Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    186.சாந்தமில்


    தாந்தன தானதன தாந்தன தானதன
    தாந்தன தானதன தனதான
    சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
    மூண்டவி யாதசம யவிரோத
    சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
    தாந்துணை யாவரென மடவார்மேல்
    ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
    தோய்ந்துரு காவறிவு தடுமாறி
    ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
    யான்தனி போய்விடுவ தியல்போதான்
    காந்தளி னானகர மான்தரு கானமயில்
    காந்தவி சாகசர வணவேளே
    காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
    யாண்டகை யேயிபமின் மணவாளா
    வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
    வேங்கட மாமலையி லுவைவோனே
    வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
    வேண்டவெ றாதுதவு பெருமாளே



    -186 திருவேங்கடம்

    பதம் பிரித்து உரை


    சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம்
    மூண்டு அவியாத சமய விரோத


    சாந்தம் இல் = மன அமைதி இல்லாத மோக எரி =காமம் என்னும் நெருப்பின். காந்தி = ஒளியையும். அவா அனிலம் = ஆசை என்னும் காற்றையும். மூண்டு = மும்மரமாகத் தோன்றி (பின்பு) அவியாத = அடங்காத. சமய விரோத = சமயப் பகைசம்பந்தமான.


    சாம் கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர்
    தாம் துணையாவர் என மடவார் மேல்


    சாம் கலை = அழிந்து போகின்ற கலை நூல். வாரிதியை = கடலையும். நீந்த ஒணாது = நீந்தமுடியாமல். உலகர் = உலகத்து மக்கள். தாம் துணை ஆவர் என = அவர்களே துணையாவர் எனக்கருதி. மடவார் மேல் = மாதர்கள் மேல் (மயக்கம்கொண்டு).


    ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு
    தோய்ந்து உருகா அறிவு தடுமாறி


    ஏந்து = அவர்கள் தாங்கும். இள வார் = இளமைஉள்ளதும் கச்சு அணிந்ததும். முளரி = தாமரைமொட்டுப் போன்றதுமான கொங்கையிலும். சாந்துஅணி மார்பினொடு = சந்தனம் அணிந்த மார்பிலும். தோய்ந்து = படிந்து. உருகா = மனம் உருகி. அறிவு தடுமாறி = அறிவு தடுமாட்டம் கொண்டு.


    ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம்
    யான் தனி போய் விடுவது இயல்போ தான்


    ஏங்கிட = திகைக்க. ஆருயிரை = என் அரிய உயிரைவாங்கிய = கவர வரும். காலன் வசம் = யமன்கையில் பட்டு. யான் = நான் தனி போய்விடுவது =தனியாகச் செல்வது (அ) அடியோன் அநாதை போல்துணை உற்றவனாய் போய் விடுவது. இயல்போ தான் = தகுதியோ தான்?


    [யான் தனி போய் விடுவது
    (இந்நிலை வராமலிருக்க முருகன் திருவடிகளைச் சதா தியானிக்க வேண்டும்.
    1. காலன் உயிர் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ - ,
    2. சூலம் பிடித்து எம பாசம் சுழற்றி தொடர்ந்து வரும் கலன் தனக்கு ஒரு காலும் அஞ்சேன் ஆலம் குடித்த பெருமான் குமாரன் ஆறுமுகவன் வேலும் திருக் கையும் உண்டே மெய்த்துணையே ] [ ] நடராஜன்


    காந்தளில் ஆன கர மான் தரு கான மயில்
    காந்த விசாக சரவண வேளே


    காந்தளில் ஆன = காந்தள் மலர் போன்ற கர மான் =திருக்கரங்களை உடையவளும் மான் தரு = மான்பெற்ற கான மயில் காந்த = காட்டு மயிலைப்போன்றவளுமாகிய (வள்ளியின்) காந்த = கணவனேமணவாளா விசாக = விசாகனே (அ) விசாக நாளில் அவதரித்தவனே சரவண =சரவணனே (அ)சரவணப் பொய்கையில் திரு உரு காட்டிய தெய்வமே வேளே = செவ்வேளே (அ) வீடு பேற்றில் விருப்பம் விளை விப்பவனே


    காண் தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி
    ஆள் தகையே இபம் மின் மணவாளா

    காண் தகு = காணத் தக்க. தேவர் பதி = தேவர்கள்தலை நகரான அமராவதியை. ஆண்டவனே =ஆண்டவனே சுருதி ஆண் தகையே = வேதப்பொருளான நம்பியே (அ) வேதம் புகழும்ஆண்மையும் தகுதியும் அமைந்தவனே,இபம் மின் மணவாளா = யானை போற்றி வளர்த்ததேவசேனையின் மணவாளனே.


