Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    194.சரவண ஜாதா


    194
    விநாயகமலை
    (பிள்ளையார்பட்டி)
    சரவண ஜாதா


    தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
    தனதன தானா தனாதன தனதான


    சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
    சததள பாதா நமோநம அபிராம
    தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
    சமதள வூரா நமோநம ஜகதீச
    பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
    பரிமள நீபா நமோநம உமைகாளி
    பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
    பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்
    இரவியு மாகாச பூமகியும் விரவிய தூளேற வானவ
    ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்
    றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
    ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே
    மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
    வசுவெனு மாகார ஈசனு மடிபேண
    மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
    வனசர ராதார மாகிய பெருமாளே



    194 விநாயகமலை (பிள்ளையார்பட்டி)







    பதம் பிரித்து உரை


    சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
    சத தள பாதா நமோநம அபிராம


    சரவண ஜாதா = சரவண மடுவில் தோன்றியவனேநமோ நம = உன்னை வணங்குகிறேன்,வணங்குகிறேன் கருணைய தீதா = கருணை மேம்பட்டவனே நமோ நம =---- சத தள = நூற்றிதழ்த் தாமரை போன்ற பாதா = திருவடியை உடையவனேநமோ நம= ----- அபிராம = அழகனே.


    தருண கதீரா நமோநம நிருப அமர் வீரா நமோநம
    சம(ம்) தள ஊரா நமோநம ஜகதீச


    தருண கதீரா = இளமை விளங்கும் கதிர் ஒளியை உடையவனே நமோ நம = ----- நிருப = அரசனேஅமர் வீரா = போர் வீரனே நமோ நம = ----- ஜகதீச = உலகத்துக்கு ஈசனே


    பரம சொரூபா நமோநம சுரர் பதி பூபா நமோநம
    பரிமள நீபா நமோநம உமை காளி


    பரம சொரூபா = பரம் பொருள் வடிவினனே நமோ நம = -----சுரர் பதி பூபா = தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இந்திரனுக்கும் அரசனே நமோ நம =----- பரிமள நீபா = நறு மணம் வீசும் கடப்ப மலர் அணிந்தவனே நமோ நம =----- உமை காளி =உமைகாளி.


    பகவதி பாலா நமோநம இக பர மூலா நமோநம
    பவுருஷ சீலா நமோநம அருள் தாராய்


    பகவதி பாலா = பகவதி எனப்படும் பார்வதியின் குமரனே நமோ நம = ----- இக பர மூலா =இம்மைக்கும் மறுமைக்கும் மூல காரணனே நமோ நம= ----- பவுருஷ சீலா = ஆண்மை நிறைந்த பரிசுத்தனேநமோ நம = ----- அருள் தாராய் = அருள் புரிவாயாக.


    இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர்
    எவர்களும் ஈடோற ஏழ் கடல் முறையோ என்று


    இரவியும் = சூரியனும் ஆகாச பூமியும் = விண்ணும் மண்ணும் விரவிய = கலக்கும்படி தூள் ஏற = தூசி ஏறி நிறைய வானவர் எவர்களும் = தேவர்கள் யாவரும்ஈடேற = ஈடேற ஏழ் கடல் = ஏழு கடல்களும்முறையோ என்று = (சூர் மாவைப் பிளக்க வந்த வேலின் வெப்பத்தைத் தாளாமல்) முறையோ என்று.


    இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர்
    இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே


    இடர் பட = வேதனைப்பட மாமேரு பூதரம் இடிபடவே தான் = பெரிய மேரு மலை பொடிபடவும்நிசாசுரர் = அசுரர்களின் இகல் கெட = வலிமை கெடமா வேக = மிக்க வேகமுள்ள நீடு அயில் = நெடிய வேலை விடுவோனே = செலுத்தியவனே.


    மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
    வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண


    மரகத ஆகார = பச்சை நிற உருவம் உள்ள ஆயனும் =(இடையனாகிய) திருமாலும் இரணிய ஆகார =பொன் நிறம் உள்ள வேதனும் = பிரமனும் வசு எனும் ஆகார ஈசனும் = நெருப்பு வண்ணமுடைய உருவத்தை உள்ள ஈசனும் ( ஆகாரம் – உருவம்) அடிபேண = உனது திருவடியை விரும்பிப் போற்ற.


    மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர
    வனசரர் ஆதாரமாகிய பெருமாளே.


    மயில் உறை வாழ்வே = மயிலில் வீற்றிருக்கும் வாழ்வே. விநாயக மலை உறை = விநாயக மலையில் வீற்றிருக்கும் வேலா = வேலனே மகீதர =மலைகளுக்கு உரியவனே வனசரர் = வேடர்களுக்குஆதாரமாகிய பெருமாளே = பற்றுக் கோடாக விளங்கும் பெருமாளே.







    விளக்கக் குறிப்புகள்


    மரகத ஆகார ஆயனும்.....
    ஆகாரம் = உருவம். திருமால் = பச்சை நிறம்.


    ஒப்புக


    மரகத நாராயணன் மருமக............................................. திருப்புகழ், விடுமதவேள்.
    பிரமன் = பொன்னிறம்.
    பொன் நிற நான்முகன்.... ......................................................சம்பந்தர் தேவாரம்.
    ஈசன் நெருப்பு உருவம்.
    ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன்..................சம்பந்தர் தேவாரம்








    குகஸ்ரீ ரசபதி அவர்களின் விளக்க உரை




    மருளும் மனம் இருளடையும். அதன்பின் வாக்கின் வாய்மை வரண்டு போம். பொய்மை செயல்களில் பொங்கி வரும். இவைகளால் பாழ்த்த கருமங்கள் தோன்றி பல இளிக்கும்.முன்பிறப்பில் செய்தவை பின் பிறப்பில் வந்து பீடு அளிக்கும். இப்பிறப்பில் செய்த வினைகள் அடுத்த பிறப்பில் தப்பாமல் வந்து வந்து தாக்கும். அதிகரித்த வினை அனுபவிக்க இறப்பும் பிறப்பும் வருவது இயற்கை. எப்பிறப்பும் வேண்டாம் என்று இமையவர் எண்ணினர். மரணத்தை அவர்கள் மறுத்தனர். இஃக்து இயற்கையை மறுக்கும் எதிர் நடை. நினைத்ததை நிறைவேற்ற தேவரும் அவுணரும் அரும் தவம் செய்தனர். அதன் பயனாக அவைதீக அவுணர் இறவா வரம் பெற்றனர். வைதீக வானோர் பிறவா வரம் பெற்றனர். கோணை மனம் கொண்டோர் இறவா நிலை எய்தினரேல் விளையும் விளைவுகள் விபரீதமாகும்.மதிகெட்ட அவுணர்களின் மனம் மருண்டு இருண்டது. வாய் நாறும் உணவுகளால் வார்த்தைகளும் நாறல் ஆயின. எங்கும் அக்ரமங்கள், எங்கும் அழிவுகள்.நல்லோர் உள்ளம் நடுங்கும் செயல்கள்.வீணர் அவுணர்செய் தீவினைகள் பார் முழுதும் இப்படி பரவியது. உம்பர் உலகிலும் ஊடுறுவி பார்தலம் எங்கும் பரவியது. விண்ணவர் செய்வினை போகமே ஆகி பொங்கியது. அமரர் உலகிலும் அமையாமல் மண்ணுலகிலும் மறங்கி மலிந்தன. புனித குரு குடும்பத்தில் சந்திரன் புகுந்தான். இந்திரன் அகலிகையை எண்ணினான். எண்ணில் ஊர்வசி பலரை மணந்தாள். வரலாறுகள் இப்படி வளர்ந்தன. எவரும் பிறப்பது இல்லை இறவா நிலையர் எதிர்த்தனர். வாதும் சூதும் வளர்ந்தன. இருதிறத்தாரும் செய்த வினைகள் குன்று போலாகி எங்கும் குவிந்தன. அவைகளால் பருதி மண்டலம் விண் மண்டலம் நில உலகம் முழுதும் புழுதி அடைந்தன. கடலிலும் மலையிலும் அசத்யமே கலந்தது.நல்லோர் இடத்தில் இதய உறவு இறந்தது. உதட்டு யறவு சிறந்தது. தடுமாறி அழுதது தர்ம தேவதை.
    விநாயக மலை மேல் ஏறிய விசாகா, உலக நிலையை உணர்ந்தனை.
    திருவுளம் இரங்கினை. நுட்ப ஞான சக்தியை நோக்கினை. உடனே வீறு
