Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    100.கதிரவனெழுந்து


    கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
    கடலளவு கண்டு மாய மருளாலே
    கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
    கவினறந டந்து தேயும் வகையேபோய்
    இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
    மிடமிடமி தென்று சோர்வு படையாதே
    இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாச
    லிரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ
    மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
    மலர்வளநி றைந்த பாளை மலரூடே
    வகைவகையெ ழுந்த சாம வதிமறை வியந்து பாட
    மதிநிழலி டுஞ்சு வாமி மலைவாழ்வே
    அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
    அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே
    அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்டபாவை
    அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.

    - 100 திருவேரகம்





    பதம் பிரித்து உரை


    கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது
    கடல் அளவு கண்டு மாய அருளாலே


    கதிரவன் எழுந்து உலாவு = சூரியன் உதித்துச் செல்லும் திசை அளவு கண்டு = எல்லை அளவைச் சென்று கண்டும் மோது கடல் அளவு கண்டு = மோதும் திரைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும் மாய அருளாலே = உலக மாயை என்னும் மயக்கத்தால்.


    கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள்
    கவின் அற நடந்து தேயும் வகையே போய்


    கண பண புயங்க ராஜன் = கூட்டமான படங்களை உடைய பாம்பாகிய ஆதி சேடனின் முடி அளவு கண்டு = எல்லை அளவைப் போய்க் கண்டும் தாள்கள் கவின் அற நடந்து =கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து. தேயும் வகையே போய் = தேயுமாறு அங்கங்கே போய்.


    இதம் இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும்
    இடம் இடம் இது என்று சோர்வு படையாதே


    இதம் இதம் இது என்று = இது நல்ல இடம் என்று எண்ணி மருகி அருகிருந்து = (உலோபிகளுடைய) சமீபத்தில் அணுகி கூடும் இடம் இடம் இது என்று = சேர்ந்து, இது தான் சரியான இடம் என்று எண்ணி சோர்வு படையாதே = தளர்ச்சி கொள்ளாமல்.


    இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசலில்
    இரவு பகல் சென்று வாடி உழல்வேனோ


    இசையொடு புகழ்ந்த போது = இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது நழுவிய = அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் ப்ரசண்டர் வாசலில் = பெரிய பேர்வழிகள் வீட்டு வாசலில் இரவு பகல் வாடி = இரவும் பகலும் சென்று நான் வாடி. உழல்வேனோ = திரியலாமோ.


    மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக
    மலர் வள நிறைந்த பாளை மலரூடே


    மதுகரம் = வண்டுகள் மிடைந்து = நிறைந்து வேரி தரு = வாசனை வீசும் நறவம் உண்டு = தேனை உண்டு. பூக மலர் வள நிறைந்த =பலா மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலரூடே = பாக்கு மலர்களின் இடையே.


    வகை வகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட
    மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே


    வகை வகை எழுந்த = இனம் இனமாக எழுந்து. சாம அதி மறை =சாம வேதத்தை வியந்து பாட = வியக்கத்தக்க முறையில் பாடமதி நிழல் இடும் = சந்திரனின் குளிர்ச்சியைத் தரும் சுவாமி மலை வாழ்வே = திருவேரகத்தில் வாழ்பவனே.


    அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப
    அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே


    அதிர வரு = உலகம் எல்லாம் அதிர்ச்சி கொள்ள வருகின்றசண்ட வாயு = பெருங்காற்று என = என்று சொல்லும் படியாகவரு கரும் கலாப = வருகின்ற நீல நிறங்கொண்ட தோகையை உடைய அணி மயில் = அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையோனே = விரும்பி ஏறும் இளையவனே.


    அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை
    அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.


    அடைவொடு = முறையாக. உலகங்கள் யாவும் = எல்லா உலகங்களும் உதவி = படைத்து நிலை கண்ட = அவற்றை நிலைத்திருக்கச் செய்த பாவை = (பார்வதி) தேவி. அருள் புதல்வ = அருளிய மகனே அண்ட ராஜர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.



    சுருக்க உரை


    சூரியன் உதித்துச் செல்லும் அளவு வரையிலும், கடலின் எல்லை அளவு
    வரையிலும், ஆதிசேடனின் முடி வரையும் கால் தேயுமாறு எங்கெங்கும்நடந்து, இது தான் நல்ல இடம் என்று எண்ணி,உலோபிகளைச் சமீபத்தில் அணுகி, இசையாலும், உரையாலும் அவர்களைப்பாடிப் புகழ்ந்து நின்ற போது, (தானம் செய்யத் தயங்கி) நழுவி விடுபவர்களின் வீட்டு வாசலில் நின்று சோர்ந்து நான் திரியலாகுமா?


    வண்டுகள் நிறைந்த கமுக மரத்தில் உள்ள பாளை மலர்களின்இடையே சாம வேதத்தை வியக்கத் தக்க முறையில் ஒலி செய்ய, குளிச்சி பொருந்திய திருவேரகத்தில் வாழும் பெருமாளே,அதிரும்படி வரும் அழகிய மயிலின் மேல் ஏறிவரும் இளையோனே,உமா தேவிக்குப் புதல்வனே, நான் உலோபிகளை அணுகி வாடி வருந்தாமல் இருக்க அருள் புரிவாய்.



    ஒப்புக:


    அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை.....
    அகிலதம் பெறு பூவை சக்தி யம்பை – திருப்புகழ், தமரகுரங்களும்
    உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
    உகு முடிவில் வைக்கும் உமையாள் - திருவகுப்பு
Working...
X