5. திருவரங்கத்து மாலை - 78/114 : அந்தர்யாமி வைபவம்
தெள்ளும் புனல் பொன்னி நல நீர் அரங்கர் சிலாகிக்குமாறு
எள்ளும் கரந்து உறை எண்ணெயும் போல் , எண் இல் கோடி அண்டத்து
உள்ளும் புறம்பும் ஒழியாது நின்றும் , உகங்கள் தொறும்
கொள்ளும் திரு உரு எல்லாம் - அவர் அறி கோலங்களே
பதவுரை :
தெள்ளும் புனல் பொன்னி தெளிந்த நீரை உடைய காவிரி நதியின்
நல் நீர் அரங்கர் நல்ல நீர் சூழ்ந்த திரு அரங்க நாதர் ,
சிலாகிக்குமாறு யாவரும் புகழும்படி
எண் இல் கோடி அண்டத்து அளவில்லாத அண்ட கோளங்களின்
உள்ளும் புறம்பும் உள்ளேயும் வெளியேயும் ,
எள்ளும் கரந்து உறை எள்ளும் , அதற்குள் மறைந்து தங்குகின்ற
எண்ணெயும் போல் எண்ணெயும் போல
ஒழியாது நின்றும் நீங்காது பொருந்தி இருந்தும்
உகங்கள் தொறும் யுகங்களில் எல்லாம்
கொள்ளும் திரு உரு எல்லாம் தாம் கொள்ளுகின்ற அழகிய உருவங்கள் எல்லாம்
அவர் அறி கோலங்களே அவர் தாமாக விரும்பி எடுத்த அவதாரங்களே
V.Sridhar