Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    165.ஐங்கரனை




    தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
    தந்ததன தத்ததன தனதான




    ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
    ரந்திபக லற்றநினை வருள்வாயே
    அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
    அன்பொடுது திக்கமன மருள்வாயே
    தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
    சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
    தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
    சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே
    மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
    முன்றனைநி னைத்தமைய அருள்வாயே
    மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
    வந்தணைய புத்தியினை யருள்வாயே
    கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
    கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
    குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
    கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே



    -165 கொங்கணகிரி


    தாராபுரம் – காங்கேயம் வழியில்.
    வட்டமலை என்ற பெயரும் உண்டு



    பதம் பிரித்து உரை




    ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
    அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே


    ஐங்கரனை ஒத்த = ஐந்து கரங்களை உடைய விநாயகரை ஒத்த மனம்= மனத்தையும் ஐம்புலம்= ஐம்புலன்களையும் அகற்றி = நீக்கி விலக்கி வளர் அந்தி பகல் அற்ற=(அதன் பலனாகக் கிடைக்கும்)இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாத நினைவு அருள்வாயே =நிலையை அருள் புரிவாயாக


    அம் புவி தனக்கு உள் வளர் செம் தமிழ் வழுத்தி உனை
    அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே


    அம் = அழகிய புவி தனக்கு உள் வளர் = இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழ் வழுத்தி = செந்தமிழால் போற்றி உனை அன்பொடு துதிக்க = உன்னை விரும்பித் துதிக்கும் மனம் அருள்வாயே = மன நிலையை கொடுத்து அருள்வாயாக.


    தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற
    சந்திர வெளிக்கு வழி அருள்வாயே


    தங்கிய = நிலைத்துள்ள தவத்து உணர்வு தந்து = தவநிலை உணர்ச்சியைத் தந்து அடிமை = அடிமையாகிய நான் முத்தி பெற =வீடு பேற்றை அடைய சந்திர வெளிக்கு வழி = யோக நிலையிற் கண்ட சந்திர வெளியைக் காணும்படியான வழியை.
    அருள்வாயே = அருள் புரிவாயாக


    தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்க வளர்
    சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே


    தண்டிகை = பல்லக்கு கனப் பவுசு தமை= பெருமை,
    கௌரவம் இவை எண் திசை = எட்டுத் திசைகளில் உள்ளவர்களும்மதிக்க = மதிக்கும் படி சம்ப்ரம
    விதத்துடனே = சிறப்பு வகையில் அருள்வாயே
    = அருள் புரிவாயாக.


    மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனு(ம்) உற்ற மனம்
    உன்றனை நினைத்து அமைய அருள்வாயே


    மங்கையர் சுகத்தை = மாதர்களின் (கலவி) இன்பத்தை. இங்கிதம் என உற்ற மனம் = இனிமை தருவதாம் என்று நினைக்கும் என் மனம்உன்றனை நினைத்து அமைய = உன்னையே நினைத்து அங்கேயே நிலைத்து இருக்க அருள்வாயே = அருள்வாயாக

    மண்டலிகர் ரப் பகலும் வந்து சுபரட்சை புரி
    வந்து அணைய புத்தியினை அருள்வாயே


    மண்டலிகர் = நாட்டு அதிகாரிகள் ராப்பகலும் வந்த = இரவும் பகலும் வர சுபரட்சை புரி = அவர்கள் நன்மை அடைய வேண்டி வந்து அணைய= என்னை வந்து அணுகவல்ல புத்தியினை அருள்வாயே =புத்தியினை எனக்கு அருள்வாயாக.


    கொங்கில் உயிர் பெற்று வார் தென் கரையில் அப்பர் அருள்
    கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே


    கொங்கில் உயிர் பெற்று வளர் = கொங்கு நாட்டில் உயிர் (மீளப்) பெற்று வளர்ந்த தென் கரையில் = தென் கரை நாட்டுத் திருப்புக்கொளியூர் அவி நாசியில் உள்ள அப்பர் = அந்தப் பரமராகியசிவபெருமான் அருள் கொண்டு = திருவருளைப் பெற்று உடல் உற்ற பொருள் = உடலில் உயிர் பொருந்தி வந்த இரகசியத்தை. அருள்வாயே = அருள்வாயாக.


    குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு
    கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே.


    குஞ்சர முகற்கு = யானை முகக் கணபதிக்கு.
    இளைய = தம்பியே கந்தன் என வெற்றி பெறு = கந்த வேள் என்று வெற்றிப் புகழ் பெற்ற (பெருமாளே) கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே = கொங்கண கிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



    ஐங்கரனை ஒத்த மனம் – இருந்த இடத்திலியே தாய் தந்தையரை சுற்றி உலகை சுற்றி வந்தது போல் காட்டினார் விநாயக பெருமான். அது போல் மனமும் இருத்த இடத்திலிருந்தே உலகை சுற்றுவதினால் ஐங்கரனுக்கு ஒப்பாகா கூறப்பட்டது.







    விளக்கக் குறிப்புகள்
    1.செந்தமிழ் வழுத்தி உனை.....
    வேலுஞ் சேஞ்சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ---கந்தர் அலங்காரம்
    2. சந்திர வெளி....
    சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
    சந்திரன் தானும் தலைப்படு தன்மையைச்
    சந்தியிலே கண்டு தானாஞ் சகமுகத்
    துந்திச் சமாதியுடை யொளியோகியே ---திருமந்திரம்..


    3. மண்டலிக ரப்பகலும்.....
    ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும் ----
    எத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் இடராழி
    ---திருப்புகழ் (ஆனாதஞான.)
    நாட்டு அரசர்கள் அருணகிரியாரை எவ்வளவு மதித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.


    4. தென்கரையி லப்பரருள்......
    திருப்புக்கொளியூரில் சிறுவனை முதலையின் வாயினின்றும் சுந்தரர் பதிகம் பாடி உயிர்ப்பித்தது. அந்த இரகசியப் பொருளை எனக்கும் அருளுக என்று வேண்டுகிறார்.


    முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர்இங்குள்ள (அவிநாசி) சிவாலயத்தில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்த போது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் வருந்தினர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு வருகை தந்தார். வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் என்ன என வினவினார்.


    நிகழ்ந்ததை அவ்வூர் மக்கள் உரைத்தனர். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.


    அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.


    கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூரிலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ளது
    .
Working...
X