    வேந்த குமார குக சேந்த மயூர வட
    வேங்கட மா மலையில் உறைவோனே

    வேந்த = அரசனே குமார = குமரனே (அ) என்றும்பதினாறாக இருப்பவனே குக = குகனே (அ) உள்ளக்குகையில் விளங்குபவனே சேந்த = சேந்தனே மயூர = மயில் வாகனனே வட வேங்கட மா மலையில் உறைவோனே = தமிழ் நாட்டின் வட எல்லையில்திருவேங்கட மலையில் என்றும் எழுந்தருளிஇருப்பவனே


    வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
    வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.


    வேண்டிய போது = புனித அடியார்கள் விரும்பும்போது வேண்டும் போதெல்லாம் வேண்டிய போகம் அது = (தங்களுக்கு) வேண்டிய சுகத்த வேண்ட =உன்னிடம் விண்ணப்பித்துக் கொள்ள வெறாது =வெறுப்புக் காட்டாமல் உதவு பெருமாளே = உதவுகின்ற பெருமாளே
    .




    குகஸ்ரீ இரசபதி அவர்களின் விளக்க உரை
    செங்காந்தள் என்பது ஒரு வகை மலர். அது ஐந்து இதழ்களை உடையது. குளிர்ந்த அம்மலர் கொடை நடையைக் குறிப்பிடும். நிறம், வடிவு, தொழில் நிலையை எண்ணி அவைகள் திருமகள் திருக்கரம் போல்வன என்கிறோம். எவர் அருகர் ? எவற்கு ஈதல் வேண்டும் ? இப்படி மருண்டு நோக்கும் திருமகளாரை காந்தளிர் ஆன கர மான் என்று கருதுகிறோம். மானும் மயிலும் வனத்தில் இருப்பவை. ஆதலால் வள்ளியாரை மான்தரு கானமயில் என மனனம் செய்கிறோம். முதலில் முகுந்தர் கண்களில் இருந்து முளைத்தார். இடையில்
    சிவ முனிவர் விழியில் இருந்தார். இறுதியில் மான் வயிற்றிலிருந்து மலர்ந்தார். கந்தப் பரமா, அவர்க்கு நீர் காந்தர் ஆனீர் . கந்தனை அன்பு மயில் கவர்ந்தது. வாழ்விக்கும் காந்தன் அருளால் மயிலை வசீகரித்தான். இப்படி நயம் தோன்ற சொல்கிறார் நல்லோர்.
    வி = பறவை, சாகன் = ஊர்பவன். இதன் படி நீ ஒரு மயிலை ஊர்பவன். வலத்தில் ஒரு மயிலை வைத்தவன். விசாக நட்சத்திரத்தில் வெளிப்பட்டவன்
    என்று ஒரு பொருளும் உண்டு. இவைகளை எண்ணி விசாகா என
    கூறுகிறோம். ச = மங்களம், ர = கொடையாளன், வ = அமைதி, ண = மறம் வென்றோன். அதனுடன் திருவளர் பொய்கையில் திருமுகம் காட்டியவன் ஆகிய உன்னை சரவணா என்பது தான் சால்பு. வேளே நீ கரு வேளை நாண வைத்தோன் . முத்தி விருப்பூட்டும் முதல்வன் நீ தானே அத்தா விண்ணவர் முருகருக்கு பட்டம் சூட்டினர். இன்று முதல் எமது இறை நீ என்றனர். இது கந்த புராண செய்தி. இதன் படி தேவர்பதி, தேவர் சேனாதிபதி முதலிய திரு நாமங்கள் மா பெரும் வான் உலக மன்னன் ஆயினை. இதனால் உன்னை தேவர் பதி ஆண்டவனே என்று தெரிந்து கூவுகிறோம்.


