Announcement

Collapse
No announcement yet.

உனக்கென வாழாதே!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உனக்கென வாழாதே!

    வேள்விச்சாலைக்குள் புகுந்தான் அந்த இளைஞன். அங்கே ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. பசுக்கள் என்றால் அவனுக்கு அலாதி பிரியம். அதை அவிழ்த்தான். ஓட்டிக் கொண்டு விளையாடச் சென்றான். வேள்விப் பசுவை ஓட்டிச் செல்கிறோமே என்ற குற்ற உணர்வு அவனுக்குள் எழவில்லை. திடீரென ஓரிடத்தில் பசு வேகமாய் துள்ளியது. இளைஞனின் கையிலிருந்த கயிறு விடுபட்டது. பசு பாய்ந்தோடியது. இளைஞன் அதை விரட்டினான். மிரண்டோடிய பசு எதிரே வந்த ஒரு அந்தண ஆசிரியரை முட்டித் தள்ளியது. அவர் அந்த இடத்திலேயே உயிர்விட்டார். இளைஞனுக்கோ வருத்தம். விஷயமறிந்து இளைஞனைப் பிடித்தனர் ஊரார். அவனது வளர்ப்புத்தந்தை இளம்பூதியிடம் கூட்டிச் சென்று நியாயம் கேட்டனர். இளம்பூதி கொதித்து விட்டார். அட பொறுப்பற்ற பயலே! உன்னை நான் இவ்வளவு காலமும் வளர்த்ததற்கு எனக்கு செய்த நன்றியா இது. நீ யார் வீட்டு பிள்ளை, உன் குலம் என்ன, கோத்திரம் என்ன என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் வளர்த்தேனடா! இன்றோ நீ தீராத பெரும்பழியைச் செய்தாய். அந்தணர்களால் இயற்றப்படும் வேள்விக்கு கட்டப்பட்டிருந்த பசுவை அவிழ்த்ததால் பாவம் பெற்றாய். அது இன்னொரு அந்தணரை முட்டியதால், வந்த பாவம் இன்னும் கொடியது. இனி, நீ என் வீட்டில் இருக்கக்கூடாது. ஓடிவிடு, என்று விரட்டி விட்டார்.

    இந்த பரிதாபத்திற்குரிய இளைஞனின் பெயர் ஆபுத்திரன். காசியில் வசித்த அபஞ்சிகன் என்ற அந்தண ஆசிரியர் சாலி என்பவளைத் திருமணம் செய்திருந்தார். சாலி தடம் மாறிப் போனதால், யாரோ ஒருவனின் பிள்ளையை வயிற்றில் சுமந்தாள். மனசாட்சி உறுத்தியதால், கணவனைப் பிரிந்து கன்னியாகுமரி கடலில் நீராடி பாவம் போக்க வந்தாள். நீண்ட கால பயணத்தில் ஓரிடத்தில் பிரசவ வேதனை ஏற்பட, ஒரு மறைவிடத்தில் குழந்தையைப் பெற்றாள். குழந்தையை அங்கேயே போட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தாள். அங்கு வந்த பசுக்கள் அக்குழந்தையின் வாயில் பால் சொரிந்தன. அவ்வழியே வந்த மதுரையைச் சேர்ந்த இளம்பூதி குழந்தையின் எழில் கண்டு தூக்கி வந்து வளர்த்தார். பசுக்கள் பால் கொடுத்த பிள்ளை என்பதால் ஆபுத்திரன் என பெயர் சூட்டினார். அவன் தான் இன்று இளைஞனாகி வீட்டை விட்டு வெளியேறியவன். பிழைக்க வழியற்ற ஆபுத்திரன் மதுரை நகர தெருக்களில் பிச்சையெடுத்து பிழைத்தான். தானும் உண்டு, தன்னிலும் கஷ்டப்பட்டவர்களுக்கு மீதியைக் கொடுத்தான். இதுகண்டு பெருமைப்பட்ட சிந்தாதேவி என்ற தெய்வம் அவனது சேவையைப் பாராட்டி அமுதசுரபி என்ற அள்ள அள்ளக் குறையாத பல்சுவை உணவு பாத்திரத்தை பரிசாய் கொடுத்தது. அவனும் மகிழ்வுடன் தர்மம் செய்து வந்தான்.

    இதுகண்டு மகிழ்ந்த இந்திரன் பூமிக்கு வந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்றான். மற்றவர் மகிழ்ச்சி தவிர வேறு எதுவும் தனக்கு தேவையில்லை என ஆபுத்திரன் கூற, இந்திரன் கோபம் கொண்டான். தக்கஅளவு மழை பெய்ய வைத்து மதுரையை பஞ்சமில்லா நகராக்கி விட்டான். யாருக்குமே உணவு தேவைப்படாததால், ஆபுத்திரன் பிறநாடுகளுக்கு புறப்பட்டான். ஒரு கப்பலில் ஏறி புறப்பட்ட போது காற்றின் காரணமாக ஒரு தீவில் கப்பல் நின்றது. ஆபுத்திரன் தீவில் இறங்கி சுற்றிப் பார்க்கச் சென்ற போது, கப்பல் சென்று விட்டது. அங்கே மனிதர்களே இல்லை. பொதுநலனுக்காக தெய்வத்தால் வழங்கப்பட்ட அப்பாத்திரம் தனக்கு மட்டுமே பயன்படுவதை அவன் விரும்பவில்லை. யார் கையிலாவது கிடைத்து பிறருக்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில், கோமுகி நதியில் அதை மிதக்க விட்டான். பிறகு பட்டினியாகவே சில காலம் கிடந்து உயிர் நீத்தான் அந்த உத்தமன்.
Working...
X