இதெல்லாம் எங்கபோய் முடியுமோ?
• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.
• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.
• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.
• 4 நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.
• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.
• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.
• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.
• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.
• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.
• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.
• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.
• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.
• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.
• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.
• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.
• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.
* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் டிரைவர் கௌரவம் என்னாவது?.