Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    187. பாட்டில் உருகிலை


    தாத்த தனதன தாத்த தனதன
    தாத்த தனதன தாத்த தனதன
    தாத்த தனதன தாத்த தனதன தனதான


    பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
    கூற்று வருவழி பார்த்து முருகிலை
    பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம்
    பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
    நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
    பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக
    மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
    யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
    பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய்
    ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
    பூட்டி திரிபுர மூட்டி மறலியி
    னாட்ட மறசர ணீட்டி மதனுடல் திருநீறாய்
    ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
    யாட்டின் முகமதை நாட்டி மறைமக
    ளார்க்கும் வடுவுறு வாட்டு முமையவ னருள்பாலா
    சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
    ஈட்டி யழல்பசை காட்டி சமணரை
    சீற்ற மொடுகழு வேற்ற அருளிய குருநாதா
    தீர்த்த எனதக மேட்டை யுடனினை
    ஏத்த அருளுட னோக்கி அருளுதி
    தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே

    -187 தீர்த்த மலை
    (தருமபுரி மாவட்டம் அரூர் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில்)



    பதம் பிரித்தல்


    பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை
    கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை
    பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்


    பாட்டில் உருகிலை = (மனமே நீ) பாட்டின் பொருள் அறிந்து உருகுதல் இல்லை கேட்டும் உருகிலை =பாட்டின் பொருளையும் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை கூற்று வரு வழி பார்த்தும் =யமன் வரும் வழியைக் கண்டும். உருகிலை =(பக்தியால்) உருகுதல் இல்லை. பாட்டை = (என்) கட்டங்களை அநுதினம் ஏற்றும் = தினந்தோறும் அநுபவித்தும் அறிகிலை = (உண்மைப் பொருளை)அறிகின்றாய் இல்லை. தினமானம் = நாள் தோறும்


    பா(ம்)பு அணியன் அருள் வீட்டை விழைகிலை
    நாக்கின் நுனி கொ(ண்)டு ஏத்த அறிகிலை
    பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக


    பாம்பு அணியன் = பாம்பை அணிந்துள்ள சிவபெருமான். அருள் = அருளும் வீட்டை விழைகிலை = வீட்டின்பத்தை விரும்புகின்றா யில்லை. நாக்கின் நுனி கொண்டு = நாவின் நுனியால். ஏத்த = (பிரானைப்) போற்ற அறிகிலை = அறிகின்றாயில்லை பாழ்த்த = பாழ்படும்பிறவியில் = (இந்தப்) பிறப்புக்களி லேயே ஏற்ற =ஈடுபடுகின்ற மனது நல் வழி போக = (என் மனமே) நீ நல்ல வழியே போக.


    மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை
    ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை
    பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்


    மாட்டம் எனுகிறை = மாட்டேன் என்கின்றாய்கூட்டை = (உடல் சிறையகிய) இந்தக் கூட்டினைவிடுகிலை = விடுகின்றாயில்லை ஏட்டின் விதி வழி ஓட்டம் = ஏட்டில் எழுதியுள்ள என் தலை விதி எந்த வழியாக ஓடுகின்றது என்பதைஅறிகிலை = அறிகின்றிலை பார்த்தும் = (இங்ஙனம் நீ இருக்கும் வகையைப்) பார்த்தும்இனி ஒரு வார்த்தை = (சும்மா இருக்க முடியாமல் நான்) இனி ஒரு வார்த்தை சொல்லுகின்றேன்இது கேளாய் = இதைக் கேட்பாயக.


    வாக்கும் உனது உள்ள(ம்) நோக்கும் அருளுவன்
    ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
    வாழ்த்த இரு வினை நீக்கு முருகனை மருவாயோ


    ஏத்த புகழ = உன் புகழை ஓதிப் புகழ வாக்கும் =நல்ல வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் = உனது உள்ளத்தில் நல்ல கருத்தையும் அருள் புரிவான் அடியார்க்கும் எளியனை = (ஆதலால்)அடியவர்களுக்கு எளியவனை வாழ்த்த =வாழ்த்தவும் இரு வினை நீக்கும் = கொடிய வினைகள் நீங்கவும் முருகனை மருவாயோ =முருகனை நீ சிந்திப்பாயக.


