அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்
தலைப்பைப் பார்த்ததும் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தலைப்பின் இரண்டு பகுதிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று பெரிய முரண்பாடு இல்லாதது போல் தோன்றும் ஆனால் பெரும் முரண்பாடு மட்டுமல்ல இந்தியப் பெரு நாட்டின் பொருளாதார சுரண்டலும் அவற்றுள் தொக்கி, மறைந்து நிற்கிறது.
வெளிப்படையாகப் பார்த்தால் அந்நிய முதலீடு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து- அரசுகள் அறிவிக்கும் புதுப்புது முதலீட்டு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு – வளர்ந்து வரும் உள்கட்டமைப்புகளில் மயங்கி- உலகின் பெரும் பணம் படைத்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்களிடம் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தியாவில் தொழில்களில் முதலீடு செய்ய மூட்டை கட்டி எடுத்து வருவது போல் தோன்றும்.
ஆனால் உண்மை அதுவல்ல.
வருவது அன்னியநாட்டின் செலாவணி பணம்தான். உலகின் முக்கிய செலாவணியாக இருக்கக்கூடிய அமெரிக்க டாலரிலோ, யுரோவிலோ, ஸ்டெர்லிங் பவுன்ஸ்களிலோ, சிங்கப்பூர் டாலரிலோதான் நமது நாட்டுக்குள் வந்து பங்கு வர்த்தகம் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இது அன்னியப்பணம்தான்.
ஆனால் அது அன்னியருடைய அவர்களுக்கு சொந்தமான பணம் அல்ல. நமது பணமே. இந்தக் கதகளியின் கதை இப்படிப்போகிறது.
அமெரிக்க, ஐரோப்பிய, சிங்கப்பூர் இன்னும் பிற நாட்டைச்சேர்ந்த முதலாளிகள் அவர்களுடைய பணத்தை நம்நாட்டில் முதலீடு செய்தால் அது அன்னியப்பணமாகவும் இருக்கும் அன்னியர் பணமாகவும் இருக்கும். ஆனால் இந்த நாட்டு ஏழைகளைச் சுரண்டி, ஏமாற்றி, ஊழல் செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் நாட்டை விட்டு வெளியேறி அந்நிய முதலீடு என்ற பெயரில் அரிதாரம் பூசி, முகமூடி போட்டு நமது நாட்டுக்குள்ளே மீண்டும் வருகிறது. புரியும்படி ஆதிரையின் மொழியில் சொன்னால் நம் வீட்டில் கிண்டப்பட்ட பணியார மாவு – திருடப்பட்டு வெளியே போய் – வேறு இடத்தில் முறுக்காகச் சுடப்பட்டு - மறவையில் அடுக்கப்பட்டு ஜெகதாம்பாள் தலையில் தூக்கிவைக்கப்பட்டு - சீராக சம்பந்தி வீட்டுக்கு வருகிறது.
நம்மை ஆளும் அதிகாரவர்க்கத்தினர்,அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம்- , உயர் அரசுப்பதவி வகிப்பவர்களாக இருக்கலாம் -, முதல்வர்களாகவும் அவர்களின் புதல்வர்களாகவும் இருக்கலாம், மனைவிகளாகவும், துணைவிகளாகவும்,தோழிகளாகவும், தோட்டக்காரர்களாகவும், செயலார்களாகவும், அல்லக்கைகளாகவும், அமைச்சர்களின் ஆசைக்குகந்தவர்களாகவும் இருக்கலாம். அரசுக்கு சேரவேண்டிய பணத்தை அல்லது அரசு திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தில் இருந்து இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒதுக்கிய பணத்தை- கட்டைப்பஞ்சாயத்து செய்து வாங்கிய பங்கை- நிலபேரம் செய்து வாங்கிய கமிஷனை- அரசு ஒப்பந்தங்கள் பெற்றுக்கொடுத்து வாங்கிய கையூட்டுகளை- பணி இடமாற்றம் செய்து கொடுத்து கிடைக்கும் இலஞ்சப்பணத்தை- கல்லூரிகளில் இடம் வாங்கித்தருவதாக பெற்றுக்கொள்ளும் அன்பளிப்புகளை- ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெரும் பர்செண்டேஜ்களை- இப்படி கணக்கில் காட்டமுடியாத கறுப்புப்பணத்தை – கணக்கிலே கொண்டு வருவதற்காக கையாளும் சூழ்ச்சிதான் இந்த அந்நிய முதலீடு என்ற ஆளை மறைக்கும் தலைக்கவசம். ஆந்தை விழியனுக்கு அழகு சுந்தரம் என்று பெயர்- மாங்காய் மடையனுக்கு மதியழகன் என்று பெயர்.
