Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    34.தொந்தி சரிய


    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முகுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி
    தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி
    வந்த பிணியு மதிலை மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடமை கடனே தெனமுடுகு துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்தகுமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் பெருமாளே.

    - திருச்செந்தூர்

    பதம் பிரித்து பதவுரை


    தொந்தி சரிய மயிரே வெளிர நிரை
    தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
    தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி


    தொந்தி சரிய = வயிறு சரியவும் மயிரே வெளிற = மயிர்வெளுத்துப் போகவும் நிரை = வரிசையாக இருந்த தந்தம் அசைய = பற்கள் அசையவும் முதுகே வளைய = முதுகு வளையவும் இதழ் தொங்க = உதடு தொங்கிப் போகவும் ஒரு கை தடி மேல் வர = ஒரு கை தடியின் மீது வரவும். மகளிர் நகையாடி = பெண்கள் பரிகாசச் சிரிப்புச் சிரித்து.


    தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல்
    கிண் கிண் என முன் உரையே குழற விழி
    துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி


    தொண்டு கிழவன் இவன் ஆர் என = பெருங்கிழவன் இவன் யார் என்று பேசவும் இருமல் கிண் கிண் என = இருமல் கிண் கிண் என்று முன் = முன்னே (ஓலிக்க) உரையே குழற = (பின்னே) சொற்கள் குழறவும் விழி துஞ்சு = கண்கள் (ஒளி) சோர்வுபட்டு குருடு படவே =குருட்டு நிலை அடையவும் செவிடு படு செவியாகி = காதுகள் செவிட்டுத்தன்மையை அடையவும்.


    வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு
    பண்டிதனுமே உறு வேதனையும் இள
    மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி


    வந்த பிணியும் = வந்த நோய்களும் அதிலே மிடையும் = அது சம்பந்தமாக அடிக்கடி வந்து போகும் பண்டிதனுமே = வைத்தியனும் உறுவேதனையும் = உடல் படுகின்ற வேதனையும் (ஒரு பக்கம் இருக்க) இள மைந்தரும் = சிறு பிள்ளைகள் உடைமை கடன் ஏது என = (மற்றொரு பக்கத்தில்) சொத்து எவ்வளவு, கடன் எவ்வளவு என்று முடுகி= விடாது கேட்க
    துயர் மேவி = துயரம் கொண்டு.


    மங்கை அழுது விழவே யம படர்கள்
    நின்று சருவ மலமே ஒழுக உயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்


    மங்கை அழுது விழவே = என் பத்தினி ஓவென்று கதறி அழவும் யம படர்கள் = யமதூதுவர்கள் நின்று சருவ = என் உயிரைப் பற்றுமாறு வந்து நெருங்கி நிற்க (அதனால்) மலம் ஒழுக= மலம் தண்ணீர் போல் ஒழுகி உயிர் மங்கு பொழுது =என் உயிர் பிரியும் போது (அந்த சமயத்தில்) கடிதே =விரைந்து மயிலின் மிசை = மயில்வாகனத்தில் விரைந்து வர வேணும் = வந்து அருள் புரிய வேண்டும்


    எந்தை வருக ரகு நாயக வருக
    மைந்த வருக மகனே இனி வருக
    என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம


    எந்தை வருக = என் அப்பாவே வருக ரகு நாயக வருக = ரகுநாயகனேவருக மைந்த வருக = மைந்தனே வருக மகனே இனி வருக = மகனே, வா என் கண் வருக = என் கண்ணே வருக
    எனது ஆருயிர் வருக = என் ஆருயிரே வருக அபிராம =அழகனே.


    இங்கு வருக அரசே வருக முலை
    உண்க வருக மலர் சூடிட வருக
    என்று பரிவினோடு கோசலை புகல வரு(ம்) மாயன்


    இங்கு வருக = இங்கே வா அரசே வருக = அரசே, வா முலை உண்க வருக = பால் குடிக்க வா மலர் சூடிட வருக = பூ முடித்துக் கொள்ள வா என்று பரிவினொடு = என்றெல்லாம் அன்புடன்
    கோசலை புகல = கோசலை கூறியவுடன் வரும் மாயன் =இராமனாக வந்த மாயாசொரூபி திருமால்.


