Continued
11
‘அஞ்ஞானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்?’ என்று கேட்டால் -நீ ‘எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மயாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய இன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியதும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப்படாதே.
12
கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் – ‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்.’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்.)
எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத் தகார். மாமிச போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.
‘அஹிம்ஸா பரமோ தர்ம’ :- ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.
இயற்கை விதியை அனுசரித்து வாழவேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்தமாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் ‘common sense’ என்பர். சுத்தமான, மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.
சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின்வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், ‘நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்கவேண்டும்’ என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும். நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.
நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
13
இனி, வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக்கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச்சரியமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர். ‘ஆகா! அஃதெப்படிச் சொல்லலாம்? அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்ன?’ எனில் – வேண்டா; அதனை விட்டுவிடுக.
பரமாத்மா ஜீவாத்மா இருவருமே உலக காரியங்களில் தளைப்பட்டுத் தானிருக்கிறார்கள். கீர்த்தி பெற்ற வங்க கவியாகிய ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் கடவுளை நோக்கி ‘ஐயனே, நீயே சம்சார வலையில் அகப்பட்டிருக்கிறாயே? யான் இதினின்றும் விடுதலை வேண்டும் பேதைமையென்னே?’ என்று பாடியிருக்கிறார். சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள் செயலெல்லாம் சிவன் செயல். ‘அவனன்றி ஓரணுவு மசையா’ தெனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்டீர்.
கீதையிலே பகவான் சொல்லுகிறான் – “அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையன்றும் எனக்குக் கிடையாது, ‘அடையத்தக்கது, ஆனால், என்னால் அடையப்படாதது‘ எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்துகொண்டுதான் இருக்கிறேன்” என.
ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் – “நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்துகொண்டேயிருக்கிறேன்” என.
கடவுள் ஓயாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான்.
நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது. எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக்கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.
ஆனால், ‘கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிக கஷ்டமாக்கக்கூடிய மனிதரும் இருக்கக்கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதிவிலக்கென்றே கருதத்தகும்.
கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே ஸ்ரீபகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.
பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.
துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?
“அறந்தா னியற்றும் அவனிலுங் கோடி யதிகமில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையோன்
மறந்தான் அறக்கற்று அறிவோ டிருந்துஇரு வாதனையற்று
இறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே!”
இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால் இங்ஙனம் கூறினார். உள்ளத் துறவு செய்தற்குரியதென்றும் மனைத் துறவு செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகிறேன்.
பாவமாவது யாது? புண்ணியமென்பதெதனை?
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்க தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்.
ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
‘இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை’ = கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான்.
கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.
“அங்கமே நின் வடிவமான சுகர்கூப்பிட நீ
எங்கும் ‘ஏன்? ஏன்?’ என்ற தென்னே பராபரமே?”
என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
எங்ஙனமேனும், கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம்மரிஷி காட்டு வழியே, ‘கடவுளே, கடவுளேயோ!’ என்று கதறிக்கொண்டு போயினராம். அப்போது அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்கு – எல்லாப் பொருள்களும் ‘ஏன்? ஏன்?’ என்று கேட்டனவாம்.
எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம’ உலகமெல்லாம் கடவுள் மயம் என்று வேதம் சொல்லும் கொள்கையையே மேற்படி கதை விளக்குகிறது.
இங்ஙனமாகையில் வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது, காட்டிலே போய், உடம்பை விழலாக வற்றடித்து மடித்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களுக்கிரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?
சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலொக்குமன்றோ, ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?
‘இல்லற மல்லது நல்லறமில்லை’
தாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதனைப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரியவில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தெளிவுபட உரைத்துவிடவில்லை. முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார்.
தாயுமானவர் சொல்லுகிறார்:
“மத்த மதகரி முகிற்குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே”
இதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’
இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார சுகங்கள்கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றும், ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லையென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள், ‘வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இகலோக வாழ்வைத் துறந்துவிட்டானாகிறான்’ என்ற பிழைக் கருத்து கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில், சுற்றம், துணை, இனம் ஏதும் இல்லாதவர்களாய், பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகா பரிதாபமானது. இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும், வரம்பற்ற ஜீவ காருண்யமுடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தேட்டம் இருக்கத்தான் செய்கிறது.
எனினும், இவர்களில் மிகப்பெரிய மகான்கள்கூட, உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் எனக் கூறத்தகாது. வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வேத காலத்தில், சந்நியாசம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்துகொண்டு, மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால், குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்றுவந்தது. மஹாபாரதத்திலும் மற்றப் பூர்வ பூராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்துகின்றன. மேலும் சுவாமி விவோகானந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம் இவை வேத ரிஷிகளால் சமைபட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைபட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்று மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம்.
இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய மிகப்பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.
ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்துவதாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. உபநிஷத்தில் சில, மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டுமுரைக்குமிடத்தே, வேத பாஷையைக் காணலாம். மற்றபடி உபநிஷத்துக்கு முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கிறது.
இங்ஙனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.
இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்டமான நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வோர் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயணரென்ற வித்தியாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது.
பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருத்தத்திலே என்றால் பெரும்பாலும் வேதப் பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது.
வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே காலஞ்சென்றவராகிய சுவாமி தயாநந்த சரஸ்வதி வேதத்துக்கு தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து அதற்கிணங்க ‘ஆரிய சாமஜம்’ என்ற புதுமதக் கொள்கையன்று ஸ்தாபித்தார்.