லஞ்சப்பணம் மட்டுமல்ல. அதற்கு ஒரு சகோதரியும் உண்டு அவள் பெயர் வரி ஏய்ப்பு.
2009- 2010 மற்றும் 2010-2011 ஆகிய நிதியாண்டுகளில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் 22.5 கோடிப்பேர். அவர்கள் ஏய்ப்பு செய்த தொகை இரண்டாயிரம் கோடி. வருமானவரித்துறை இந்த புள்ளிகளை எப்படி கணக்கிடுகின்றன என்றால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நடைபெற்ற வர்த்தக பரிமாற்றங்களை கணக்கிட்டு இவ்வளவு வரி வசூலாகி இருக்கவேண்டும் ஆனால் இவ்வளவுதான் வசூல் ஆகி இருக்கிறது என்று பாக்கியை கணக்கிட்டுவிடுகின்றன. வந்திருக்கவேண்டியதில் குறைவுதான் இரண்டாயிரம் கோடி. இது தவிரவும் பத்திரப்பதிவு முறைகேடுகள், சுங்கவரி தில்லுமுல்லுகள், உற்பத்திவரி கள்ளக்கணக்குகள் இவைகள் மூலம் பெரும் நிறுவனங்கள் மறைக்கும் ஏய்க்கும் வரிகளின் அளவுகள் கணக்கில் அடங்காதவை ; காட்சிக்கு தெரியாதவை. இப்படி மறைக்கும் உக்திகளையும், ஏய்க்கும் வழிமுறைகளையும் சொல்லித்தருபவர்களுக்கு சிறந்த ஆடிட்டர் என்று பெயர்.
இப்படி அதிகார துஷ்பிரயோகத்தில் திரட்டப்படும், லஞ்சப்பணமும், வரி ஏய்ப்பின் மூலம் உருவாகும் பணமும் சேர்த்து இந்த நாட்டில் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தின் அளவு ரூபாய் 25 லட்சம் கோடி.
இன்னொரு பக்கம் நாம் பார்ப்போமானால் போபர்ஸ் வெளியிடும் உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியர்கள் ஐம்பது பேர். முன்னர் நாற்பதாக இருந்தவர்கள் இப்போது ஐம்பதாகி விட்டார்கள். (சுல்தான் காக்கா காதைக்கடிக்கிறார் இந்த பட்டியலில் சுட்டெரிக்கும் டிவி அதிபர் 136 – வது இடமாமே என்று. ஆமாம் காக்கா! உலகபட்டியலில் 136- வது இடம்- இந்தியபட்டியலில் 16 வது இடம். அந்த விபரம் இன்னொரு ஆக்கத்தில். பின்னால் வரலாம்.) ஆனால் ஐம்பதுபேர் உலகப்பணக்காரர்களாக இருக்கும் நாட்டின் சொத்துவரி வசூல் எவ்வளவு தெரியுமா வெறும் 500 கோடிதான்.
இப்படி இந்த நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப்பணம், பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் இந்நாட்டினுள் அந்நிய முதலீடாக் நுழைகிறது. இப்படி பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் வரும் பணத்துக்கு ஒரு வரி விதிக்கலாமே அதன்மூலம் நாட்டுக்கு ஒரு வருமானமாக வருமே என்று நீங்கள் கேட்பது சரிதான். அதுவும் கிடைக்காது என்பதே சட்டரீதியான உண்மை. அதாவது கொப்பரை போட தேங்காய் வாங்கி உடைக்கும்போது அந்த தேங்காயும் அழுகல் தேங்காய் அதன் சிரட்டைகூட அடுப்பெரிக்க கிடைக்காது என்ற நிலை.