    கொண்டு புறப்பட்டது வேல். அதன் வேகத்தில் விண்ணில் மண்ணில் பருதி மண்டலத்தில் புழுதி படர்ந்தது. அதன் தரிசனத்தால் தேவர்களின் அறிவு தெளிவு பெற்றது. இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற நேர்ந்தது. ( ஈடு - சுய மதிப்பு ) அதற்கு முன் இறங்கு முகம். ஞான சக்தி தரிசனம் கண்ட அன்று முதல் அது ஏறுமுகமாகியது. அசுர சக்திக்கு இன்று வரை அஞ்சி அடங்கினோம். வாய்மை வேல் கனற்ற இன்று வரண்டு விடுவோம் போல் உளதே. இது முறையோ என ஏழ் கடல்களும் குமுறின. நிலத்தின் நடுவிலிருந்து விண்ணுலகத்தை தாங்கும் மேருமலை வேலின் அதிர்ச்சியைத் தாங்காது நொடிந்து பொடிபொடியாய் நொருங்கியது. ஏழ்கடல் முறையோ என்று இடர்பட மா மேரு பூதரம் இடிபட
    - ஆ ஆ இவைகளை எண்ணும் பொதே இதயம் மகிழ்கின்றதே.பட்டப்பகலை இரவென்று உறங்கி நள்ளிரவில் வாழ்க்கை
    நடத்துபவர் 6000 கோடி அசுரர்கள். நிசாசரர் எனப்பெறும் அவர்கள்
    கண்ணில் பகை, கருத்தில் மிகை, எண்ணில் இடர், எழுத்தில் கொலை.
    அவர்களால் அகில உலகும் அவதி அடைந்தன. அப்பகைமை குணத்தை
    அடியோடு அழித்து விடு என்று ஏக வேக ஞானசக்தியை ஏவிய உம்மை, மா
    வேக நீடு அயில் விடுவோனே என்று ஏற்றி போற்றி இறைஞ்சுவோம்.
    இந்த ஆடல்களால் அதிரமாகச் செய்த வினைகளை அனுபவிக்க இறப்பை
    பிறப்பை மீண்டும் இயற்கை ஆக்கினை.
    இரணியகர்ப்பன் எனும் பெயருடன் பார் முழுதும் படைக்கும் நான்மறை
    ஓதும் நான்முகன், பசுக்களைக் காக்கும் இடையர் தலைவரான பட்டை
    வண்ணப் பெருமாள், இளைப்பாற்றும் தொழிலை உடைய உக்ர அக்னி
    வண்ண உருத்திரன் எனும் முதலாளிகள் சேர் உளர். அவர்கள் படைத்தல்,
    காத்தல்,அழித்தல் தொழில்களை முறையே நடத்தி இறுதியில் உமது திருவடி சம்பந்திகள் ஆகும் பொருட்டு என்றும் இன்றும் வழிபடுகின்றனர். அவர்கட்கு அருள தாரக மயிலில் சேவை தரும் உம்மை மயில் உறை வாழ்வே என்று மனம் மனனம் செய்கிறது.
    தமக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகர். மாபெரும் அவர்
    சொரூபமாய் உளது ஒரு மலை. எவரும் எளிதில் சேவிக்க அதன் மேல்
    ஞானசக்தியுடன் இருக்கும் உம்மை, விநாயக மலை உறை வேலா என
    வினயம் கட்டி உறைப்பம். தரை எப்பொருளையும் தாங்குகிறது. தாங்கும்
    நிலத்தை நீர் தானே ஐயா தாங்குகிறீர். அதனால் தான் மகீதர என்கிறது எம் மனம்.
    விஷ ஜந்துக்கள், விஷ விருட்சங்கள், பயங்கர விலங்குகள் முதலியன எங்கும் காடுகளில் இருக்கின்றன. அவைகட்கு அஞ்சாது இருக்க தோள் வலியும் துணை வலியும் தேவை. அவைகளை வேடர்கட்கு அருளி வள்ளியார் திரு நோக்கில் மேலும் அவர்களை வாழ வைத்தீர். ஆதேயம் ஆன அவர்கட்கு நீர் ஆதாரம். அதனால் தான் வனசரர் ஆதாரமாகிய பெருமாளே என்று வீரிட்டு கூவி உம்மை விளிக்கிறோம். ( ஆதுயம் - தாங்கப்படு பொருள், ஆதாரம் - தாங்கும் பொருள், வனம் - வனப்பை உடையது காடு, சர – சஞ்சரிப்பவர்).