    ஓதலாம். ஓதி ஒடுங்லாம். அவ்வமயம் எங்கிருந்தோ பேரோசை எழுகிறது. ஓசை ஒலியாகிறது. நாதமாகி நயம் காட்டுகிறது. நாதத்தில் லயித்த போது எத்தனையோ நுட்பங்கள் விரைந்து செவியில் வந்து விழுகின்றன. செவியில் வந்து சேரும் செய்திகளை சுருதி என்று நாங்கள் சொல்லுகின்றோம். அவைகளால் தான் ஆண்மையும் தகு திறமுடைய, நலம் சிறந்த நம்பி என அறிகிறோம். சுருதி ஆண் தகை என்று சொல்லுகிறோம்.


    வான தேவர்கள் ஞான தேவியை என்றும் உன் இடத்தில் இருத்திளர்.
    பொன்னாய் மின்னும் அப்பூவையின் மணம் கண்டு மகிழும் நின்னை இபமின் மணவாளா என ஏத்துவோம். வள்ளியார் தமிழ் பேசுபவர். அவளின் காந்தன் என வட மொழியில் பெயர் ஏற்பார். பேசா வடமொழியை தேவயானையார் பேசுவார்.மணவாளா என்று விருது தமிழில் பெயர் ஏற்பார். பெரும, நின் ஆடலே ஆடல். ஒவ்வொரு உலகிற்கும் வேந்தர் ஒருவர் உளர். நீ எவ்வுலகிற்கும் ராஜா. ஆதலின்வேந்த என அடை மொழி கொடாமல் அழைக்கிறோம்.
    வித்திலிருந்து விளைவாகி பின் வீங்கி வெடிப்போர் பிறர். நீ புறத்தில்
    குமரன். அகத்தில் குகன். காணுமாறு உன்னைக் காட்டுவை, கண்ட பின் அந்தப்புற சந்திப்பு உற்சவத்தில் அணுவற உயிர்களில் கலப்பை.
    இவைகளை உணர்ந்தே குமரா, குகா என்று கூறி களிப்போம்.


    சேந்து என்பது சிவப்பு நிறம். செந்நிற மேனியன். செந்தழல் வண்ணன். போரொளிப் பிழம்பு எனப் பெறும் அத்தா நின்னை சேந்தா என விளித்து சிந்தை மகிழும். ஓம் மயில் ஊர்ந்தது முதல் நிலை. இந்திர மயிலில் ஏறியது இடை நிலை. சூர மயில் ஏறியது இறுதிச் செய்தி. இப்படி மும்மை மயிலில் ஊர்ந்து மூவகை உயிர்களுக்கும் அருள் புரி முதலாளியாம் உன்னை மயூரா என்று இடையறாது கூறும் எங்கள் வாய். திருமால் திருப்பதிகள் 108. அவைகளில் ஒன்று திருவேங்கடம். வடநாட்டு திருப்பதிகள் 12. அவைகளில் முதலாவது இது. ஆதலின் வட வேங்கடம் என்று திருவாய் மலர்வர் திருமாலடியர். வேம் = பாவம்,கடம் = எரித்தல் புகல் அடைந்தவரின் பாவத்தை போக்குவதால் இத்திருப்பதிக்கு திருவேங்கடம் எனப் பெயர். – வெல் கொடும் பவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் நங்கலம் பொருந்தும் சீர் வேங்கட மலையானது - என திருவேங்கட புராணம் புகலும். புரந்தரன்


