Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    31. தந்த பசிதனை


    தந்த பசிதனைய றிந்து முலையமுது
    தந்து முதுகுதட வியதாயார்
    தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
    தங்கை மருகருயி ரெனவேசார்
    மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு
    மந்த வரிசைமொழி பகர்கேடா
    வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
    யங்க வொருமகிட மிசையேறி
    அந்த கனுமெனை யடர்ந்து வருகையினி
    லஞ்ச லெனவலிய மயில்மேல்நீ
    அந்த மறலியொடு கந்த மணிதனம
    தன்ப னெனமொழிய வருவாயே
    சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
    சிந்து பயமயிலு மயில்வீரா
    திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
    செந்தி னகரிலுறை பெருமாளே.



    - திருச்செந்தூர்









    சுருக்க உரை


    பசியை அறிந்து முலைப் பால் தந்த தாயார், தம்பி, பணிவிடை செய்த வேலை ஆட்கள், அன்புத் தங்கை, வழிதோன்ரியவர்கள், சுற்றத்தினர், மைந்தர், மனைவியர் யாவரும் தத்தம் உறவு முறைகளைக் கூறிக் கொண்டு, தரையில் விழுந்து, மயங்க, எருமைக் காடவின் மேல் யமன் வரும் போது, இவன் எனது அன்பன் என எடுத்துக் கூற மயிலின் மீது வர வேண்டும்.


    இமவான் மடந்தையாகிய உமாதேவி தந்த முலைப் பாலைப் பருகியவா, சந்திரன் பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சடையில் தரித்த சிவபெருமான்
    அருளிய பெருமாளே, செந்திலில் வீற்றிருக்கும் பெருமாளே, யமன் வரும் போது என்னைக் காத்தருள்க.




    விரிவுரை குகஸ்ரீ ரசபதி


    சத்திலிருந்து விமல ஆறு பொறிகள் வெளிபட்டன, சரவண நிலையத்தைச்சார்ந்தன. வித்தக சேய்களாய் விளையாடி இருந்தன. விரைந்த விமலை ஏக காலத்தில் ஆறு சேய்களையும் எடுத்தாள்.அவ்வளவில் மூவிரு முகமும் ஆறிரு கைகளும் செம்மை பொருந்ததொருமேனியுமாக சிறந்து நின்றான் சிவ குமரன்.மலைமகள் திருவுளம் அது கண்டு மகிழ்ந்தது. அருமை சித்தான அமலைக்கு,அபரம் ஒரு குயம், பரம் ஒரு குயம், அந்த இரு குய ஞானம், புனித பாலாய் பொங்கியது . பரம அந்த அமுதத்தைப் பருகி ஆனந்தமே குகப் பிரம்மம் என ஆயினன் ஆறுமுகன் ஞானத்தைப் பருகினன், ஞானவேல் ஏந்தினன்.அவைகளால் உலக அரிசாதி பகைகள் அழிந்தன. அருள் நூட்கள் விரிவாக இவைகளை அறிவிக்கின்றன. உவகை கொண்டு அவைகளை ஓதினேன். என் உள்ளம் பாகாய் உருகின்றதே. சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் அயில் வீரா என்று ஆர்வத்தால் கூவி உம்மை
    அழைக்கல் ஆயினேன்.


    பாம்பும் மதியும் பகை உடையவை. என்றும் சிவனார் திருமுடியில் சேர்ந்த பின் அந்த இரண்டும் நட்பு பூண்டு நயம் அடைகின்றன. கலகலப்பும் வேகமும் உடையது கங்கை நதி. அதுவும் அவர் இடத்தில் சலனம் அடங்கி சாந்தம் பெற்றது. ஆண்டவன் சன்னதியில் தான் அமைதி என்பதற்கு அவைகளை விட வேறு உதாரணம் வேண்டுமா?


    பாம்பு - குண்டலிணி, திங்கள் - அமுத மண்டலம், கங்கை - பாவம் கழுவும் பரம தீர்த்தம். இம் மூன்றும் சார்ந்த யோகசங்கரர் சடிலர் எனப்பெறுகிறார். திங்கள் அரவு நதி துன்று சடிலர் என்று போற்றி அவரை உலகம் புகழுகிறது. அத்தகைய உயர் சிவம் அருளிய உம்மிலும் பெரியவர்கள் யார் ஐயா, அதனால் தான் பெருமாளே என்று உம்மை உவந்து விளித்து உவகை அடைகிறேன்.


