ஆதி அந்தம் இல்லா நாயகனவனோ
ஆலமரத்தடியினில் அமர்ந்திருப்பான்
மோதகம் தந்தால் மகிழ்ந்திடுவான்
தன் மோதிரக் கையால் அருள் புரிவான்!
தொடங்கிடும் செயலுக்கே முதலாய் தான் நின்று
வரும் தடைகளை எல்லாம் விலக்கிடுவான்
வலம் வந்து மனம் தந்த பக்தனுக்கே
வாழ்வில் நலங்களை அள்ளித் தந்திடுவான்!
வேலனின் மூத்தவன் கணபதியை
ஞானத்தின் முதல்வனாம் கஜ முகனை
அருகம் புல்லிட்டுப் பணிந்திடும் பக்தனின்
அருகினில் அவனே வந்து நிற்பான்!
செஞ்சடை ஈசனின் முதல் மைந்தன்
நம் சிக்கலை எல்லாம் தீர்த்து வைப்பான்
அன்னை தந்தையே உலகென்றுரைத்திட்ட
ஆனை முகத்தனின் தாள் பணிவோம்!!
அரங்க.கண்ணன்
திருக்கண்ணபுரம்