    மகனாக மாதவன் மனைவிகளுடன் மகிழ்ந்து நின்றபோது மாலினி எனும் புலை மகளிடம் மயங்கினான். மனையைத் துறந்தான். மது அருந்தினான். புலால் புசித்தான். இறுதியில் வறியன் ஆனான். நோய் பல எய்தி நொந்தான். பித்தனாகி பிதற்றினான். படாத பாடு பல பட்டான். அலைந்து திரிந்தான். திருமலை அடைந்தான். தீவினை தீர்த்தான். மதி மலர்ந்தது. திருமாலை சேவித்தான். பரம பதம் எய்தினான் என்று புனித ஒரு வரலாற்றையும் அப்புராணம் புகலுகிறது. மற்றும் வேம் = அழிவின்மை, கடம் = பெரும் செல்வம். அழிவில்லா செல்வத்தை தன்னை அடைந்தோருக்கு அருளுவது ஆதலின் அம்மலைக்கு வேங்கடம் எனும் பெயர் விளைந்தது.இது வராக புராண அறிவிப்பு குன்றுதோராடிய குமரா, இப்படி எல்லாம் சிறக்க இருக்கும் வேங்கட மலையில் எழுந்தருளி இருக்கின்றாய். அதனால் உன்னை வடவேங்கட மாமலையில் உறைவோனே என வாழ்த்துகிறோம். கேட்ட பொருளியும் கேடில்லா தாதா நீ, ஆதலின் நின்னை அடியார்கள் நம்பி உள்ளனர். பொன் கேட்பார், பொருள் கேட்பார், அணி கோட்பார், எணி கோட்பார்., நிலம் கேட்பார், தோள் வலம் கேட்பார், மங்கை இவளை மணக்கச் செய், இங்ஙனம் எல்லாம் இம்மை தா, மறுமை தா, வீடு தா,வாழச் செய், பணியச் செய், ஓதச் செய், உருகச் செய், என்று யாது கேட்டபடியே இருப்பர் உத்தம சித்தரான உன் அடியார்கள். நீயும் சலிக்க மாட்டாய். என் அடியார்கள் தானே கேட்பவர்கள் என மகிழ்வை. ஓயாது
    அவர்கட்கு உதவும் உன்னை வெறாது உதவும் பெருமாளே என்று அன்புக் குரல் கொடுத்து அழைப்போம். இது தான் முறை. இதற்கு மாறான செய்திகள் பல இருக்கின்றனவே. சொல்லவா பிரபு ? அதையும் சொல்லி விடுகிறேன்.


    திருவேங்கடம் எங்கள் சொத்து. மற்ற எச்சமயத்தாருக்கும் இங்கு இடம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் வைணவர்கள். அறிவிலாதவரை மாடே என்று விளிப்பர் மக்கள்.
    அந்த மாடு சிவனுக்கு வாகனம். அழிவு செய்வதால் அவன் பெயர் அரன் என்று ஆயது. அவன் இருப்பது வெள்ளி மலை அவன் பெயர் ஐந்தெழுத்தில் அடங்கும். ஏந்தினன் சூலம். எரி மேனியன் அவன். அப்பப்பா எவ்வளவு பயங்கரம். காண்பதும் நலம். குரல் கேட்பது புண்ணியம் என்று கருடனைக் கூறுவர். அந்த கருடன் எங்கள் பெருமாளுக்கு ஊர்தி. ஜலார்ணவராதலால் குளிர்ந்தவர் எங்கள் திருமால். அறிஞர் அவரை நாராயணர் என்று அழைப்பர். அவர் இருப்பது பயனே மிகுந்த பாற்கடல். எட்டு எழுத்துக்கு உரியன் எங்கள் எம்மான். அவர் ஏந்தியது தர்ம சக்கரம். அரன் நாராயணன் நாமம், ஆண்விடை புள் ஊர்தி, உறை நூல் மறை உறையும் கோயில் வரை நீர், கரும அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி, உருவம் எரி கார் மேனி என்று இதை பக்குவமாக அங்கள் ஆழ்வார் பறை அளிக்கிறார். இப்போது தெரிகிறதா திருமானார் ஏற்றம் என்ன என்ற புது விருதை அவர்கள் புகல்கிறார்கள். யாரைப் பார்த்து ஐயா பேசுகிறீர் ? இப்படித் திரும்பும். திருப்பதியில் வில்வார்ச்சனை தினமும் நிகழ்கிறது. ஆதியில் அது சிவலாயம். அதை உங்கள் ஆழ்வார்கள் அறிவார்கள். - தாழ்சடையும் நீள்முடியும் பொன் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்நாணும் தோன்று மால் சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்தது - என்ற பக்குவமாக இணைத்துப் பாடி விட்டு போனார்கள்.


