Information
6. திரு வேங்கட மாலை 070/104 : வேங்கடமே காக நயனம் கொண்டார் காப்பு !
கான் ஓடு அருவி கனகமும் முத்தும் தள்ளி ,
மீனோவெனக் கொழிக்கும் வேங்கடமே - வானோர்கள்
மேகனயனங்கொண்டார் வேணி அரன் காண்பு அரியார் ;
காகனயனங்கொண்டார் ; காப்பு
பதவுரை :
மேகனயனங்கொண்டார் - மேகன் + அயன் + அ ம் + கொண்டு + ஆர்
காகனயனங்கொண்டார் - காக + நயனம் + கொண்டார்
கான் ஓடு அருவி காடுகளில் ஓடும் நீர் அருவிகள்
மீ நோவு எனக்கு ஒழிக்கும்மிகுதியான எனது பிறவித் துன்பத்தை போக்கும் இடமும்
கனகமும் முத்தும் தள்ளி பொன்னையும் முத்தையும் அலைத்து எறிந்து
மீனோ எனக் கொழிக்கும் நக்ஷத்திரங்களோ என சொல்லும்படி ஒதுக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
வானோர்கள் மேகன் அயன் தேவர்கள் , இந்திரன் , பிரமன் ,
அம் கொண்டு ஆர் வேணி அரன் கங்கையை தரித்த சடையை உடைய சிவன் எல்லோரும்
காண்பு அரியார் காண முடியாதவரும் ,
காக நயனம் கொண்டார் காகாசுரனின் கண்ணைப் பறித்தவருமான திருமால்
காப்பு உயிர்களைப் பாதுகாக்கும் இடம் ஆகும்
V.Sridhar