Announcement

Collapse
No announcement yet.

செந்தில் மேவிய சேவகன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • செந்தில் மேவிய சேவகன்

    சேவகன் என்பதற்கு வீரன், பராக்ரமசாலி, தொண்டு புரிபவன் போன்ற பொருள்கள் உண்டு. யாருமே அண்ட முடியாத சூரபத்மனிடம் வீரபாகுவைத் தூதனுப்பிய வீரனாகிய செந்தில் ஆண்டவனை அருணகிரியார், 'செந்தில் மேவிய சேவகன்' என்று அழைக்கிறார். திருவாசகம், சிவபெருமானை, 'குதிரைச் சேவகன்' என்று அழைக்கிறது. சிலப்பதிகாரம் ராமபிரானை, 'தொல்லிலங்கைக் கட்டழித்த சேவகன்' என்று குறிப்பிடுகிறது. அநுபூதியில் 'மயிலேறிய சேவகனே', 'திதிபுத்திரர் வீறடு சேவகனே' என்றும் திருப்புகழில் 'நீபச் சேவகனே', 'மயூரச் சேவகனே', 'திருச்செந்தூர் வரு சேவகனே' என்றும் அருணகிரியார் பாடுகிறார். 'சேவகன் வகுப்பு' என்ற பெயரிலேயே தனி வகுப்பையும் பாடியுள்ளார்.

    இந்த வீரத்தன்மை நம் முருகனுக்கு 'பரம்பரைச் சொத்து' என்கிறார் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளை அவர்கள். அருணகிரியாரின் பாடல்களிலேயே இதற்கான விளக்கம் கிடைக்கிறது. அவன் தந்தை யார்?
    "உரமது பெரிய திரிபுரம் எரிய
    உயர் கன கிரியை வளைத்தோர் புதல்வா!" [சேவகன் வகுப்பு]
    அவனது தாயார் பெருமை என்ன?
    "கூற்று மரித்திடவே உதை பார்வதி"
    "கூற்றினை மோதிய பத சத்தினி காலாந்தகி" [திருப்புகழ்]
    [அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில், சிவனது இடப்புறம் பார்வதி இருப்பதால் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவர் எங்கள் பார்வதி என்பார்கள் சாக்தர்கள்.]
    முருகனது மாமன் எப்படிப்பட்டவர்?
    "ஒருபது சிரமும் இருபது கரமும்
    விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா!" [சேவகன் வகுப்பு]
    சேவகன் வகுப்பு பாடலில்
    "வளைகடல் கதற, நிசிசரர் மடிய
    மலையொடு பொருத முழுச் சேவகனே!"
    என்று கூறுகிறார். ஏன் முருகனை 'முழுச் சேவகன்' என்கிறார்?
    வளை கடல் - கன்ம மலம்
    நிசிசரர் - ஆணவ மலம்
    மலை (கிரௌஞ்சம்)- மாயா மலம்
    இம் மும்மலங்களையும் ஒருசேர அழித்த செந்திலாண்டவனை 'முழுச் சேவகன்' என்றழைப்பதில் மிகையேதுமில்லையே!

    "கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய்! ஒரு கோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
    வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!
    -கந்தர் அலங்காரம்.
    "வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
    கந்தனென்று சொல்லக் கலங்குமே! செந்திநகர்ச்
    சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
    மேவ வாராதே வினை."
    -தனிப்பாடல்.

    சேவகன் வகுப்பு
    இருபிறை எயிறு- இரண்டு பிறைத் திங்கள் போன்ற பற்களினின்றும்
    நிலவு எழ: மிக்க ஒளி உண்டாக
    உடலம்: உடம்பானது
    இருள்படு சொருபம் உடை கோ- இருண்ட நிறத் தோற்றம் உடைய யமன்
    [சிவ லோகத்தின் சட்ட புத்தகமான, விதிவிலக்குகளைக் கற்பிக்கும் வேதநெறியை மீறி நடந்தவர்களைத் தண்டிக்கும் உத்தமமான பெரிய நீதிபதியாதலின் யமன் உடம்பை உடம்பென்னாது சொருபம் என்கிறார்.]
    விடவே- கட்டளையிட்டு அனுப்ப
    இறுகிய கயிறுபட- முறுக்கேறிய பாசத்தில் [சுவாசத்தில் கட்டியிழுக்கும் சூக்ஷ்ம கயிறு] உயிர்கள் அகப்பட
    வினை முடுகி- உள்ள தம் தொழிலில் விரைந்து
    எமபடர்- வந்த யம தூதர்கள்
    பிடரி பிடித்தே- பிடரியில் கை வைத்து பிடித்தபடியே
    கொடு போய்- கொண்டு சென்று
    அருமறை முறையின் முறை முறை கருதி- அருமையான வேதம் உரைத்த விதியின்படி, முறையே தவறு படாமல் உன்னைச் சிந்தித்து
    அதர் இடை- யமனிடம் கொண்டு போய் நிறுத்துவதற்குமுன் இடைவழியிலேயே
    ஒறுத்தால் வகையால்- பல வகையாகத் தண்டித்தால்
    அறிவொடு மதுர மொழியது குழறி- அறிவும் இனிய சொல்லும் தடுமாறி
    அலமறு பொழுதில் அழைத்தால் வருவாய்- கலங்குகின்ற அக்காலத்தில் முருகா என்று அழைப்பேனாதலால் அவ்வமயம் உடனே வந்து அருள் புரிவாயாக.
    ஒருபது சிரமும் இருபது கரமும் விழ- (இராவணனது) பத்துத் தலைகளும் இருபது கரங்களும் அற்று விழும்படி
    ஒருபகழி தொடுத்தோன் மருகா- ஒப்பற்ற பிரம்மாஸ்திரத்தை செலுத்திய (ராம பிரானாக அவதரித்த) திருமாலின் மருகனே!
    உரமது பெரிய திரிபுரம் எரிய- வன்மை மிக்க முப்புரங்களும் எரிந்து சாம்பலாக
    உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா- உயர்ந்த பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபிரானுடைய புதல்வனே!
    மருவளர் அடவி வனிதையர் பரவ- இயற்கை மணம் பெருகும் வனத்திலுள்ள அழகான வேட்டுவ மகளிர் வழிபட (அவர்தம் வழிபாட்டை ஏற்று)
    மரகத இதணில் இருப்பாள் கணவா- வள்ளியார்க்கு வேடர்கள் அமைத்த பசுமையான பரண் மேல் தினை காத்த கண்ணும் கருத்துமாய் இடத்தைவிட்டு அகலாது இருக்கும் வள்ளியின் நாயகனே!
    (குறவர் இளவஞ்சி மருவும் அழகா)
    வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே!- உலகை வளைத்திருக்கின்ற கடலானது கதறி முறையிடவும், அசுரர் மடியவும், மலையுடன் போரிட்ட முழு வீரனே!
    https://www.youtube.com/watch?v=0E1NeR2rw2w&feature=player_detailpage&utm_source=Murugan+Bhakti&utm_campaign=fcf5282cde-_2_3_12_4_2013&utm_medium=email&utm_term=0_4dfdc03dcb-fcf5282cde-81630173

    Courtesy: Smt.Chitra moorthi
Working...
X