Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    139.பருத்தபற் சிரத்தினை


    பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
    பரித்தவப் பதத்தினைப் பரிவோடே
    படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
    பசிக்குடற் கடத்தினைப் பயமேவும்
    பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
    பிணித்தமுக் குறத்தொடைப் புலனாலும்
    பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
    குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே
    கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
    கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா
    கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
    கதித்தநற் றிருப்புயத் தணைவோனே
    செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைக்
    சிரித்தெரித் தநித்தப்பொற் குமரேசா
    சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
    சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.

    -139 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை
    பரித்த அ பதத்தினை பரிவோடே
    பருத்த = பருமை உடைய பல் = பல்லோடு கூடிய சிரத்தினை =தலையையும் குரு = நிறமும் திறல் = ஒளியும் கொண்ட
    கரத்தினை = கைகளையும் பரித்த = தாங்குகின்ற
    அப்பதத்தினை = அந்தக் கால்களையும் பரிவோடே = அன்புடன்.


    படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை
    பசி குடல் கடத்தினை பயம் மேவும்


    படைத்த = கொண்ட பொய்க் குடத்தினை = பொய்யான குடமாகிய உடலை பழி = பழிக்கும் பவ திடத்தினை =பாவத்துக்கும் இடமாகிய உடலை பயம் மேவும் = பயத்தோடு கூடிய.


    பெருத்த பித்த உரு தனை கிருத்திம துருத்தியை
    பிணித்த முக்கு(ற்)றத்தொடு ஐம்புலனாலும்


    பெருத்த = பெரிய பித்த உருத்தனை = பித்த உருவத்தை
    கிருத்திம = மாயையான துருத்தியை = ஊது கருவியை பிணித்த = பொருத்தப் பட்டுள்ள முக்குற்றத்தொடு =முக்குற்றங்களோடும் ஐம்புலனாலும் = ஐந்து புலன்களோடும்.


    பிணித்த இப்பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற
    குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே


    பிணித்த = கட்டப்பட்ட இப்பிணிப் பையை = இந்த நோய்ப் பையை பொறுத்த = தாங்குவதும் அமிழ்ப் பிறப்பு அற =ஆழ்த்துவதுமான பிறப்பை ஒழிக்கும் குறி = குறியைக் கொண்ட கருத்து எனக்கு = கருத்தை எனக்கு அளித்து = தந்து அருள்வாயே = அருள் புரிவாயாக.


    கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை
    கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா


    கருத்தில் உற்று = தமது எண்ணத்தில் வைத்து உரைத்த =உன்னைப் புகழ்ந்த பத்தரை = அடியார்களுள் தொறுத்து இருக்கரை = வஞ்சமுள்ளவர்களை கழித்த = ஒதுக்கித் தள்ளி (மற்றவர்களை) மெய்ப் பதத்தில் = மெய் அடியில்(தன் திருவடிகளில்) வைத்திடும் வீரா = சேர்த்துக் கொள்ளும் வீரனே.


    கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை
    கதித்த நல் திரு புயத்து அணைவோனே


    கதித்த = மிகுந்த நல் தினைப்புன = நல்ல தினைப் புனத்தில்
    கதித்த = இருந்த நல் குறத்தியை = நல்ல குறப் பெண்ணாகிய வள்ளியை கதித்த = எழுந்தோங்கும் நல் திரு புயத்து அணைவோனே = நல்ல அழகிய புயத்தில் அணைத்தவனே


    செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை
    சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா


    செரு = போரில் தெறுத்து = பாய்ந்து எதிர்த்த = எதிர்த்து வந்த முப்புரத்து அரக்கரை = மூன்று புரங்களில் இருந்த வலிய
    அரக்கர்களை சிரித்து எரித்த = சிரித்து எரித்துச் சாம்பலாக்கிய
    நித்தர் = அழிவிலாப் பெருமானாகிய சிவ பெருமானுடைய பொன் = அழகிய குமரேசா = குமரேசனே.


    சிறிப்பு உற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை
    சிறப்பு உடை திருத்தணி பெருமாளே.


    சிறப்பு உற = சிறப்பு அடையும்படி பிரித்து = தனி நின்று
    அறம் திறத்த = அற நெறி கூறும் தமிழ்க்கு = தமிழ் எல்லையில்
    உயர் திசை = வட திசையிலிருக்கும் சிறப்பு உடை = சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணிப் பெருமாளே = திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.



Working...
X