Information
6. திரு வேங்கட மாலை 074/104 : வேங்கடமே தோயும் தயிர்க்கா தாம் கட்டுண்டார் ஊர் !
ஆயும் துறவறத்தை அண்டின முத்தண்டினரும் , வேயும்
கிளை விட்ட வேங்கடமே - தோயும்
தயிர்க்காத்தாங்கட்டுண்டார் ; தாரணியில் தந்த
உயிர்க்காத்தாங்கட்டுண்டார் ஊர்
பதவுரை :
தயிர்க்காத்தாங்கட்டுண்டார் - தயிர்க்கா + தாம் + கட்டுண்டார்
உயிர்க்காத்தாங்கட்டுண்டார் - உயிர் + காத்து + ஆங்கு + அட்டு + உண்டார்
ஆயும் துறவறத்தை அண்டின ஆராய்ந்து கூறப்பட்ட சன்யாச ஆஸ்ரமத்தை ஏற்ற
முத்தண்டினரும் திரி தண்டத்தை ஏந்திய முனிவர்கள்
கிளை விட்ட சுற்றத்தாரைக் கை விட்ட இடமும்
வேயும் மூங்கில்கள்
கிளை விட்ட கிளை பரப்பி செழித்து வளரும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
தோயும் தயிர்க்கா தோய்த்த தயிரை திருடி உண்டதற்காக
தாம் கட்டுண்டார் தாம் உரலில் கட்டுப்பட்டவரும் ,
தாரணியில் தந்த உயிர் பூமியில் படைக்கப்பட்ட உயிர்களை
காத்து ஆங்கு அட்டு உண்டார் பாதுகாத்து அதன் பின் அழித்து விழுங்கிய திருமாலின்
ஊர் இருப்பிடம் ஆகும்
--
V.Sridhar