Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    254.திமிரமாம்
    254திருப்போரூர்
    இத்தலத்தில் வில் ஏந்திய முருகனை காணலாம
    30 நாமங்கள் கொண்ட ஒரு அருமையான துதி
    முருகன் மூன்று இடங்களில் போர் புரிந்தான். நிலத்தில் போர்புரிந்தது திருப்பரங்குன்றம். கடலில் புரிந்து திருச்செந்துர். விண்ணில் போர் புரிந்த இடம் திருப்போரூர். ‘சகல வேதமுமெ தொழு சமாரபுரி’ என்பார் அருணகிரி ஸ்வாமிகள் இத்தலத்தை.
    தனன தானன தானன தனன தானன தானன
    தனன தானன தானன தனதான
    திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
    திமிர மேயரி சூரிய திரிலோக
    தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
    சிவசு தாவரி நாரணன் மருகோனே
    குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
    குணக லாநிதி நாரணி தருகோவே
    குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
    குறவ மாமக ளாசைகொள் மணியேசம்
    பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
    பசுர பாடன பாளித பகளேச
    பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
    பரவு பாணித பாவல பரயோக
    சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
    சமய நாயக மாமயில் முதுவீர
    சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
    சமர மாபுரி மேவிய பெருமாளே.

    பதம் பிரித்தல்

    திமிரமாம் மனமா(ம்) மட மடமையேன் இடர் ஆணவம்
    திமிரமே அரி சூரிய திரி லோக
    மிரமாம் = இருள் கொண்டதான மனமாம் = மனத்தையும் மட மடைமையேன் = மிக்க அறியாமையும் கொண்டவனான என்னுடைய
    அல்லது
    {திமிர மா மனம் = எனது மனத்தில் இருக்கும் பேரிருளையும், மடம் = மிக்கு இருந்த அறியாமை இருளையும் மடமையேன் = அறிவிலியான அடியேற்கு சேரும்}
    இடர் = வருத்தம் ஆணவம் = ஆணவம் (ஆகிய) திமிரமே = இருட்டை அரி = விலக்கும் சூரிய = சூரியனே திரி லோக = மூன்று உலகங்களுக்கும்.
    தினகரா சிவ காரண ப(ன்)னக பூஷண ஆரண
    சிவ சுதா அரி நாரணன் மருகோனே
    தினகரா = (ஒளி தரும்) சூரியனே சிவ = சிவனே காரண = அனைத்துக்கும் மூலப் பொருளே பன்னக பூஷண = நாகத்தை ஆபரணமாக அணிந்த ஆரண சிவ = வேத முதல்வரான சிவபெருமானுக்கு சுதா = மகனே அரி நாரணன் = ஹரி எனப்படும் நாராயணனுடைய மருகோனே = மருகனே.
    குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி
    குண கலா நிதி நாரணி தரு கோவே
    குமரி = குமரி (என்றும் இளையவள்) சாமளை = சாமளை (கருமை கலந்த பச்சை) நிறம் பொருந்தியவள் மாது = மாது உமை = உமா தேவி அமலி = மலமற்றவள் (எந்த மாசும் இல்லாதவள்) யாமளை = பச்சை நிறத்தவள் பூரணி = நிறைந்தவள் குண நிதி = குணச்செல்வி கலா நிதி = கலைச் செல்வி நாரணி தரு கோவே = நாரணர் தங்கை (துர்க்கை) பெற்ற தலைவனே.
    குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர
    குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்
    குரு = ஞான குருவே குகனே = குகனே {இதய குகையில் விளங்குபவனே} குமரேசுர = குமரேசனே {குமர ஈசுர = 16 வயது என்றுமான பரம செல்வமே} சரவணா = சரவணனே {ஒளியும் ஈகையும் அறமும் மறமுமான அருமை சரவண நாமத்தோடு அவதரித்தவனே} சகளேசுர = உருவத் திருமேனி கொண்ட ஈசனே. குறவர் மா மகள் = வேடர்களுடைய சிறந்த மகளான வள்ளி ஆசைகொள் = (உன் மீது) ஆசை கொண்ட. மணியே = மணியே சம் = நன்றாக
    பமர(ம்) பார ப்ரப அருண படல தாரக மா சுக
    பசுர(ம்) பாடன பாளித பகளம் (பளகம்) ஈச
    பமரம் = வண்டுகள் (மொய்க்கும்) பார = பாரமான ப்ரபா = ஒளி வீசுகின்ற {அல்லது பாரப்ரபா = மகிமை ஒளியை உடையவனே} அருண = சிவந்த படல = கூட்டமான (வெட்சி மாலைகளை) அணிந்தவனே தாரக = பிரணவப் பொருளே {விசாக நட்சத்திர ஜென்மனே} மா சுக = பெரிய சுகப் பொருளே பசுர = (சம்பந்தராக வந்து வாழ்க அந்தணர் என்னும்) திருப்பாசுரம் பாடன = பாடி (உலகுக்கு நீதியை) உபதேசித்தவனே பகளேச = மலைகளுக்கு வேந்தனே.
    பசித பாரண வாரண துவச ஏடக மா அயில்
    பரவு(ம்) பாணித பாவல பர யோக
    பசிதம் = திருநீற்றில். பாரண = திருப்தி உள்ளவனே வாரண துவச = கோழிக் கொடியோனே ஏடகமா = மேன்மை கொண்ட சிறந்த (வெற்றிலை வடிவமான) அயில் வேலாயுதத்தை பரவ பாணித = கையில் ஏந்தியவனே பாவல = பாடல்களில் வல்ல புலவனே பர யோக = மேலான யோக மூர்த்தியே.
    சம(ம்) பர மத சாதல சமயம் ஆறிரு தேவத
    சமய நாயக மா மயில் முது வீர
    சமம் = வாதப் போர் செய்யும் பர மத = புறச் சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின். சாதல = நசிவுக்குக் காரணமாக இருந்தவனே ஆறிரு சமயம் = ஆறு அகச் சமயங்களுக்கும், ஆறு புறச் சமயங்களுக்கும் இரு தேவத = பெரிய தலைவனே சமய நாயக = சமயங்களுக்கு எல்லாம் தலைவனே மா மயில் முது வீர = அழகிய மயிலின் மேல் வரும் பேரறிவு வாய்ந்த வீரனே.
    சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு(ம்)
    சமர மா புரி மேவிய பெருமாளே.
    சகல லோகமும் = எல்லா உலகங்களும் மாசு அறு சகல வேதமும் = குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழு = தொழுகின்ற (பெருமாளே) சமர மா புரி = திருப் போரூர் என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.
    { } குறிக்குள் கொடுக்கபட்டிருக்கும் விளக்கம் நடராஜன் அவர்கள் தந்தது

    சுருக்க உரை

    விரிவுரை ( திரு நடராஜ்ன் )

    முதல் அடியை மா திமிரம் என்று முற்றி பொருள் கொள்ளல் மரபு.
    திமிரமே அரி சூரிய - எண்ணும் மனத்தில் இருள் உளது. அதனால் உள்ளியது எல்லாம் உண்மையாவது இல்லை. அறியாமையின் மிகுதியை வாயால் அறியலாம். சொல்லும் சொற்களில் இருள் சூழ்ந்துளது. அதனால்வாய் மொழிகளும் வாய்மையாவது இல்லை. பாழ் இருளை ஆணவம் பரப்புவதால் விமல மெய் விளங்குவதாய் இல்லை. இந்நிலையில் கருணை வடிவான இறைவன் கருதும் இதயத்தில் காட்சியானால், அக இருள் மூன்றும் அழியும். அதன் பின் உண்மை உயரும். வாய்மை வளரும். மெய்மை மேவும். இப்படி பகை இருள் அழிக்கும் ஆதித்தன் முருகன்.
