம்பி கொண்டு வருமாறு சொல்ல வேண்டும்.

    பின்னர் சந்தனம், குங்குமம் இட்டு கொள்ள கொடுத்த பிறகு தலையில் வைத்து கொள்ள தொடுத்த புஷ்பம் தர வேண்டும்.

    சிலர் வீடுகளில் சுமங்கலிகளின் கால்களை சுமங்கலி ப்ரார்த்தனை செய்யும் பெண்கள் அலம்பும் வழக்கமும் உண்டு. பெண்டுகளை ஓர் அறைக்குள் அனுப்பி கதவை சாற்றுகிறார்கள். சிறிதி நேரம் கழித்து கதவை திறந்து பெண்டுகளே வாங்கோ என்று அவர்களை கை தட்டி கூப்பிடுகிறார்கள். இலைகளில் வந்து அமருமாறு அழைக்க படுகிறார்கள். நாத்தனார் புடவை கலத்திற்கு அருகில் உள்ள இலையில் அமர வேண்டும்.
    தலை வாழை இலை போட வேண்டும். புடவை கலத்திற்கு மட்டும் இரு தலை வாழை இலை போட்டு பரிமாற வேண்டும். மருமகள்கள் தனி தனியாக சாப்பிடுவதற்கு செளகரியமாக இருக்கும்.


    உணவு பரிமாற தொடங்குகிறார்கள். எந்த பதார்த்ததையும் முதலில் புடவை கலத்திற்கு பரிமாறி பிறகு வரிசையாக பெண்டுகள் இலைகளுக்கு பரிமாற வேண்டும். தெற்கே பரிமாறி முடிக்க கூடாது.

    சாதம் வைத்து நெய் ஊற்றிய பின் புடவை கலத்திற்கு முன்னால் வைத்திருக்கும் தேங்காயை உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும். புடவை மீது அக்ஷதை போட்டு, அதற்கு தூபம் காட்டிய பிறகு சுமங்கலிகளுக்கும் தூபம் காட்ட வேண்டும். அதே போல் நெய் தீபம், கற்பூரம் இவற்றை வரிசையாக புடவை கலத்திற்கு காட்டி பிறகு சுமங்கலிகளுக்கும் காட்ட வேண்டும்.

    சிலர் வீடுகளில் தூபம், தீபம் இல்லை. கற்பூரம் மட்டும் புடவை கலத்திற்கு மட்டும் காட்டுகிறார்கள்.

    சந்தனம், புஷ்பம், அக்ஷதை எடுத்து கொண்டு கற்பூர ஆரத்தியை சுற்றி புடவை மீது போட வேண்டும். வீட்டில் உள்ள பெண்டுகள் தவிர மற்ற எல்லோரும் கற்புரத்தை கண்களில் ஒற்றி கொண்ட பிறகு வீட்டில் உள்ளோர் புடவை கலத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    அறிஞ்சவா, அறியாதவா தெரிஞ்சவா தெரியாதவா அவர்கள் குடும்பத்தில் இறந்த சுமங்களிகளின் பெயர் சொல்ல வேண்டும் எல்லோரும் வந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டும் என்று வேண்டி கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்.
    புடவை கலத்திற்கு உத்தரணியால் தீர்த்தம் ஊற்றி பின்னர் வரிசையாக எல்லா பெண்டுகள் உள்ளங்கைகளிலும் உத்தரணியால் நீர் ஊற்ற வேண்டும். அவசரபடாமல் , நிதானமாக, வயிறார சாப்பிடுங்கோ என்று பெண்டுகளிடம் சொல்ல வேண்டும்.

    இலைகளில் போடும் எல்லாவற்றையும் பெண்டுகள் மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும். அதனால் அவர்களை கேட்டு பரிமாறவும்.
    சாப்பிட்டு முடித்த பிறகு , புடவை கலத்தில் ஒரு உத்தரணி நீர் விட்டு , பிறகு சுமங்கலிகளின் உள்ளங்கையில் நீர் ஊற்ற வேண்டும். தீர்த்தம் வாங்கிய பிறகு , புடவை கலத்தை வடக்கு பக்கமாக சிறிது இழுத்து , பிறகு சுமங்கலிகள் இலையை விட்டு எழுந்திருக்கலாம்.

    கைகளை அலம்பி கொண்டு வந்த பின்னர் அவர்களை மனையில் அல்லது பாயில் உட்கார வைத்து தண்ணிர்விட்டு குழைத்த மஞ்சள் பொடியை கைகளிலும் கால்களிலும் தடவி கொள்ள கொடுக்க வேண்டும். கால்களுக்கு நலங்கு மஞ்சள் இட வேண்டும். குங்கும ம் சந்தனம் கொடுக்க வேண்டும்.

    நீர்மோர், பானகம், சுக்கு வெல்லம் கொடுக்க வேண்டும்.
    வெற்றிலை, பாக்கு, பழம், மட்டை தேங்காய், மஞ்சள், குங்குமம் சிமிழில், கண்ணாடி, சீப்பு, வளையல், கண் மை. தக்ஷிணை; ரவிக்கை துணி இவற்றை தட்டில் வைத்து , பெண்டுகளின் மடியின் தலைப்பில் வைக்க வேண்டும்.
    பின்னர் போட்டு கொள்ள வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு கொடுக்க வேண்டும். கன்யா பெண்ணிற்கும் பாவாடை சட்டை கொடுக்க வேண்டும்.
    இப்போது இந்த பெண்டுகளின் கையில் அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாத அக்ஷதை பெறுவார்கள்.

    இந்த பெண்டுகள் இன்று இரவு சாப்பாடு சாப்பிட கூடாது. பலகாரம், பழம், பால் தான் சாப்பிட வேண்டும்.

    மாலையில் இந்த புடவை கலத்திலிருந்து புடவையை எடுத்து கட்டி கொண்டு ,நமஸ்காரம் செய்து சிறிது நேரம் கழித்து இந்த புடவையை மடித்து கலத்தில் வைத்து விடுவார்கள். மறு நாள் காலையில் புடவையை எடுத்து கட்டிகொள்ள பயன் படுத்து வார்கள்.

    தஞ்சாவூர் வகையறா சுமங்கலி ப்ரார்த்தனை சமையல்.
    கடலை பருப்பு, தேங்காய் அறைத்த வெல்ல பாயசம்.; தயிர் பச்சடி--- வெள்ளரி/காரட்.
    வெல்ல பச்சடி- மாங்காய்/விளாம்பழம். கோசுமல்லி பயத்தம் பருப்பு; உப்பு, பச்சை மிளகாய், எலிமிச்சம்பழ,; கடலை பருப்பு, தேங்காய், சக்கரை;
    வாழைக்காய் கறி; பீன்ஸ் பருப்பு உசிலி; பூசணி/ புடலை/செள செள கூட்டு
    அல்லது அவியல்; பாகற்காய் பிட்லை; மோர் குழம்பு; நெய், பருப்பு; ரசம், தயிர், சாதம். போலி அல்லது சொஜ்ஜி அப்பம். வடை; கலந்த சாத வகை தேங்காய்; எலுமிச்சம் பழம். புளியோதரை; மாங்காய் ஊறுகாய், தேங்காய் துகையல்; தனி கூட்டு. சிலர் எள்ளு பொடி, திரட்டி பால் செய்கிறார்கள்.
Working...
X