    ஆட்டி வட வரை வாட்டி அரவொடு
    பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்
    நாட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திரு நீறாய்


    ஆட்டி = உலகையே ஆட்டி வைப்பவராகியகூத்தப்பிரான். வட வரை = வடக்கில் உள்ள மேரு மலையை வாட்டி = வருத்திச் (சிலையாக வளைத்து) அரவொடு பூட்டி = (அதில்) வாசுகி என்னும் பாம்பை (நாணாகக்) கட்டி. திரிபுரம் மூட்டி = திரிபுரத்தைத் தீயில் வேகச் செய்து. மறலியின் நாட்டம் அற = யமனுடைய கருத்துஅழியும்படி. சரண் நீட்டி = காலை நீட்டி (அவனை உதைத்துத் தள்ளி). மதன் உடல் திரு நீறாய் =மன்மதனுடைய உடல் சாம்பலாகும்படி.


    ஆக்கி மகம் அதை வீட்டி ஒருவனை
    ஆட்டின் முகம் அதை நட்டி மறை மகள்
    ஆர்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா


    ஆக்கி = செய்து மகம் அதை = (தக்கனுடைய) யாகத்தை வீட்டி = குலைத்து ஒருவனை = (அந்த) யாகம் நடத்திய தக்கனுக்கு ஆட்டின் முகம் அதை நாட்டி = ஆட்டின் முகத்தைப் பொருந்த வைத்து. மறை மகளார்க்கும் = மறை மகளாகிய சரசுவதிக்கு. வடு உற வாட்டு = காயம் உண்டாகும்படி வாட்டிய உமையவன் = உமாதேவியின் கணவனாகிய சிவபெருமான் அருள் பாலா = அருளிய குழந்தையே.


    சீட்டை எழுதி இவை ஆற்றில் எதிர் உற
    ஓட்டி அழல் பசை காட்டி சமணரை
    சீற்றமொடு கழு ஏற்ற அருளிய குருநாதா


    சீட்டை எழுதி = (வாழ்க அந்தணர் என்னும் பதிகத்தை) எழுதிய சீட்டை. வை(கை) ஆற்றில் எதிர் உற ஓட்டி = வைகையாற்று வெள்ளத்தில் எதிர் ஏற ஓட்டியும் அழல் பசை காட்டி =நெருப்பில் இட்ட ஏடு பச்சை நிறத்துடன் விளங்கும்படி. சமணரை = சமணர்களைசீற்றமொடு = கோபித்து. கழு ஏற்ற அருளிய =கழுவிலேற வைத்தருளிய. குரு நாதா = குரு நாதரே.


    தீர்த்த எனது அக மேட்டை உடன் நினை
    ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
    தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே.


    தீர்த்த = பரிசுத்தனே எனது அகம் மேட்டையுடன் =என் மனது விருப்பத்துடன் நினை = உன்னை ஏத்த = துதிக்க அருளுடன் நோக்கி = நீ அருள் பாலித்துக் கண் பார்த்தருளி தீர்த்தமலை நகர் காத்த = தீர்த்த மலை என்னும் ஊரில் உறையும் (பெருமாளே) சசி மகள் பெருமாளே= இந்திராணியின் மகள் தேவசேனைக்குப் பெருமாளே.





    விளக்கக் குறிப்புகள்
    இது மனதுக்குப் புத்தி கூறும் பாட்டு. அந்தோமனமே எனத் தொடங்கும் பாடலும்
    இது போன்றது.
    1. திரிபுரம் மூட்டி...
    அரிய திரிபுரம் எரிய விழித்தவன்).......................திருப்புகழ், குருவியெனப்பல.
    2. மறலியின் நாட்டம் அற....
    மார்க்கண்டருக்கு விதித்திருந்த பதினாறு ஆண்டு முடிந்த பிறகு, காலன் அவரைக் கவர வந்த போது, அவர் சிவ பூசையில் இருந்தார். காலன் பாசத்தை வீச,
    மார்க்கண்டர் சிவனைத் தியானிக்க, சிவன் எழுந்தருளிக் காலனைக் காலால்
    உதைத்துத் தள்ளினார்.


    பதிமூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி
    உதைத்தான் கூற்றம் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான்........கந்த புராணம்


    3. ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி...


    ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
    கூட்டியவா பாடி யுந்தீபற...திருவாசகம், திருவுந்தியார்


    தன் மருமகனான சிவபெருமான் தன்னை மதிக்க வில்லை என்று கோபம் கொண்ட தட்சன் சிவனை ஒதுக்கி வைத்து யாகத்தைச் செய்யத் தொடங்கினான். இதைக் கண்ட உமை, யாகத்தை அழிக்குமாறு கணவனை வேண்ட, அவருடைய கோபத் தீயினால் வீரபத்திரரும் காளியும் தோன்றினர். இவர்கள் தக்கனை வெட்டி வீழ்த்தி, பலருக்கும் தண்டனை அளித்தார்கள். பிறகு தேவி வேண்டிக்கொண்டதன்பேரில் தட்சனுடலுக்குஆட்டின் தலையை பொருத்தி உயிர் கொடுத்தார்.


    4. மறை மகளார்க்கும் வடுவுற வாட்டு...


    வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
    மூக்கொடு குயமும் கொய்தான்.......................................கந்த புராணம்


    5. சீட்டை எழுதி வைகையாற்றில்....


    திகுதிகென மண்ட விட்ட தீ ஒரு
    செழியனுடல் சென்று பற்றி வாருகர் திகையின் மண் வந்து
    ...திருப்புகழ், நிகமெனிலொன்று


    திருஞான சம்பந்தர் வரலாற்றைக் குறிக்கும். முருகனே சம்பந்தராக அவதரித்தார்
    என்பது அருணகிரி நாதர் கருத்து. அதனால் (மகிதலம் அணைந்த அத்தனே)
    இப்பூமியில் அவதரித்த குருவே என நிகமெனிலொன்று திருப்புகழில் கூறுகிறார்



    சம்பந்தர் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி
    சீட்டை எழுதி வைகையாற்றில்


    பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சி செய்தபோது திருஞான சம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்'' என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம், வெப்பு நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. அரசனின் வெப்பு நோயைத் தீர்க்க அரசி ஞானசம்பந்தர்ரை வேண்ட, அவரும் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அரசனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. மன்னன் மீண்டும் சைவமதற்கு மாற எண்ணினான். இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும்,தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய் விடுவதாகவும் அறிவித்தனர். அதன்படி இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர்.


    முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் திசையிலே ஓடிற்று. ஞான சம்பந்தர், `வாழ்க அந்தணர்`என்னும் திருப்பதிகத்தைப்பாடி, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச்சென்றது.


    அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் பாடி பாண்டியன் கூன் நிமிரச்செய்த்தால் நின்றசீர் நெடு மாறன் ஆயினான்


    அழல் பசை காட்டி


    இதற்கு முன் சமணர்கள் 'இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை நூல் போட்டு விரித்ததில். `போகமார்த்த பூண் முலையாள்` என்றதிருநள்ளாற்றுத் திருப்பதிகம் வந்தது. ஞானசம்பந்தர் திரு நள்ளாறு இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி`தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் பாடி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் அஸ்தி நாஸ்தி`என்ற தங்கள் சமய வசனத்தை எழுதி ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று. அருணகிரி நாதர் திருநள்ளார் திருப்புகழை பச்சையொண்கிரி என ஆரம்பிப்பது நோக்கத்தக்கது


    6.சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து

    சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
    தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
    தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா ---------- திருப்புகழ், ஊனத்தசை
Working...
X