    ராமானுஜர் செய்த திரிசனத்தால் எங்கள் சிவனார் இன்று திருமாலாக சேவை தருகிறார். இதை அறியாமல் உளறாதீர் என்று சதுரம் கட்டி உரைக்கிறார் சைவர். அவசரப்படாதீர்கள். வைஷ்ணவி, ஜனனி எனும் இரு சக்திகள் இங்கு எழுந்தருளிஇருக்கின்றனர். கர்ப்பக்கிரகத்தின் மதில் மேல் சிங்கங்கள் இருப்பது தெரிகிறதா ?வேங்கடேஸ்வரருக்கு அபிஷேகம் வெள்ளிக்கிழமை அவருக்கு சாத்தும் பரிவட்டம் 36 முழம் ( 18 + 18 ) இந்த அளவு இரு சக்திகளுக்குத் தான் உரியது. மேலும் அந்த ஆடையில் பச்சைக் கற்பூரம் பரிமளிக்கிறது. கண்ணிருந்தால் பாருங்கள். காது படைத்தவர் கேளுங்கள். இந்த அனுபவங்களுக்கு உரியவர் திருமாலா ?எங்கள் தேவியா ?. அத் தேவியை பெருமாள் ஆக்கினாலும் தாய்மை சீறுவது இல்லை. அக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறாள் எங்கள் அம்பிகை என்று சாக்தேயர் வந்து சதுர் கச்சேரி செய்கிறார். நிறுத்துங்கள் உங்கள் பேச்சை. நான் செல்வதைக் கேளுங்கள். இது சுப்ரமண்ய ஸ்தலம் தான். இங்கு கௌமாரி எனும் சக்தி இருப்பதால் இது குமரன் கோயிலே என்பதில் தப்பில்லை. குன்றுதோறாடலில் இதுவும் ஒன்று. திருவேங்கடம் முருகன் தலம் என்று எங்கள் அருமை கந்த புராணம்
    அறிவிக்கிறது. வேங்கட சுப்ரமண்யம் என்னும் மக்கள் வைத்துக் கொள்ளும் பெயரும் இதை வலியுருத்துகிறது. இங்கு குமார தாரை எனும் தீர்த்தம் இருக்கிறது. அபிஷேக ஆராதனை முறைகளும் அவன் முருகன் தான் என அறிவிக்கின்றன. குகனேரி என்பது அங்குள்ள சரவணத்தின் பெயர். அதைக் கோனேரி என திரித்து இது தான் புஷ்கரிணி என்கிறார்கள். என்று கொட்டு கொட்டு என்று பேச்சைக் கொட்டுகிறார்கள் கௌமாரர்கள். ஒரு கவிராயர் திருவே திகழ் மலை மேல் ஏறுகிறார். முருகா, குமரா, குகா என உரு ஏற்றியபடியே வருகிறார். சன்னதியைச் சார்ந்தார். பெருமாளை நோக்கினார். ஐயோ என அலறினார். - வட வேங்கட மலையில் வாழ் முருகா நித்தம் திடம் ஓங்கும் நின் சீர் தெரிந்தும் மடம் ஓங்க நாமத்தைச் சாத்தினார் நம்மையும் என் செய்வாரோ காமற்று இங்கு ஆரிருப்பார் காண் – என்று பதைத்துப் பாடினார். விரு விரு என்று மலை இறங்கி ஓடினார்.. என்ன கூத்து இது ? கருவில் இருந்தே திருவான தம் சமயத்தை தாம் உணர்ந்து அவைகள் அறிவித்த முறைகளை உணர்ந்து ,அனுஷ்டித்து படிக்கிரமமான அவைகளால் படி ஏறாமல் வீண் வாதி பிரதிவாதங்களில் தலையிட்டு மக்கள் வேதனை எய்துவதா ?. என்ன சங்கடம் இது. எவையும் சகோதர சமயங்கள் என்று எண்ணாமல் ஒன்றதே பேரூர் வழி ஆறு
    அதற்குள என்ற உண்மையை அச்சமய ஆச்சார்ரியர்களும் தம்
    கொள்கையவர்கட்கு சிறப்பாக சொல்லி மற்றவர்கட்கு பொதுவாகஎவ்வழிபாடும்
    நல்லதே என்ற அறிவித்திருப்பதையும் அறியாமல் தம் அறிவிற்கு தக்கபடி புனித நுட்பங்கட்கு பொருள் செய்து சாந்தத்தின் தனிப் பெரும் குறை சமய வாத பிரதி வாதங்களை வளர்த்து தம் சமய மோகாவேசத்தால் மூர்தண்டம் ஆகி, உள்ளம் நாற,உடல் வியர்க்க, கண்கள் சிவக்க, எம் சமய மக்கள் எத்தனை கோடியர் என்று ஆரவாரித்து தாமும் கெட்டு பிறர் அமைதிதையும் குலைத்துசாவது தான் சம்ரதாயமா? ஐயோ ???
    சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனில மூண்ட அவியாத சமய விரோத சாங்கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர் தாம் துணை ஆவர் என ஏமாந்து காய்ந்து , தீய்ந்து, கரிவது இயல்போ துரையே???? இந்த ஆரவார சந்தையில் ஆட்டம் போட்டு அதனுடன் ஏந்திளயாரின் இளம் குய நாச்சியர் காமக் கனலால் கண் அவிந்து கருத்து நைந்து கலங்குவது முறையோ எங்கள் இறையோனே ???? நீர் கான மயில் காந்தன்.வள்ளியோடு செய்த உன் வாத பிரதி வாதங்கள் அன்பும் அருளும் மோதிய அருமை நடை. இருமையில் அத் தேவியை அணைத்துக் கொண்டாய். நாங்களும் காந்தர். இது காந்திப் போகும் கயமைத் தனம். எங்கள் வாதங்கள் இருளும் மருளும் இணைந்த நிலை. பிணங்கி எவரும் பிரியும் நடை. நீரும் வள்ளியாரும் இறவா பிறவா சிவயோகத்தர். எங்கள் வாழ்க்கை பொய்மையில் பொன்றும் நிலை வாக்காலும், மனத்தாலும் காயத்தாலும் வம்பே எங்களில் வளர்ந்தது. வந்தேன் என்று காலன் வருவானே. செய்த பாவம் எல்லாம் அப்போது சிரிக்குமே. கட்டித் தழுவிய உறவினரும் கை விட ஊராரும் ஒதுக்கி விட அகதியாய் காலன் கையில் அகப்பட்டுக் கொள்வதோ??? நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறதே.
    காந்தா, விசாகா, சரவணா, வேளே, ஆண்டவனே, ஆண்தகையே, மணவாளா,சேந்தா, குமாரா, குகா மயூரா, வடவேங்கட மாமலையில் உறைவோனே, உதவும் பெருமாளே, என்னைக் காக்க நீ இருக்க அதுயேன் காலன் கை வசப்படுவது முறையோ ???????வா ஐயா வந்து இந்த அகதியைக் கா ஐயா என்று கதறியபடி மக்கள் குறைகளை
    தம் மேல் ஏற்றி திருவாய் மலர்ந்த திருப்புகழ் இது



