Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    185.சரவணபவநிதி


    தனதன தனதன தனதன தனதன
    தனதன தனதன தனதன தனதன
    தனதன தனதன தனதன தனதன தனதான


    சரவண பவநிதி யறுமுக குருபர
    சரவண பவநிதி யறுமுக குருபர
    சரவண பவநிதி யறுமுக குருபர எனவோதித்
    தமிழினி லுருகிய வடிரவ ரிடமுறு
    சனனம ரணமதை யொழிவுற சிவமுற
    தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
    கருணைய விழிபொழி யொருதனி முதலென
    வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
    கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா
    கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
    கலகமி னையதுள கழியவும் நிலைபெற
    கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே
    திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
    குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
    சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா
    தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
    மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
    திமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே
    அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
    மருகனெ னவெவரு மதிசய முடையவ
    அமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே
    அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
    வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
    அழகினு டனமரு மரகர சிவசிவ பெருமாளே

    -185 திருவேங்கடம்



    பதம் பிரித்தல், பத உரை


    சரவண பவ நிதி அறு முக குருபர
    சரவண பவ நிதி அறுமுக குருபர
    சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி


    சரவண பவ = தர்ப்பைக் காட்டில் (சரவண மடுவில்)தோன்றியவனே நிதி = என்றும் அழியாத சேம நிதியே அறுமுக = ஆறு முகனே குரு பர = ஞான குரு மூர்த்தியே........... என ஓதி = என்று பல முறை ஓதி.


    தமிழினில் உருகிய அடியவர் இடம் உறு
    சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற
    தரு பிணி து(ள்)ள வரம் எமது உயிர் சுகம் உற அருள்வாயே


    தமிழினில் = தமிழ்க் கவிதைகளில் உருகிய =மனம் உருகிய அடியவரிடம் = அடியார்களிடத்துஉறு = உற்ற சனன மரணம் அதை = பிறப்பு இறப்பு ஆகியவற்றை ஒழிவுற = நீங்கும்படி சிவம் உற =சிவப் பேற்றை அடைய தரு பிணி து(ள்)ள =வருகின்ற நோய்கள் குதித்து ஓட எமது உயிர் சுகம் உற = எமது உயிர் சுகமாக இருக்கவரம் அருள்வாயே = வரம் தந்து அருளுக.


    கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என
    வரு கரி திரு முகர் துணை கொ(ள்)ளும் இளையவ
    கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா


    விழி பொழி கருணைய = கருணையை பொழியும்கண்களை உடையவனே ஒரு தனி முதல் என =ஒப்பற்ற தனி முதல்வன் என்னும்படி வரு கரி =வந்த யானையின் திரு முகர் = அழகிய முகம்உடைய கணபதியை துணை கொளும் இளையவ =துணைவனாகக் கொண்ட தம்பியே கவிதை அமுத மொழி தரு=(தமிழ்க்) கவிதைகளை அமுதம் போன்ற நடையில் அமைப்பவர்களுக்குஉயிர் பெற = நற் கதி பெற அருள் நேயா =அருளுகின்ற நண்பனே.


    கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள்
    கலகம் இனையது உள கழியவும் நிலைபெற
    கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே


    கடல் உலகினில் = கடல் சூழ்ந்த இவ்வுலகில் வரும் உயிர் படும் = தோன்றும் உயிர்கள் படுகின்ற அவதிகள் = துன்பங்களும். கலகம் =கலக்கங்களும் இணையது உள = இன்னும் உள்ள பிற வேதனை களும் கழியவும் = கழிந்து நீங்கவும் நிலை பெற = நிலை பெறும்படியான நற் கதியும் = நல்லகதியைப் பெறுதலையும் உனது திருவடி நிழல் தருவதும் = உனது திருவடியின் நிழல் தருகின்றதும் ஆகிய ஒரு நாளே = ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?


    திரி புரம் எரி செயும் இறையவர் அருளிய
    குமர சமர புரி தணிகையும் மிகும் உயர்
    சிவகிரியிலும் வட மலையிலும் உலவிய வடிவேலா


    திரி புரம் எரி செயும் இறைவர் = திரிபுரங்களை எரித்த சிவபெருமான் அருளிய குமர = அளித்த குமரனே சமர புரி =திருப்போரூரிலும் தணிகையும் =திருத்தணிகையிலும் மிகும் உயர் = மிகவும் உயர்ந்த சிவ கிரியிலும் = பழனியிலும் வட மலையிலும் = வட வேங்கட மலையிலும்உலவிய வடிவேலா = உலவுகின்ற கூரிய வேலனே.


    தினமும் உனது துதி பரவிய அடியவர்
    மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
    திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெரு வாழ்வே


    தினமும் உனது துதி பரவிய = நாள் தோறும் உனது புகழ்த் துதிகளைப் பரவுகின்ற. அடியவர்=அடியார்களுடைய மனது = மனங்களில் குடி இரும் = குடி கொண்டும் இரு பொருளிலும் இலகுவ = சத்தி, சிவம் என்ற இரண்டு பொருள்களிலும் விளங்குபவனே திமிர =இருண்ட. மலம் ஒழிய = (ஆணவ) மலம் நீங்கதினகரன் என = ஞான சூரியன் என்னும்படி வரு =வருகின்ற பெரு வாழ்வே = பெரிய வாழ்வானவனே.