    செந்து = ஆன்மா, இல் = முத்தி நிலம், பிழையையே பெருக்கி பிறவித் துன்புறும் உயிர்கட்கு திருவருள் காட்டும் படை வீடு திருச்செந்தில். ஆன்மாகட்கு காப்பளிக்க, என்றும் அத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்றீர்.சொரூபத்தில் பெரியவற்றிலும் பெரிய பொருள். தடத்தத்தில் பெரியருள் பெரியோன் என உள உம்மை, செந்தில் நகரில் உறை பெருமாளே என்று கூவி எம் உணர்வு கூப்பிடுகின்றதே, பிரபு, கேண்மை எம் விண்ணப்பத்தைக் கேட்டருள்,


    உடம்பினுள் புகுந்தது உயிர்,அப்பொழுதே அடர்ந்து தொடர்ந்தது பசி. பிறந்ததும் அழுகிறது பிள்ளை. கடும் பசிதான் அதற்குக் காரணம். பிறந்ததும் அழாத பிள்ளை பெரும்பாலும் பிழைப்பது இல்லை. பசியின் சோதனை வேதனையாக விளைகிறது. பசிப்பு முன் புசிப்பது பழுது. பசித்த பின் புசித்தால் அது வாடிய பயிர்க்கு நீர் வார்த்தது போல் ஆகும்.
    பாதிக்கும் பசி சேயின் வயிற்றில் பரவும் பொழுது, தாயின் குயங்களில் பால் சுரக்கும். இயற்கையின் அதிசயத்தை என் என்பது ?. அக்குறிப்பை அறிந்து செய்யும் வேலையை கைவிட்டு ஓடி வந்து பால் கொடுப்பவள் உத்தமத் தாய். மகவு அழுத பின் பால் தருவள் மத்திமத் தாய். அழுதாலும,f தான் வேலைகள் யாவும் முடிந்த பின்னரே பால் தருபவள்
    அதமத்தாய். - தாயாய் முலையைத் தருவோனே,. பால் நினைந்தூட்டும் தாய் - என வரும் திருவாசகம் நினைவில் இங்கே நிழலிடுகின்றனவே. பருகுகிறது சேய். தாய்க்கு பெருகுகிறது இன்பம். அந்த இன்பம் மிக மிக அடங்காத ஆர்வத்தால் குழந்தையின் முதுகை வருடிக் கொண்டு அணைக்கிறாள் அன்னை. அடடா, அவர்கட்கு தான் எத்தனை அன்பு பெருகுகிறது. ஊட்டிய பாலும் ஆஹா, ஆக்கையை வளர்க்கும் அமுதம் அல்லவா.


    தனக்குப் பின் பிறந்தானை தம்பி என்பது உலக வழக்கு. தம் பின் என்பது இலக்கண வழக்கு. தம்பி உள்ளான் படை அஞ்சான் என்பது தமையன் கண்ட தனி அனுபவம். வினயம் இடை இடை வெளிப்பட வீட்டில் வேலை செய்யும் ஆட்கள், பணிவு இடை செய் தொண்டர் எனப் பெறுவர். சிறுத்தொண்டர் ,திருமாலிகை பணிமகள், சந்தனத்தாதி போல்பவர் அன்று இருந்தனர். இன்றும் அத்தகையர் அருகி இருக்கின்றனர். அடை நெகிழ்கிறது, கைகள் இரண்டும் மானம் காக்க முந்துகின்றன, அங்ஙனம் தம் கை போல் பெரிதும் உதவ பின்பிறந்தாளை தங்கை என்று அழைப்பதில் எத்துனை இன்பம் இருக்கிறது. தங்கை பிள்ளை, தமக்கை மகன், மகளை மணந்தவன் ஆகியோர் மருகர் எனப் பெறுவர்.


    மணம் பெற வந்தவர் ஆதலின் அவர்களை மருமகர் என அழைப்பதும் உண்டு. அவர்களையும் பிரியமுள மருகர் என பேசுவர். ஏரில் கூட்டிய எருமை மாமனும் மருகனும் போன்ற அன்பினர் என்பது சீவக சிந்தாமணி. எனவே பிரியமுள எனும் அடை தங்கைக்கும் மருகருக்கும் தனி உரிமை பெறுகிறது.


    மைந்து - வலிமை, அதனை உடையவர் மைந்தர். தந்தையின் ஆக்க சக்தியேதா அழிவு சக்தியோ தனையர் உருவம் பெறும் என்பது இதனில் இருந்து தெரிகிறது அல்லவா. தன்னையே வேறு உருவில் தந்த தந்தைக்கு உயிர் எனவே சார் என மைந்தர் உளர்.