ஆனால், சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் சாயணபாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது.
சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார். எனினும், சாயணாச்சாரியர்கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்துவிட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள்கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள்.
மேற்படி யாகங்களே பெரும்பாலும் பல வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழியென்ற போலி வைதிகரைப் பழிசூட்டி, அந்தக் கொலைச் சடங்குளால் மனிதன் நரகத்துக்குப் போவான் என்பதை நிலை நாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்து கொண்டார். ஷண்மத ஸ்தாபகராகியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்திவிட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருக்ஷத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார். இங்ஙனம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே, சங்கராச்சாரியாரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர் ‘பிரசன்ன பௌத்தர்’ (மறைவுபட்ட பௌத்தர்) என்று சொன்னார்கள். எனினும் அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் பரமசிவனின் அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.
பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில மனிதர் துறவிகளாகவும் சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தவராகவும் இருந்தனர்.
துறவிகள் மடங்களை இத்தனை தாராளமாகவும் இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதம். எங்கே பார்த்தாலும் இந்தியாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்துவிட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபகாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமாக கருதப்பட்டது. துறவிகள்தாம் முக்கியமான ஜனங்கள்! மற்ற ஜனங்களெல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம்! மடந்தான் பிரதானம். ராஜ்யம் அதற்குச் சாதனம்.
பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வ ஜன சமத்துவம் என்ற இரு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தில் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டுப் புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்த மதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பிற்காலத்தில் பௌத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும் குருக்களுடைய சக்தி மிஞ்சிப் போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும், பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அதுமுதல் ஐரோப்பாவில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதிருந்த செல்வாக்கும் அதிகாரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. இது நிற்க.
ஹிந்து தர்மம் புத்த மதத்தை ஜெயிக்கவில்லை யென்றும், பௌத்த மதமே ஹிந்து மதத்தை ஜெயித்து விட்டதாகவும் சில மாதங்கள் முன்பு, காரைக்குடியில் ஒரு நண்பர் என்னிடம் தாக்கினார். சரித்திரத்திலும் பிரத்யக்ஷத்திலும் ஐயமற புத்த மதமழிந்து, ஹிந்து மதம் வெற்றி பெற்று நிற்கும் செய்தி விளங்குகையில், பட்டப் பகலை இரவென்று கூறுதல் போல், மேற்படி காரைக்குடி நண்பர் சொல்லியது பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்லவந்த முகாந்தரம் யாதெனில் :- ‘அவர் சொல்லியது பச்சைப் பொய்யன்று. அதில் சிறிதளவு உண்மையும் கலந்திருக்கிறது. எங்ஙனமெனில், பௌத்த மார்க்கத்தை களைத்தெறிந்து மிஞ்சி நின்ற ஹிந்து மதம் பல அம்சங்களில் பௌத்த மதக் கொள்கைகளை முழுமையாகவும் பல அம்சங்களிற் சற்றே மாற்றியும் தன்னுள்ளே சேர்த்துக் கொண்டுவிட்டது. ஆகவே பௌத்த மதம் இந்நாட்டில் இருந்த இடம் தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் மடிந்து போகவில்லை. அதன் கொள்கைகளில் பல ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.’
இந்தச் செய்தியையே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவும் அதிச யோகதியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய் வடிவத்தில் கூறினார். புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல் – இவை இரண்டுமே பௌத்த மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில் முக்கியமானவை என்று கருதப்படுகின்றன. ஆனால், இக்கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்துதான் ஹிந்து மதத்துக்குள் புகுந்தனவென்று கூறுவதற்குப் பலமான ஆதாரங்களில்லை. புனர் ஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத்தக்க படியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று.
பிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரார்த்தகமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள குறைகளிலொன்றாக இயல்கிறது. சாதாரணமாக ஒருவனுக்குத் தலை நோவு வந்தாலுங்கூட, அதற்குக் காரணம் ‘முதல்நாள் பசியில்லாமல் உண்டதோ, அளவு மீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரில் ஸ்நானம் செய்ததோ’ என்பதை ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப் பயனென்று ஹிந்துக்களிலே பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையையும், பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும்,
அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்கு தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதிலும் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால், மண விஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபக்ஷங்களையும் கண்டு, அதற்கு நிவக்ஷணம் தேட வழி தெரியாத இடத்திலேதான், பெரும்பாலும் இந்த பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாக பிரஸ்தாபத்துக்கு வருகிறது. அற்பாயுள், நீண்ட ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, பாடத் தெரிதல், அது தெரியாமை, படிப்புத் தெரிதல், அது தெரியாமை முதலிய எல்லாப் பேதங்களுக்கும் பூர்வ ஜன்மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்தரமாகக் காட்டினார்களெனினும், பண விஷயமான வேறுபாடுகளே இவையெல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும் நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து, அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே காரணம் தேடுவதும், அடுத்த ஜன்மத்திலே பரிகாரந் தேடுவதுமாகிய விநோதத் தொழிலிலே தூண்டின.
எனவே, இந்த பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.
பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று. புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும் கற்பனைச் சக்தியின் தெளிவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில் வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்கவேண்டும்.
இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் ‘மாயா’ என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன; இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன என்றதொரு வாதம் எழுந்தது. ‘இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்’ என்ற கட்சி ஏற்பட்டது.
ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்துவிட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.
இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
Source: Sangatham.com