    ஆ என்ன அருமையான செய்தி. புற இருள் ஒழிக்கும் புனித பருதி அவனே என்பதை திரி லோக தினகரா எனும் விளி தெரிவிக்கின்றது.
    அக இருள் புற இருள் அழிந்த பின் அனுபவம் செய்யும் மங்களம் ஆதலின் சிவ என்றார். எதற்கும் மூல காரணமாய் நின்ற மூல மூர்த்தியே என்பதால் காரண என்றார். பாம்புருவான பரிகிரக சக்திகள் பார் அனைத்தும் காக்கும் தெய்வப் பாவையர். அவர்களை சிறந்த அணியாகக் கொண்டார் சிவபிரான். புனித வேதங்கள் அவரைப் போற்றுகின்றன அவர் அளித்த அமிர்த மகனே எனும் பொருளில் சிவ சுதா என்றார்.
    பனகம் = பல் + நகம், நகம் = மலையும் மரமும், அவைகளில் உறையும் அரவுகளை பனகம் என்பது பழைய மரபு. ஆரணம் = வேத சாகைகள், சுதை = அமுதம், அமுத மயம் ஆனானை சுதா எனும் அருமையே அருமை.
    வெம்மைப் பகையை வீழ்த்தினார். தண்மை நீர்மை தழுவினார். ஆதலின் திருமால் அரி நாரணர் எனப் பெறுவர். அவர் அன்பு மகளை மருவ வந்த முருகனை மருகோனே என்றார். ஹரி = அரி, ஹரித்தல் = அழித்தல் நாரம் = நீர், அந்நீரின் நிறம் கொண்டவர் ஆதலின் நாரணன் எனும் பெயர் எய்தினார். எண்ணதக்க இறைவியை எட்டு பேர் கொண்டு ஏத்தினார். குமரி, சாமளை, மாதுமை, அமலி, யாமளை, பூரணி, குண கலாநிதி, நாரணி. குருநாதன், சுவாமிநாதன் எனும் பெயர்கள் அனைவருக்கும் குரு முருகனே எனலை அறிவிக்கின்றன. அகம் இருந்து புறம் வருவன உணர்த்துவன உணர்த்தி, புறமிருந்து அகம் புகும் இப்புனித குருவை குரு குகா என்று வினயம் கொண்டு உரைத்தார். - நெறியில் செரிந்த நிலை நீங்கி கருணைத்திரு உருவாய் காசினிக்கே தோன்றி குருபரன் - என்றோர் திருப்பெயர் கொண்டு எனும் கலி வெண்பாவால் இதை அறியலாம். இதய குகை - அந்தரங்கப் பள்ளி அறை. அங்கிருக்கும் ஆன்ம மண மகளை பரிபாகம் கண்டு, அணைபவன் ஆதலின் குமரேசா என கூறினார். - நடுக்கன்று நின்றொடு நடுவான பஞ்சணையில் படுத்துறங்க நான் ஆசைப்பட்டேன் பரஞ்சுடரே - என்பர் பாம்பன் அடிகள்.
    மேற்பகுதியில் தேவியை குமரி என்றார். குமரி தந்த குமரேசுரன் அவன் மீண்டும் குறிப்பிட்டார். குமரன் கிரிராஜ குமாரி மகன் என்று அறிதல் அனுபூதி முறை. குமரியம்மையிடம் உதயமான குமாரி மகன், ஆன்மக் குமரியை இதய குகையில் அணைபவன் என்பது அரிய ஒரு அறிவிப்பு. நிஷ்களனை என்றும் நினைக்க முடியவில்லை. ஆதலின் வாழ்விக்கும் அருளால் சகளனாகி வருகின்றான். சகளம் = உருவத்திரு மேனியை உடையவன்.