    சிந்தை மகிழும் மருகா குறவர் இள
    வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
    சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர


    சிந்தை மகிழும் மருகா = மனம் மகிழும் மருகனே குறவர் இள வஞ்சி = குறவர்களுடைய இளங் கொடியாகிய வள்ளி மருவும் அழகா = அணையும் அழகனே அமரர் சிறை சிந்த = தேவர்கள் சிறையினின்றும் வெளியேற அசுரர் கிளை வேரொடு மடிய =அசுரர்கள் வேரொடு மடிய அடு தீரா = போரிட்டு அழித்த வீரனே.


    திங்கள் அரவு நதி சூடிய பரமர்
    தந்த குமர அலையே கரை பொருத
    செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே.




    திங்கள் அரவு நதி சூடிய = நிலவையும், பாம்பையும்,கங்கையையும் சடையில் தரித்த. பரமர் = மேலானவராகிய
    (சிவபெருமான்) தந்த = அருளிய குமர = குமாரனே அலையே கரை பொருத = (கடல்) அலைகள் கரையில் மோதுகின்ற செந்தில் நகரில் = திருச்செந்தூரில் இனிதே = இன்புற்றுமருவி
    வளர் பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.







    குகஸ்ரீ ரசபதி விளக்கவுரை


    ஒரு பகல் உலகெலாம் உதிரத்துள் பொதிந்து
    அருமறைக்கு உணர்வறும் அவனை அஞ்சன
    கருமுகில் கொழுந்து எழில் காட்டும் ஜோதியை
    திருவுற பயந்தனள் திறங்கொள் கோசலை -
    என்று ராமன் அவதாரத்தை தமக்கே உரிய கம்பீரத்தோடு பாடுகிறார் கம்பர். வாயினுள் உலகனைத்தும் வைத்தவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான். அவ்வளவு பெரியவனை உயர்ந்த வேதங்கள் இதுவரை உணர்ந்து கொண்டது இல்லையாம். வையம் ஏழையும் வயிற்றினுள் வைத்த பாக்கியவதி கோசலை. அதுதானா, உணர்தற்கு அரியானை கண்களால் எவரும் காணுமாறு தெய்வத் திருவுருவாய் பெற்றுத் தந்த திறமையிலும் உயர்ந்தவள் அத் தேவி. தென் கோசலை மன்னன் மகளானாள். வட கோசலை மன்னன் தசரதனுக்கு முதல் மனைவி ஆயினாள். பேறு தரும் மாயவனைப் பிள்ளை எனப் பெற்றாள். பாலனை பத்து பெயரிட்டு அழைக்கின்ற அருமையே அருமையினும் அருமை.


    எந்தை வருக என்கிற பகுதியை உணர்ந்து ஓதுகிறபோது நாமே தான் அக்கோசலை என்ற மா பெரும் நினைவு நம் நெஞ்சில் நிழலாடுகிறது அல்லவா ?. அகடித கடனா சமர்த்தியன் மாயன். அவன் மருகன் முருகன்.


    அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பு ஓர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்த உதித்தனன் உலகம் உய்ய -


    என்னும் செய்தியை உணரும் போது திருமால் உள்ளம் உருகும். மண்ணில் உலாவும் விண்ணில் உலாவும், வண்ண அயன் பரம் நண்ணி உலாவும், கண்ணன் இருந்த தலத்தில் உலாவும், கண்ணுதல் நண்ணிய கண்ணுள் உலாவும் எண்ணில் வளம் பெறு மண், புனல், தீ, கால், இன்புறு விண் தனில் அண்டம் உலாவும் பண்ணிய வீனை இசைத்து இனிது ஆடும் பாடும் அருள் தரும் பாலன் அம்மா. இப்படி ஏக காலத்தில் எங்கும் முருகன் பவனியைக் கண்டு மாயோன் திருவுளம் மகிழ்ச்சி அடையும்.


    பிரணவ விரிவுரை, உலகு அழிக்க எழுந்த ஆட்டுக் கிடாவை அடக்கி ஆண்ட திறம், ஆகியவற்றைக் கண்டும் கேட்டும் அகம் மகிழ்ந்தார் ஆதி மாயவர். அதன் பயனாக அன்பு மகளிரை மணத்தில் அளித்தார். அன்றும் இன்றும் என்றும் முருகன் வளர்ச்சி கண்டு மகிழ்கிறது அந்தப் பரமனார் மனம்.


