திருவரங்கத்தந்தாதி 51 பரகதி பெற பரன் அரங்கன் புகழ் பரவுமின் !
படநாகத்தந்தரமீதிருப்பானெம்பரனரங்கன்
படநாகத்தந்தம்பறித்தோன் புகழைப்பரவுமின்க-
படநாகத்தந்தக்கரணம்பொல்லான்சிசுபாலன்முற்பல்-
படநாகத்தந்தவசைக்குந்தந்தான்றொல்பரகதியே
பதவுரை : நாகம் - ( பாம்பு / யானை ) !
அந்தரம் மீதில் வைகுண்டத்தில்
படநாகத்து படங்களை உடைய ஆதி சேஷன் மீது
இருப்பான் வீற்றிருப்பவனும் ,
எம்பரன் எமது இறைவனும் ,
நாகத் தந்தம் குவலயாபீடம் எனும் யானையின் தந்தத்தை
பட பறித்தோன் யானை அழியும்படி பறித்தவனுமான
அரங்கன் ரங்க நாதனுடைய
புகழை கீர்த்தியை
பரவுமின் கொண்டாடித் துதியுங்கள்
கபடன் வஞ்சகனும்
ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் உடலும் மனமும் தீயவனான
சிசுபாலன் சிசுபாலன்
முன் பல் பட முன்பு பலவாறாக
நா கத்து நாவினால் பிதற்றிய
அந்த வசைக்கும் அப்படிப்பட்ட கொடிய நிந்தனைச் சொற்களுக்கும் கூட
தொல் பரகதி தந்தான் அநாதியான பரமபதத்தைக் கொடுத்தான் !