Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    166.தொல்லைமுதல்


    தையதன தானந்த தையதன தானந்த
    தையதன தானந்த தனதான




    தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
    சொல்லுகுண மூவந்த மெனவாகி
    துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
    தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்
    பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
    பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப்
    பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
    பௌவமுற வேநின்ற தருள்வாயே
    கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
    கல்வருக வேநின்று குழலுதுங்
    கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
    கைதொழுமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா
    கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
    கொள்ளைகொளு மாரன்கை யலராலே
    கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
    கொல்லிமலை மேனின்ற பெருமாளே
    .
    - 166 கொல்லிமலை
    - நாமக்கல் அருகில்



    பதம் பிரித்து உரை




    தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள்
    சொல்லு(ம்) குணம் மூ அந்தம் என ஆகி


    தொல்லை = பழம் பொருள் முதல் = முதற் பொருள் (என்னும்படி) தான் ஒன்று = தான் ஒன்றாய் விளங்குவதாய் மெல்லி இரு பேதங்கள் = சிவம், சக்தி என்னும் இரண்டு வேறு தன்மையதாய் சொல்லும் =சொல்லப்படும் குணம் மூ அந்தம் = ராசத, தாமத,சாத்துவிகம் எனப்படும் மூன்று குணங்களின்முடிவாக உள்ள. என ஆகி = திரி மூர்த்திகளாய்


    துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
    தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும்


    துய்ய = தூயதான சதுர் வேதங்கள் = நான்கு வேதங்களாய் வெய்ய = கொடிய புலன் ஓர் ஐந்தும் = ஐம்புலன்களையும் தொய்யும் = சோர்வடையச் செய்யும்
    பொருள் = பொருள் கொண்ட ஆறு அங்கம் என =ஆறு வகைப்பட்ட வேதப் பொருள் உணர்த்தும் கருவிகளாக மேவும் = விளங்குவதாய்.


    பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
    பல்கு(ம்) தமிழ் தான் ஒன்றி இசையாகி


    பல்ல பல = பலப்பல நாதங்கள் அல்க = ஒலிகளில் தங்குவதாய் பசு பாசங்கள் பல்கு = உயிர், தளை என்பனவாய்ப் பெருகும். தமிழ் தான் ஒன்றி =தமிழில் பொருந்தி இசையாகி = இன்னிசையாகி


    பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருப ஆனந்த
    பௌவம் உறவே நின்றது அருள்வாயே


    பல் உயிருமாய் = பல உயிர்களுமாய் அந்தம் இல்ல =முடிவில்லாததாய் சொருப ஆனந்த = உள்ள ஆனந்த உருவ பௌவம் உறவே = கடலை அடையும்படிநின்றது அருள்வாயே = செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை அருள்வாயாக.


    கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல்
    வருகவே நின்று குழல் ஊதும்


    கல் உருக = மலையும் உருகும்படி வேயின் கண் =மூங்கிலில் அல்லல் படும் = கட்டப்படும் கோ =பசுக்கள் அம் புகல் வருகவே = அழகிய புகும் இடம் வந்து சேரும்படி நின்று குழல் ஊதும் = நின்று புல்லாங் குழலை ஊதுகின்ற


    கையன் மிசை ஏறும் உம்பன் நொய்ய சடையோன் எந்தை
    கை தொழு(ம்) மெய் ஞானம் சொல் கதிர்வேலா


    கையன் = கையை உடைய திருமாலாகிய மிசை ஏறும் = (விடையின்) மீது ஏறுகின்ற உம்பன் =பெரியோனும் நொய்ய சடையோன் எந்தை = புன் சடையோனும் எந்தையுமாகிய சிவ பெருமான் கை தொழுது = கை தொழுது நிற்க மெய்ஞ் ஞானம் சொல் = (அவருக்குப்) பிரணவப் பொருளைப் போதித்த கதிர் வேலா = ஒளி வேலனே.


    கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று
    கொள்ளை கொளும் மாரன் கை அலராலே


    கொல்லை மிசை வாழ்கின்ற = (தினைக்) கொல்லையில் வாழ்கின்ற. வள்ளி = வள்ளியின் புனமே சென்று = புனத்துக்குச் சென்று கொள்ளை கொள்ளும் = (உயிரைக்) கொள்ளை கொள்ளும்மாரன் = மன்மதனுடைய கை அலராலே = கையில் உள்ள மலர்ப் பாணத்தின் செய்கையால்.


    கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த
    கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே.


    கொய்து தழையே கொண்டு செல்லும் = தழை கொய்து எடுத்துக் கொண்டு சென்ற மழவா = கட்டழகு உடையவனே கந்த = கந்தனே கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே = கொல்லி மலை மேல் விளங்கும் பெருமாளே.



    .


    விளக்கக் குறிப்புகள்


    1. இப்பாடலில் மூலப் பொருள் ஒன்று, சக்தி சிவம் இரண்டு, குணங்கள் மூன்று,வேதங்கள் நான்கு, புலன்கள் ஐந்து, அங்கங்கள் ஆறு என வரும் அழகைக் காணலாம்.
    (ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றவன் மூன்னறினுள் நான்குணர்ந் தான்ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே)...திருமந்திரம் 1.
    ஆறு அங்கங்கள் ...சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், சோதிடம், கல்பம் என்பன.


    2. கையன் மிசை ஏறும் உம்பன்....
    திரிபுரம் எரிக்கச் சென்றபோது, சிவனுடைய தேர் நெரிந்து பூமியில் அழுந்தியது. திருமால் இறைவன் கொடுத்த வலிமையால் இடபமாகி தேரை முன் போல் நிறுத்தினார். பின்னர் இறைவனை வேண்டி அவரை எந்நாளும் சுமக்க மழவிடையாக மாறினார்.


    3. கொய்து தழையே கொண்டு செல்லும் மழவன்...
    அகப் பொருளில் தழை கொண்டு சேறுதல் என்பது ஒரு துறை. தலைவிக்குத் தலைவன் சந்தனத் தழை ஆடை உடுக்கத் தருவது.
    (தழையு டுத்தகு றத்திப தத்துணை
    வருடி வட்டமு கத்தில தக்குறி)...திருப்புகழ் (பழமைசெப்பிய)
    .
Working...
X