    அவன் குரவன், அவன் தேவியோ குறத்தி. வல் இடும்பு பரம்பரை என்பதை அவள் பெயரில் உள்ள வல்லின ற கரமே வலியுறுத்தும். அப்படி இருந்தும் இடையின ர கர குரவனை அளவினள். அவள் மாபெரும் காதல் கொண்ட மணி அவன். அவள் அன்பை அறிந்தான். அதனால் தானும் ஆசை கொண்டு தழுவினான். அப்படி இருபொருளும் வெளியாக, குறவர் மா மகள் ஆசை கொள் மணியே என்னும் பகுதியை எண்ணும் உள்ளத்தில் இன்பம் பிறக்கும்.
    பமரம் - வண்டுகள். மந்திரங்கள் பல வண்டுகளின் ரீங்காரம் போல் வரும். ஆதலின் வேத வண்டுகள் எனும் பொருள் கொளப் பெற்றது. சம் - இன்பம். மொய்த்தல் பரவல் எனலுமாம்.பாரம் - மாபெரும் மகிமை. ப்ரபா - ஜோதி சொரூபர். அருண படலம் - செங்கிரண கற்றைகள். தாரக மீன - விண் மீன் ஆகிய விசாகத்தில் வந்தவனே. பாசுரம் என்பது பசுரம் என குறைந்தது. பாளித - சந்தன பூச்சினனே எனலுமாம். பகளம் - மலை.
    பசித பாரண - திருஞான சம்பந்தராகி திருநீற்றுப் பதிகம் பாடினவனே.அருணகிரியார், கச்சியப்ப சிவாச்சாரியார், பொய்யா மொழியார் முதலியோர் முன் பாடல் உரைத்த திறனினன் ஆதலின் பாவல என்றார்.நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க நேராக வாழ்வதற்கு எனவும்,
    நீயும் நானுமாய் ஏக போகமாய் எனவும்
    உரைத்த படி உயர்த்துவானை சம பர என்றார்.
    அழிவு செய் மதவாதிகளை அழித்தவனை, மத சாதல என்றார். அதை அடுத்து, ஆக்கம் செய் ஆறு சமயங்களின் அதி தெய்வம் ஆனவனே எனும் மாபெரும் நுட்பம் மறக்கத்தகுவது அன்று. சமய நாயகன் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாள் எனும் பொருள் அது. பெருமாள் – பெருமையில் சிறந்த பெரியோன். அருள்வாயே என்பது இசை எச்சம்.
    முப்பது மந்திர நாமங்களால் முருகனை விளித்து, அருள்வாயே என் நிறைவு பெறும் இத்திருப்புகழை இடையறாது ஓதுவார் பேறு உரைத்தற்கு அரியதே.- நடராஜன்

    ஒப்புக
    குறவர் மாமகள் ஆசை கொள் மணியே....
    வள்ளி உன் மீது ஆசை கொண்ட மணியே அல்லது வள்ளியின் மீது ஆசை கொண்ட மணியே என்று இரு பொருள் கொண்ட அழகு.
    குறமகள் பாதம் போற்று பெருமாளே ... திருப்புகழ், புவிபுனல்.
    தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை
    ...திருப்புகழ், தொய்யில்.
    விளக்கக் குறிப்புகள்
    1. பசுர பாடன...
    பாசுரம் குறுகி பசுர என்றாயிற்று. இது சம்பந்தராக வந்து பாசுரம் பாடியதைக் குறிக்கும்.
    வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக. .. சம்பந்தர் தேவாரம்
    2. பகளேச...
    பளகேச என்பதின் மொழி மாற்றம்.
    3. சமய மாறிரு தேவத...
    உட் சமயங்கள் (6).. வைரவம், வாமம், காளா முகம், மாவிரதம், பாசுபதம், சைவம் (பிங்கலம்).
    புறச் சமயயங்கள் (6)..சைவம், வைணவம், சாத்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம்.
    Last edited by soundararajan50; 26-05-18, 07:27.
Working...
X