    பிறவாதிருக்க வரம் தர வேண்டும் பிறந்து விட்டால்
    இறவாதிருக்க மருந்து உண்டு காண் இது எப்படியோ
    அறமாற் புகழ் தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
    மாறவாதிரு மனமே அது காண் நல் மருந்து உனக்கே -
    என்பது உயர்ந்த ஒலிகளின் உபதேசம்.


    மாதேவர் திருவடிகளை மறவாதிருப்பின் ஆகாமிய வினைகள் உருவாகா.
    பிராரத்துவ சாதனையான வேதனைகளை சகித்துக் கொள்வர். இதன் மூலம்
    பெருமான் அருள் நோக்கம் பிறக்கும். அதனால் சஞ்சித வினை சாம்பலாகும்.
    இத்தகைய பிறப்பு இறப்பு இன்றி உமது அடிமைகள் இன்புற்று இருப்பர்.
    இந்த அருமை பெருமைகளை அறிந்து உம்மை அர்ச்சிக்க மனம்
    ஆவலிக்கின்றது.
    கன்ம கரு, தந்தை கரு தாய் கரு என ஒவ்வொரு பிறப்பிலும் மூன்று
    கருச்சேற்றில் மூழ்கியவர்கள் நாங்கள். மூலவாசனை, சூலவாசனை, கால
    வாசனையால் ஞான வாசபையின் நலம் உணரேன். அதுவன்றி அடியேன்
    அங்கங்கு பட்ட அவதிகட்கு அளவில்லையே.
    மங்களம், ஒளி, அறம், மறம் எனும் உத்தம நான்கிலிருந்து உதயமான
    உம்மை சரவணஜாதா நமோ நம என்று ஏத்தினால் இறவாத இன்ப நலம்
    எய்தும்மே. சொல்லால் வரும் குற்றம், சிந்தையால் வரும் தோஷம்,
    பார்வையால் வரும் தீங்கு இவ்வளவுதானா ? கல்லாப்பிழை, உன்
    திருவடிகளை கருதா பிழை, துதியாப் பிழை, தொழாப்பிழை, இப்படி பிழை
    மயமானது எம் பிறப்பு நிலை. எப்பிழைகளையும் பொருத்து அருள் புரியும்
    உமது வளரும் அருளுக்கு வரம்பு இல்லை. ஆதலின் உம்மை கருணை அதீதா நமோ நம என்று உணர்ந்து போற்றி உய்வம் யாம்.
    தனிச் சிறப்பு உடையது தாமரை. அவைகளுள் 100 இதழ்களை உடையது
    தெய்வ பங்கயம். பொன்னான உமது பச்சை பாதங்கள் அத்தெய்வ கமலத்தின் மேல் அமர்ந்திருக்கின்றன. சரவணத்தின் வெறி கமழ் போதில் வீற்றிருந்து அருளினவனே என்று ஸ்காந்தமும் இயம்புகிறது. இவைகளை ஓதும் போதே எம் இதய கமலம் அதன் மேல் உமது திருவடிகள் ஆஹா, இப்படி அல்லவா நினைவு எழுகிறது. சத தள பாதா நமோநம அடடா, இப்படி ஓயாது ஓதுவதே உத்தமமான பணி.
    அழகு மயம், என்றும் இளமை மயம், ஒளி மயம் ஆன உம்மை அபிராமா,
    தருணகதீரா நமோ நம இப்படி எண்ணும் போதே பெரும, எதிரில் நீர்
    இருப்பது போல் தெரிகிறதே.( அபிராம = தெய்வ அழகு, தருண = தெய்வ
    இளமை, கதிர் = தெய்வ சூரிய ஜோதி )
    வென்ற ஆயுதம் எதுவாயினும் அதை வேல் என்று சொல். வென்றவர் எவர்