    அரவு அணை மிசை துயில் நரகரி நெடியவர்
    மருகன் எனவே வரும் அதிசயம் உடையவ
    அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே


    அரவு அணை மிசை = ஆதிசேடன் என்னும் பாம்பணையின் மேல் துயில் = பள்ளி கொண்டநரகரி = நரகாசுரனைக் கொன்றவர் நெடியவர் =(திருவிக்ரம வடிவம் கொண்ட) திருமாலின்மருகன் எனவே வரு = மருகன் எனக் கூறும்படி வந்துள்ள அதிசயம் உடையவ = அதிசய மூர்த்தியே அமலி விமலி = மலம் இல்லாதவள்பரை = பரா சத்தி உமையவள் = உமா தேவிஅருளிய முருகோனே = அருளிய குழந்தையே.


    அதலம் விதலம் முதல் கிடுகிடு கிடுஎன
    வரும் மயிலில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவு உற
    அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே.


    அதல விதல முதல் = அதலம், விதலம் முதலானஏழு உலகங்களும் கிடுகிடு கிடு என = கிடு கிடு என்று நடுங்க வரும் மயிலினில் இனிது ஒளிர் =வருகின்ற மயிலில் இனிதாக ஒளிர்கின்ற(பெருமாளே) ஷடுமையில்=ஆறு எழுத்து மந்திரத்தில் அழகினுடன் நடுவு உற அமரும்=அழகுடன் மத்தியிலே பொருந்து கின்றஅரகர சிவ சிவ பெருமாளே = அரகர சிவசிவ பெருமாளே.



    .



    விளக்கக் குறிப்புகள்
    இது ஒரு அருமையான துதிப் பாடல்.


    வட மலையிலும் உலவிய வடிவேலா...
    அண்ட மன்னுயி ரீன்றவ ளுடன்முனி வாகித்
    தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
    மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
    பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்... கந்த புராணம்.


    பார்வதியுடன் மாறுபட்டு முருக வேள் கந்தகிரியை விட்டு பாதாளத்துக்குச் சென்று, அங்கிருந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கட மலையில் எழுந்தருளினார் என்பது வரலாறு.
    இந்தத் திருப்புகழ் பாடல், சரவணபவ எனும் மந்திரத்தில் துவங்கி, 'ஹர ஹர சிவ சிவ’ எனும் மந்திரத்தில் நிறைவு பெறுகிறது. ஸ்ரீஆதிசங்கரர் வகுத்த ஷண்மதங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
    வருகரி திருமுகர் என காணாபத்யத்தையும்
    திரிபுரம் எரிசெயும் இறையவர் என சைவத்தையும்
    தினகரன் என வரு என சௌரத்தையும்
    நரஹரி நெடியவர் என வைணவத்தையும்
    அமலி, விமலி, பரை என சாக்தத்தையும்
    பாடல் முழுமையாக கௌமாரத்தையும் குறிப்பிடுவதாக சொல்வார்கள் -




    திரு நடராஜனின் விளக்கவுரை


    சரவணபவ = தர்ப்பைக் காட்டில் வெளிப்பட்டவனே,
    நிதி = என்றும் அழியாத சேம நிதியே,
    அறுமுக = ஆறுமுக தெய்வமே,
    குருபர = மேலான பொருளை உபதேசம் செய்பவனே,


    சரவணபவ = ஈகை, ஒளி, அறக்கருணை, மறக்கருணை முதலிய
    அருட் குணங்களோடு போன்றியவனே,
    நிதி = அடியார்களுக்கு முத்திச் செல்வத்தை அளிப்பவனே
    அறுமுக = ஆறு திக்குகளிலும் அருட்கடாட்சத்தைச் அடியார்கள் மீது செலுத்துபவனே,
    குருபர = அனைத்து குருமார்களுக்கும் மேலான குருவே,


    (ஸ்ரீவித்யா பரம்பரையில் பெரிய உபாசகர்களான ஹயக்கீவர், லோபமுத்ரா, மன்மதன், இந்திரன் முதலானவர்களுக்கு தாமே குருவாக இருப்பவர் முருகப் பெருமான். தமது அன்னையின் ஸ்ரீவித்யையை குகானந்தநாதர் என்ற பெயரில் பிரகாசப்படுத்த விளங்குகிறார். அவர் கையில் இருக்கும் வஜ்ரவேல் அன்னையின் ஷோடாட்சர மந்திரம் தான் என்பர் அப்பரம்பரையினர். )


