Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    114.அமைவுற்று


    அமைவுற் றடையப் பசியுற் றவருக்
    கமுதைப் பகிர்தற் கிசையாதே
    அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
    தருள்தப் பிமதத் தயராதே
    தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
    சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்
    சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
    தளர்வுற் றொழியக் கடவேனோ
    இமயத் துமயிற் கொருபக் கமளித்
    தவருக் கிசையப் புகல்வோனே
    இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
    கிரையிட் டிடுவிக் ரமவேலா
    சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
    தவமுற் றவருட் புகநாடும்
    சடுபத் மமுகக் குகபுக் ககனத்
    தணியிற் குமரப் பெருமாளே.

    - 114 திருத்தணி



    பதம் பிரித்து உரை
    அமை உற்று அடைய பசி உற்றவருக்கு
    அமுதை பகிர்தற்கு இசையாதே


    அடையப் பசி உற்றவருக்கு = முற்றும் பசியுடன் வந்தவருக்குஅமைவுற்று = மன அமைதியுடன் அமுதை= அன்னத்தைபகிர்தற்கு = ஒரு பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கு இசையாதே=மனம் வராமல்.


    அடையப் பொருள கை இளமைக்கு என வைத்து
    அருள் தப்பி மதத்து அயராதே


    அடையப் பொருள் = வைத்துள்ள எல்லா பொருளையும் கை =கைவசத்தே இளமைக்கு என = (தாம் வரவர இளமை அடைவது போல்)தமது இளமைப் பருவத்துக்கு எனச் சேகரித்து வைத்துஅருள் தப்பி = அருள் நெறியில் நின்றும் தடுமாறிப் போய்மதத்து அயராதே = ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல்.


    தமர் சுற்றி அழ பறை கொட்டி இட
    சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்


    தமர்= சுற்றத்தார் சுற்றி அழ= சுற்றி அழ பறை கொட்டியிட =பறைகள் கொட்டி முழங்க சமன் = நமன் நெட்டு = நெடுந்தூரம்உயிரைக் கொடு போகும் = உயிரைக்கொண்டு போகின்ற


    சரிரத்தினை நிற்கும் என கருதி
    தளர் உற்று ஒழிய கடவேனோ


    சரிரத்தினை = உடலை நிற்கும் எனக் கருதி = நிலைத்து நிற்கும் என்று நினைத்து தளர்வுற்று ஒழிய= தளர்ந்து ஒழிவதாகடவேனோ = என் தலை விதி?


    இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து
    அவருக்கு இசைய புகல்வோனே


    இமயத்து மயிற்கு = பரவத ராஜனிடம் வளர்ந்த மயில் போன்ற பார்வதிக்கு ஒரு பக்கம் அளித்தவருக்கு = தனது இடது பாகத்தைத் தந்தவராகிய சிவ பெருமானுக்கு இசையப் புகல்வோனே = அவர் மனம் உவக்க உபதேசித்தவனே (அல்லது ஞானசம்பந்தராகப் பதிகங்கள் சொன்னவனே).


    இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு
    இரை விட்டிடும் விக்ரம வேலா


    இரணித்தனில் = போரில் வந்து எற்றுவரை = எதிர்ப்பவரைகழுகுக்கு இரை விட்டிடும் = கழுகுக்கு உணவாக்குகின்ற விக்ரம வேலா = வீரம் கொண்ட வேலாயுதத்தை உடையவனே.


    சமய சிலுகில் இட்டவரை தவறி
    தவம் உற்ற அவருள் புக நாடும்


    சமயச் சிலுகு இட்டவரை= மதப் போராட்டம் செய்பவர் களின்றும் தவறி= விலகி தவம் உற்று= என் தவம் நிறைவுற்றுஅருள் புக நாடும் = உனது திருவருளை அடைய நான் விரும்புகின்ற.


    சடு பத்ம முக குக புக்கு கனம்
    தணியில் குமரப் பெருமாளே
    சடு = ஆறு பத்மம் = தாமரை ஒத்த முக குக = திருமுகங் களை உடைய குகனே புக்கு = (சூரனொடு போர் முடிந்து வள்ளியை மணந்த பின்) சென்று அமர்ந்துள்ள கனத் தணியில் = பெருமை வாய்ந்த தணிகையில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே =குமரப் பெருமாளே.




    ஒப்புக
    சம நெட்டு உயிரைக் கொடு போகும் சரிரத்தினை நிற்கும்........
    குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னூர்க்குச் செல்லும்
    வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
    - கந்தர் அலங்காரம்
Working...
X