    ஆயினும் அவனை முருகன் என்று கூறு. - என்று புறப் பொருள் இலக்கணம் புகல்கிறது. இதன் மூலம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவர் நீர் என்று உணர்கிறது எம் உள்ளம். நிர் உபம வீரா நமோ நம என்று போற்றி உள்ளம் புகைகின்ற போது புளகிதம் அடைகிறது புந்தி.மயாபுரி பட்டணத்தை அவுண மன்னன் ஆளுகிறான். ஆதம குமாரனை ஆசைக் கயிற்றால் கட்டி அடக்கி மாயாபுரிக் கோட்டையில் கடும் சிறை இட்டான். கண்ணன், காதன், மூக்கன் வாயன், தோலன் எனும் ஐவர் கோட்டையின் பயங்கர காவலர். அவர்களால் ஒன்றும் தோன்றாது உயங்கும் உயிருக்கு ,இரங்கி விடுதலை செய். இன்றேல் கடும் போர் எனும் குரல் எழுப்பி வித்தக ஆன்மாக்களை உய்விக்கும் உம்மை சமர்தள ஊரா நமோ நம என்று போற்றி உள்ளம் புரிப்பம். அகில உலக நாதர் நீர். ப்ரம்ம மாய நிறை ஜோதி பிழம்பு நீர். ஆதலின் ஜகதீசா பரம சொரூப நமோ நம என்று தொழுது நின்று துதிப்பம் யாம்.
    சுராபானம் செய்தவர் சுரர் ( சுரை - அமுதம் ) அந்த இமையோர் தலைவன்
    இந்திரன். இப்படி எத்தனையோ இந்திரர்கள் இருக்கின்றனர். அவர்கள்
    அனைவருக்கும் அதிபர் நீர். சுரபதி பூபா நமோநம என்று அப்படிச்
    சொல்லுவதில் தான் எவ்வளவு சுவை உளது.
    சிறந்த கடப்ப மலரில் சிவ மணம். - உருள் பூம் தண் தார் புரளும் மார்பினன்
    - என்று திருமுருகாற்றுப் படை அச் செய்திதைத் தெரிவிக்கின்றது. அது
    ஜீவனின் பதி சிவம் என்பதை அறிவிக்கும் அடையாள மாலை.அவ்வுரிமை
    அறிந்து பரிமள நீப நமோ நம என்று பாடுகின்றோம்.
    அமைதியான கோலத்தில் உமை, ஆவேச கோலத்தில் காளி, திரு,ஐஸ்வர்யம், புகழ்,வீர்யம், ஞானம், வைராக்கியம் எனும் ஆறு குணங்களுடன் சிவந்த கோல அம்மை பகவதி. இந்த மும்மை தேவியர் மகனாகி இம்மை வளம், மறுமை நலம் முதலிய பயன் மூன்றும் அருளும் முதல்வா, உம்மை உமை காளி பகவதி பாலா நமோ நம என ஓதி உவகை கொள்கிறோம்.ஆணுமையும் ஆச்சாரமுமே அரிய உமது சொரூபம். ஊன்றி அக்கோலத்தை உணர்ந்து பவுருஷ சீலா நமோ நம என்று துவாச நாமம் கொண்டு துதிப்போம்.
    மற்றும் 1. அபிராம, 2. தருண, 3. உமை பாலா, 4. காளி பாலா என ஏய்ந்து சோடச நாமம் செய்து அர்ச்சிப்பம்.
    அயில் விடுவோனே, மயிலுறை வாழ்வே, விநாயக மலை வேலா, மகீதரா,
    பெருமாளே அரிய உமை என்றும் இப்படி அர்ச்சித்துக் கொண்டிருக்க அருள்புரி என்று வினயம் கொண்டு வீழ்ந்து வணங்கி விண்ணப்பித்த படி.
Working...
X