    சரவணபவநிதி = ஆறெழுத்து மந்திரத்தின் செல்வமே,


    அறுமுக = மனிதன் கருப்பையில் இருக்கும் போதிலிருந்து இறுதி வரை ஆறு நிலைகளிருந்து காப்பவனே
    1 கருப்பையில் ஊறு வராது காத்தல்,
    2. பத்தாவது மாத முடிவில் ஆபத்து வராமல்காத்து ரக்ஷிப்பது,
    3. இளமையில் ஏற்படும் பல நோய்கள் மென்மையாகக் கழியச் செய்தல்,
    4 இல்லற வாழ்க்கையின் சுமையைத் தாங்க பலம் கொடுத்தல்,
    5. மூப்பு பிராயத்தில் உடன் இருந்து காத்தல்,
    6. காலனிடத்து அணுகாதே கந்த லோகத்திற்கு அழைத்துச் செல்லல். ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் - இந்த அருள் ஆடல்கள் செய்யும் ஆறுமுகங்களை உடையவனே)


    குருபர = லோக குருவாக தக்ஷிணாமூர்த்திக்கு ஆச்சார்யனே,


    என ஓதி = என்று பல முறை ஓதிக் கொண்டு,


    தமிழினில் உருகிய அடியவர் இடமுறு = தமிழ்பாடல்களிலும் வசனங்களிலும் மனம் உருகும் அடியார்களுக்கு நேரும்,


    சனன மரணமதை ஒழிவுற சிவமுற = பிறப்பு இறப்புச் சுழலை அடியோடு நீக்கி, சிவயோக பாவனை வந்து சேர,


    தரு பிணி துள்ள வர = வருகின்ற பிணிகள் குதித்து நீங்கி ஓட,


    எமது உயிர் சுகமுற அருள்வாயே = எமது உயிர் பேரின்பம் அடைய அருள் புரிய வேண்டும்.


    கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என = கண்களில் பெருகும் கருணை நிறைந்த இறைவனே, ஒப்பற்ற தனி முதல்வனே என்று,
    வரு கரி திருமுகர் துணை கொளும் இளையவ = வருகின்ற யானைமுக கணபதிக்கு சகோதரனாக விளங்கும் குமரனே
    கவிதைஅமுதமொழி தருபவர் = அமிர்தம் போன்று வார்த்தைகள் வைத்து கவி புனைபவரின்
    உயிர் பெற அருள் நேயா = உயிர் உயர் கதி பெற அருள் புரிகின்ற அன்பனே


    கடல் உலகினில் வரும் = கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையதுள கழியவும்= உயிர்களின் துன்பங்கள், கலக்கங்கள் ஆகியவற்றை நீங்கவும், நிலை பெற கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒருநாளே = சாஸ்வதமான நற்கதி பெறவும் உனது சரணங்களில் அமைதியோடு வாழும் பேற்றையும் பெறும் நல்ல நாள் எனறு வருமோ ?


    திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர = திரிபுரங்களை எரித்த சிவபெருமான் அருளிய குமரனே


    சமரபுரி தணிகையும் மிகும் உயர் சிவகிரியிலும் =திருப்போரூர், திருத்தணி, உயர்ந்த பழநி மலை


    வட மலையிலும் உலவிய = வடிவேலா வடவேங்கட மலை முதலிய தலங்களில் , உலாவுகின்ற கூர் வேலாயுதனே,


    தினமும் உனது துதி பரவிய அடியவர் = தினந்தோறும் உனது புகழை பாடி பரப்பும், அடியார்களின்,


    மனது குடியும் = உள்ளங்களில் நிலையாக விளங்கியும்,


    இரு பொருளிலும் இலகுவ = சிவம் சக்தி எனும் இரு தத்துவங்களிலும் பெரிய பொருளான ஓங்காரத்திலும் உட்பொருளாக உறைபவனே,


    திமிர மலம் ஒழிய தினகரன் எனவரு பெரு வாழ்வே =ஆணவ மலம் நீங்க ஞான சூரியனாக வரும் பெரும் செல்வமே,


    அரவணை மிசை, துயில் நரகரி நெடியவர், = பாம்புப் படுக்கையில் துயில் கொண்டிருக்கும் நரசிம்மர்( அல்லது நரகாசுரனை அழித்தவர் ) திரிவிக்ரம அவதாரம் எடுத்த திருமாலின்,


    மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ = மருமகன் என அனைவரும் புகழும் அற்புத மூர்த்தியே,


    அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே = மலமற்ற பரதேவதை உமையாள் பெற்ற குழந்தையே


    அதல விதல முதல் கிடுகிடு கிடு என = அதலம் விதலம் முதல் ஏழு உலகங்களும் கிடு கிடு கிடு என்று நடுங்க,


    வரு மயிலின் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற = பவனி வரும் மயில் வாகனத்தில் இனிதாக விளங்கி ஒளிர்கின்ற ஆறெழுத்து மந்திர சக்தியின் மத்தில் உள்ள விந்து ஸ்தானத்தில்,


    அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே =அழகுடன் வீற்றிருக்கும் பாவ சங்காரனான மங்களப் பொருளே



    இங்கு முருகன் கையில் இருக்கும் வேல் அன்னை பராசக்தி கொடுத்ததாக கருதப்படுகிறது
Working...
X