    பார்க்க ஸ்வாமி என்றால் குமார ஸ்வாமியே
    திருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘வடவேங்கட மாமலை மேவிய பெருமாளே’ என்கிறாறோ?. ‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று திருவாஞ்சியம் திருப்புகழில் சொல்வதின் மூலம் அப்படித்தான் எனத்தோன்றுகிறது

    திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?
    அக்டோபர் 2013ல் கிடைத்த செய்தி
    திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா? என்று கேட்ட கேள்விக்கு
    ‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.
    ‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாகஇருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும்வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம்தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக்கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ –என்று கேட்டார் பெரியவர்.
    ‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும்இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன்கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.
    ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?
    ‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப்படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!
    திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன்கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்குவாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்திக்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி,தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின்,அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில்ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அதுஇருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும்சொல்வது பொருந்துகிறது’ என்றார்.
    பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில்கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்றுபணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதைகி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரேபரவசம்.
    ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின்பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதைஅவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?
    கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள்இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றேநெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாகமுப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம்இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள்பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்திஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும்கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகேபுரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாகபெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிறகேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:
    ‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாகமாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும்,வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில்இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனேபெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம்.இது ஒரு கோணம்.
    அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம்ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன்.அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல்உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன்அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


    கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன்
    நன்றி; தீபம் இதழ்
    விளக்கக் குறிப்புகள்
    தனி போய் விடுவது இயல்போ தான்....
    உயிர் போம் அத் தனி வழிக்கே... கந்தர் அலங்காரம்
Working...
X