வெளிநாட்டில் நடக்கும் பங்கு வர்த்தக பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த தேவை இல்லை என்று சமீபத்தில் ஓடோபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இந்திய வருமானவரி சட்டத்தின் 163 (1-C) பிரிவு இத்தகைய பரிமாற்றங்களுக்கு செல்லாது என்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு. அதாவது பணமும் நமது பணம் – அது வரும் வழிக்கு வரியும் விதிக்க முடியாது என்பது ‘ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா” கதைதான். கருப்பும் வெள்ளையாகும் அதற்கு வரியும் கிடைக்காது.
மேலும் இந்தியா சில நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூர், மொரிசியஸ், மாலத்தீவு, முதலிய நாடுகள் இதில் அடக்கம். நாட்டைவிட்டு ஹவாலா மூலமாக வெளியேறும் பணம் இத்தகைய நாடுகளில் போலி கம்பெனிகள் தொடங்க பயன்பட்டு, அந்த கம்பெனிகளின் பெயரால் முதலீடும் செய்யப்பட்டு , அந்த முதலீடுகளுக்கான இலாபங்களும் வரிவிதிப்பின்றி வெளியேறுகின்றன. இப்படி நிருவனங்களை போலியாக தொடங்கி பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் அந்நாடுகளில் இருககிறார்கள். அவர்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இத்தகைய போலி கம்பெனிகளின் சில பெயர்கள்தான் 2- ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிவந்தன.
என்றைக்கு உண்மையிலேயே அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பணத்தை நம் நாட்டு தொழில்களில் முதலீடு செய்கிறார்களோ அன்றுதான் நாம் அந்நியர் முதலீடுகளை அந்நிய முதலீடுகளாக பெற்றுள்ளோம் என்று மார் தட்ட முடியும். அதுவரை காகிதப்பூவை முகர்ந்து பார்த்துக்கொண்டும் சைத்தானுக்கு தேவதை பட்டம் சூட்டிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான்.
இந்த முறைகேடுகள் உளவுத்துறையை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு தெரியாதா? நிதி அமைச்சருக்கு தெரியாதா? நாட்டின் எங்கோ ஒரு மூலையில் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து அரைகுறையாக படித்துவிட்டு இப்படி எல்லாம் சிந்திக்கும் நமக்கு தெரிந்தது ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும்- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்- பரம்பரையாக செல்வத்தில் புரண்டு வரும் செட்டிநாட்டு சீமான்களுக்கும் தெரியாதா? தெரியும்.
ஆனால் அதைவிட ஒரு கசப்பான உண்மை என்னவெனில் அரசியல் பதவி சுகங்களுக்காக அவர்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன – சிந்திக்கும் சக்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய முறைகேடுகளுக்கு அவர்கள் சாட்சியாக மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களாகவும் இருப்பார்களோ என்பது நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது.
அத்துடன் இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம் நம்பிக்கொண்டிருப்பதுபோல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி- 8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே. உலகவங்கியில் என்றைக்கு கடன்வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கை எழுத்துப்போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகிவிட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மானில ஆட்சியாளர்கள். இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம் (CONSUMER CULTURE) ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன.
செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், அவர்களின் குடும்பத்தினர், வேண்டியவர்கள், மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் சுயநல சுரண்டல் போக்குக்கு நாட்டின் பொருளாதாரம், ஏழை, நடுத்தர வர்க்கத்தின் நலன் அடகுவைக்கப்படுகிறது. ஒருபக்கம் மிகச்சிலர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். மறு பக்கம் ஏழ்மை வளர்ந்து கொண்டே போகிறது. இந்த இரு வர்க்கத்தின் எண்ணிக்கையும் வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது. இதை தட்டி கேட்கும் நிலையில் இருப்பவர்கள் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்பவர்களுடைய சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பு ஏறிக்கொண்டே போகிறது. நாமோ அவர்களுக்கு வாழ்க கோஷம் போட்டு வாழ்த்துப்பாவும் பாடிக்கொண்டிருக்கிறோம்.