    ரம்மிக்கச் செய்யும் மகன் அழுகு கண்டு மகிழ்ந்தாள் கோசலை. முருகன் அழகு கண்டு என்றும் மகிழ்கிறார் அந்த மால். மாயன் சிந்தை மகிழும் மருகா ஆ சொல்லும் நாவிலும் சுவை பிறக்கின்றதே.


    உவகைக்குரிய இப்பகுதியை ஓதும் போது வெண் மதி பொழியும் தண் நிலா தவழ நறுமணம் கமழும் இளம் காற்று சிறுமணல் தூற்றி சில்லென உலவ பிரணவத்தின் வடிவென சுருண்டு எழும் அலைகள் பாய ஓங்காரத்தை ஒலிக்கும் அப்பாற்கடலின் கரையோரம் தனி அமர்ந்து மேலைத்துணியே பாயலாக விரித்துப் படுத்திருக்க நம்மையே நாம் கண்டு கொள்ள நேருகிறதே.
    ஓ - ம் - ம் – ம் கொல் , வெட்டு, குத்து என்பதன்றி வேறறியார் வேடுவர்கள். ஆனாலும் முருகன் நின்றதுமே குறவர்கட்கு மோகலஹரி உண்டாகும். அவன் மேல் அவர்கட்கு அவ்வளவு அன்பு. வாழும் அக்குலத்தில் வளர்ந்த வள்ளி அம்மை உள்ளத்தாலும் உருவத்தாலும் இளம் கொடியாகவே இருந்தார். அகமும் புறமும் அழகுடைய அக்கொடியை அழகன் வந்து தழுவினான். சூதுவாது இல்லாத இடத்தில் சுப்ரமண்யம் இருக்கும் என்பது இதிலிருக்கும் உள்ளுரை.


    மோதல் ஒன்று. அவ்வொன்றில் விண்ணவருக்கு விலங்கு உடைந்தது. விடுதலை கிடைத்தது. கொப்பும் இலையுமான அசுரர் தரு வேரோடு வீழ்ந்தது. இது செய்தானை அடுதீரா என்ற அருமையே அருமை. இந்தத் தீரம் சூரபத்மன் ஆட்சி காலத்தில் எவரிடத்தும் இருந்ததில்லை.


    கங்கை உயிரின் பாவத்தைக் கழுவும் உயிர் காப்பானது குண்டலினி, ஆன்மாகட்கு மதி அழுது உதவும். அந்த மதியும் , நதியும், பாம்பும் சூடியவர் மகதேவர். பயனான இச்செயல் அறிந்து அவரே பரமர் என்பதை அகில உலகும் அறிகிறது. அவர் தந்த குமரா என்பது அருமையிலும் அருமை.


    குமர நாமம் - பதினாறு வயதினன், பதினாறு பேறும் தருபவன், மணமகளாக்கி ஆன்மாவை மணப்பவன் என்ற குறிப்பாக பல பொருட்களைக் கொண்டது. மயில் வாகனனை எதிர் நாளில் மணப்பேன், அதுவரை ஏற்று போற்றி இரு என்றார் அமுதவல்லியார். ஒருநாளும் எனக்கு ஓய்வில்லை. ஐராவதமே, வாழ்விக்கும் இப்பாவையை நீ வளர்த்து வா என்று இந்திரன் அச்செல்வியைஐராவதம் காப்பில் அளித்தான். அதன் பின் அமுதவல்லியை பொன்னுலகில் ஐராவதம் போற்றி இருந்தது. தேவயானை வளர்த்த தேவி- தேவயானை எனும் பெயர் எய்தினாள்.. காலம் வந்தது அத்தேவி கந்தனை மணந்தாள்.


