Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    38. இரு நோய் மலத்தை
    338பொது
    தனதான தத்ததன தனதான தத்ததன
    தனதான தத்ததன தனதான
    இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
    யினிதாவ ழைத்தெனது முடிமேலே
    இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
    ரியல்வேல ளித்துமகி ழிருவோரும்
    ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
    மொளிர்வேத கற்பகந லிளையோனே
    ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
    உபதேசி கப்பதமு மருள்வாயே
    கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
    கரிமாமு கக்கடவு ளடியார்கள்
    கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
    கருணாக டம்பமல ரணிவோனே
    திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
    திகழ்மார்பு றத்தழுவு மயில்வேலா
    சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
    சிறைமீள விட்டபுகழ் பெருமாளே.


    பதம் பிரித்து உரை


    இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை
    இனிதா அழைத்து எனது முடி மேலே


    இரு நோய் - பிறப்பு, இறப்பு என்னும் பெரிய நோய்களையும். மலத்தை - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும். சிவ ஒளியால் - சிவன் அருள் கொண்டு. மிரட்டி - வெருட்டி ஒட்டி. எனை இனிதா அழைத்து - என்னை இனிமையாக அழைத்து. எனது முடி மேலே - எனது தலையின் மேல்.


    இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர்
    இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும்


    இணை தாள் அளித்து - (உனது) இரண்டு திருவடிகளைச் சூட்டி. மயில் மேல் இருத்தி - மயிலின் மேல் இருக்கச் செய்து. ஒளிர் இயல் - விளங்குகின்றதும் பொருந்தியதுமான. வேல் அளித்து - வேலாயுதத்தை என் கையில் தந்து. மகிழ் - நான் மகிழும்படி. இருவோரும் - நாம் இருவரும்.




    ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும்
    ஒளிர் வேத கற்பக நல் இளையோனே


    ஒருவாக என - ஒன்று படுவோமாக என்று. கயிலை மலை இறையோன் - கயிலை மலைக் கடவுளாகிய சிவபெருமான். அளித்தருளும் - பெற்று அருளிய. ஒளிர்- விளங்கும். வேத கற்பக - வேதம் போற்றும் கற்பகம் அனைய விநாயகருக்கு. நல் இளையோனே - நல்ல தம்பியே.


    ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள
    உபதேசிக பதமும் அருள்வாயே


    ஒளிர் - விளங்கும். மா மறைத் தொகுதி - சிறந்த வேதப் பகுதிகளையும். சுரர் - தேவர்களும். பார் - உலகத்தவர்களும். துதித்து அருள - போற்றி செய்ய. உபதேசிகப் பதமும் - உபதேச மொழிகளையும். அருள்வாயே - (எனக்கு) அருள் புரிவாயாக.




    கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு
    கரி மா முக கடவுள் அடியார்கள்


    கரு நோய் - கருவில் சேரும் பிறவி நோயை. அறுத்து - ஒழித்து. எனது மிடி - என்னுடைய தரித்திரம். தூள் படுத்தி விடு - தூளாக்கி ஒழித்து விடும். கரி மா முகக் கடவுள் அடியார்கள் - யானையின் அழகிய முகத்தை உடைய கடவுள் அடியார்கள்.


    கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ்
    கருணா கடப்ப மலர் அணிவோனே


    கருதா வகைக்கு - நினைத்திராத அத்தனை அளவுக்கு. வரம் அருள் - வரங்களைத் தருகின்ற. ஞான தொப்பை மகிழ் - ஞான மூர்த்தியும் தொப்பைக் கடவுளுமான விநாயகர் மகிழும். கருணா - கருணா மூர்த்தியே. கடப்ப மலர் அணிவோனே - கடப்ப மலர் அணிபவனே.




    திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை
    திகழ் மார்பு உற தழுவும் அயில் வேலா


    திருமால் அளித்து அருளும் - திருமால் பெற்றருளிய. ஒரு - ஒப்பற்ற. ஞான பத்தினியை - ஞான பத்தினியாகிய வள்ளியை. திகழ் மார்பு உற - விளங்கும் மார்பில் பொருந்த. தழுவும் அயில் வேலா - அணைந்த கூர்மையான வேலனே.


    சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர்
    சிறை மீள விட்ட புகழ் பெருமாளே.



    சிலை - கிரௌஞ்ச மலையை. தூள் எழுப்பி - தூளாக்கி. கவடு அவுணோரை - கபடம் நிறைந்த அசுரர்களை. வெட்டி - வெட்டி அழித்து. சுரர் சிறை மீள விட்ட - தேவர்களைச் சிறையினின்று நீக்கின. புகழ் பெருமாளே - புகழை உடைய பெருமாளே.





    சுருக்க உரை


    [link]பிறவிப் பிணியையும் மும்மலங்களையும் சிவன் அருளால் வெட்டி, என்னை இனிதாக அழைத்து, மயில் மேல் இருத்தி, நாம் இருவரும் ஒன்று படுவோமாக என்று அருளிய கற்பக விநாயகருக்கு நல்ல இளையோனே, சிறந்த வேதப் பகுதிகளையும், விண்ணவரும் உலகோரும் போற்றும் உபதேச மொழிகளையும் எனக்கு அருள் புரிவாயாக.


    என் பிறவி நோயை ஒழித்து, என் தரித்திரத்தையும் தூளாக்கி, கருதும் அளவுக்கு மேலாகவே வரங்களைத் தரும் ஞான மூர்த்தியாகிய விநாயகர் மகிழும் கருணா மூர்த்தியே. திருமால் பெற்ற ஞான பத்தினியான வள்ளியை மார்பில் அணைத்தவனே. கபட அசுரர்களை வெட்டி தேவர்கள் சிறையை மீட்டவனே. என்னை ஒருவாகென உபதேசப் பதம் அருள்வாய்.[/lik]




    விளக்கக் குறிப்புகள்


    1. மயில் மேலிருத்தி....
    வேல் மயில் கொடுத்து....சிந்தை கூறாய்
    – திருப்புகழ், வெடித்தவார்.
    இயல் வேலுடன் மா அருள்வாயே- திருப்புகழ், சிவமாதுடனே.
    2. ஒரு வாகென...
    நீ வேறெனாதிருக்க நான்வே றெனாதிருக்க
    –திருப்புகழ்,நாவேறு பாமணத்த.
    திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
    திசைலோ கமெலா மநுபோகி - திருப்புகழ், சிவமாதுடனே
    3.கற்பகம் ...
    விநாயகருக்கு ஒரு சிறப்புப் பெயர்.
    4. ஞான தொப்பை மகிழ்...
    வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
    வெற்றிசத் திக்கரக முருகோனே -திருப்புகழ், தத்துவத்து.
    5. பிறவி – அது ஒரு பிணி. ‘பவரோக வத்தியநாத பெருமாளே’ என்பார் இன்னொரு திருப்புகழில்.
    6 எனை இனிதா அழைத்து - “நீவாவென நீயிங்கழைத்து”
    – திருப்புகழ், ஆராதனராடம்பரத்து
    7. எனது முடிமேலே இணைதாள ளித்துனது – “அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே” – திருப்புகழ், மனையவள் நகைக்க
    8. ஞான பத்தினி – “சுந்தர ஞான என குறமாது”, “ஞான குறமாதினை”, “ஏடார் குழற்சுருபி ஞான ஆதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா” - திருப்புகழ்
Working...
X