தெரிந்து கொள்வோம் வாங்க!
இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது?
ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள மின்னின் வீரியம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீரியத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.