    அன்று அம்மகளை வளர்க்கும் பேறு இழந்தேன் என்ற ஒரு குறை இந்திரனிடம் பல நாள் இருந்தது. அக்குறை தீர இந்திரன் வனசரர் தலைவனாய் வந்தான். வேல் நம்பி எனும் பெயரை ஏற்றான். வள்ளி அம்மையின் வளர்ப்பு தந்தை எனும் ஒரு பெயரும் வாய்த்தது. வள்ளி எனும் பெயர் வாய்த்த வஞ்சியை அழகன் மருவினான். திருமாலின் சொரூபமான செந்தில் நகரையும் மருவினான். ( மருவுதல் = கனிந்த அருள் மணம் தோன்ற கலத்தல். ) வஞ்சி மருவும் அழகா - - - செந்தி நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே என்ற பகுதியை ஓதும் போதே உள்ளம் உருகுகிறதே.
    மாயன் மகவாக வரலாம். முருகன் சேயாக வரலாம், வள்ளி இளம் வஞ்சியாக வரலாம். இந்த வரலாற்றில் இன்ப வளர்ச்சி உள்ளது.
    என் சரித்திரம் பரிதாபமாக உள்ளது. சொல்கிறேன்.
    வயது ஏற ஏற எடுப்பான வயிறு கீழ் நோக்கி இறங்கும். வெள்ளிக் கம்பிகள் போல் மயிர் வெளுக்கும் முத்துப் போன்ற பற்கள் சுரை வித்துப் போல் ஆகி ஆட்டம் போட ஆரம்பிக்கும். பல் போனால் சொல் போகும் என்பது பழமொழி. மந்திர சித்தியும் அதனால் மங்கும். முதுகுத் தண்ட வில்லைப்போல் வளையும். தூக்காய் இருந்த கீழ் உதடு தொங்கும். கைகளும் கால்களுமாக தவழ்ந்தது ஆரம்பம். இரண்டாவது நடந்தது இடைக்காலம். தடியோடு முன்னாள் தள்ளாடல் முடிவு கால வரலாறு. பத்தில் பதட்டம், இருபதில் குடக்கு,முப்பதில் முடக்கு, நாற்பதில் நசை, ஐம்பதில் அறிவு, அறுபதில் சொரி, எழுபதில் ஈழை, எண்பதில் எண்ணல், தொன்னூறில் தூங்கல், நூறில் வாங்கல் என்பது கலைஞர் கண்ட பழம் கணிதம்.
    நரைத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம். அதுபோல் பத்தும் இருபதும் ஆன பாவையர் தடி பிடித்துத் தள்ளாடும் தாத்தாவைப் பார்த்து கை கொட்டி ஏளனம் பாடுவர். ஒரு மல் ஆனால் சமாளிக்கலாம். இருமல் வந்தால் என் செய்வது ? சொல் குளற கண்கள் இருண்டு அருமைச் செவிகள் கும் என்று அடைக்கும். பாயும் நோயும் ஆன போது வைத்தியர் வருவார். வேதனை பெரிதாகி விளையும்.
    எவ்வளவு சொத்து இருக்கிறது ? எவ்வளவு பேருக்கு கொடுத்திருக்கிறீர் ? . இப்படி நாற்புறமும் மக்களின் நச்சரிப்பு. எதிர்கால வாழ்வில் பிள்ளைகளுக்கு நோக்கு. மஞ்சள் கயிற்றில் மனைவிக்கு மதிப்பு. இளமையை எண்ணி கதறுபவள் அந்தக் காரிகை.
    ஐயோ, அதே நேரத்தில் எம தூதர்களின் தரிசனம். குறிப்பாக நினைத்தாலும் குடல் குழம்புகிறதே.


    அபிராமா, அடுதீரா, பெருமாளே, அவ்வமயம் மரணம் தவிர்க்கும் சரணம் அளிக்க மயில் மேல் வா. அதை என் பஜனையில் இப்போதே விண்ணப்பித்து வைக்கிறேன் என்ற படி



    விளக்கக் குறிப்புகள்




    அ. மைந்த வருக... மைந்தன் = பல குடும்பங்களைக் காப்பாற்றும் பிள்ளை. மகன் = தான் பிறந்த குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் பிள்ளை. குமரன் = தந்தைக்கு ஞானம் உரைப்பவன். புத்திரன் = தந்தைக்கு நற்கதி தருகின்றவன். புதல்வன் = தந்தைக்கு நன்மை செய்பவன். பிள்ளை = வயது முதிர்த்த தந்தை வேலை செய்ய வீண் பொழுது போக்குபவன்.


    ஆ. வந்த பிணியும் அதிலே மிடையும்...
    (சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழவு
    சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
    சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ)...திருப்புகழ் (வாலவயதாகி).


    பத்து தடவை வருக வருக என்பது திருமால் பத்து அவதாரத்திலும் வந்ததைகுறிப்பிடுகிறாரோ என வியக்கத் தோணுகிறது
Working...
X