    மனைவி - மனையில் வாழும் உரிமை உடையவள் என்பது பொதுப் பொருள். மனஸ் தத்துவத்தில் நிரந்தரமாக இடம் பெறுபவள் என்பது சிறப்புப் பொருள். பிராண நாயகி அப்பெண்ணின் நல்லாளையும் உயிர். எனவே சார் மனைவி என்று உணர்கிறோம். பெண்தான் பெரு விலங்கு, பிள்ளை ஒரு சுல்லாணி என்று பாடும் துறவிகளும் தாயையும் சேயையும் இணைந்தே பாடுவது இயற்கையாய் உளது. காட்டில் பொதிந்து இருப்பது புதர். அது போல் நாட்டில் உறவினர் அடர்ந்து உளர். உரம் பெற ஒட்டி உறவாடும் அவர்களை கடும்பு எனும் பெயரால் காண்கிறோம்.


    தாய், தம்பி, பணி ஆட்கள், தங்கை, மருகர், மைந்தர், மனைவியர் முதலிய உறவினர்கள் நடுவில் பல் இளித்து, மா பெரும் காலத்தத்துவச் சேட்டையை மறந்தே இருக்கிறோம், திடீரென்று ஒருநாள் கண்கள் இருண்டன. செவிகள் குப்பென்று அடை பட்டன, நா வரண்டது சொற்கள் குளறின,அறிவு அகன்றது, உணர்ச்சி ஒடுங்கியது, உடல் நினைப்பு உருண்டது. ஐயோ மகனே, நெஞ்சில் கிடத்தி வளர்த்தேனே,
    கண்ணில் நித்திரை நீக்கி நான் காத்தேனே, விஞ்சு தவத்தினில் பெற்றேனே, என்னை விட்டு போகலாமோ என்று வயிறு பிசைந்து அன்னை வாடுகின்றாள்.அண்ணா அண்ணா என்று தம்பி அலறுகிறான். முதாலாளி ஐயோ முதலாளி என்று பணி ஆட்கள் மோதிக் கொள்கின்றனர். உடன் பிறந்த அண்ணா நான் இருக்க நீ போதல் முறை தானோ. அண்ணா அண்ணா என்று தங்கை வாய் அறைந்து தங்கை அழுகின்றாளே. மாமா ஐயோ மாமா என்று மருகர்கள் அண்டம் அதிரஅழுகின்றார்கள். எனை தந்த அப்பா என முகத்தோடு முகம் வைத்து முத்தாடும் உன் முகம் மறக்கமுடியாதே என்று தலையில் அடுத்துக்கொண்டு தனையர் கதறல் தாங்க முடியவில்லையே. இது என்ன
    கொள்ளை. ஐயோ இது என்ன மோசம். என்னைப் பாருங்கள். கண்ணைத் திறவுங்கள்.ஆ என்னைக் கைவிட்டு விட்டீர்களா. மஞ்சள் கருப்பாச்சுதே. எனக்கு மருக்கொழுந்தும் வேப்பாச்சுதே என புலம்புகிறாள் மனைவி. சிற்றப்பா, பெரியப்பா, அத்தான், தாத்தா என்று நெருங்கின உறவினர் உறவு முறையைச் சொல்லி வரிசைப் பட உரைத்து நிலை குலைந்து நெருங்கி, தலைமயிர் நிலம் புரள உருண்டு புரளுகிறார்கள். அடியேன் அறிவு மயங்கிய அந் நிலையில் குமுறும் இக் குரல்கள் விரு விரு வென்று செவியில் விழுகின்றன. வேதனை தாங்க முடியவில்லை. வாய் அசைக்க வழி இல்லை. கண் திறக்க கை அசைக்க இயலவில்லை.


    இந்நிலையில் நுண்ணுடலில் உயிர் நுழைகிறது. அதே நேரத்தில் அதோ பயங்கர எருமைக்கடா ஒன்று மேல் ஏறுவது போல் எதிர் நோக்கி வருகிறது. ஆ அதன் மேல் ஒருவன் யார் அவன்?. பார்க்க அதிபயங்கர தோற்றம் அவன் கண்கள் உருண்டு கனல் கக்குகின்றன. பட பட என்று அவன் மீசைகள் துடிக்கின்றன. கனத்த பற்களை நற நற என்று கடிக்கினறான். மலை போல் தண்டு. சுழலுகின்ற முத்தலைச் சூலம், பனந்தண்டு போன்ற கையில் பாசம். ஐயோ, எள்iய என்னை அகப்படுத்த இத்தனைக் கருவிகளா வேண்டும்?.


    கோவென கதறுகிறவர்கள்f விஷயத்திலும் இரக்கம் சிறிதுமில்லா அவன் அறிவுக் கண் அழிந்தவன் தான் (அந்தகன் - குருடன்) அணு அணுவாய் அணுகுகிறானே எந்த வினாடியில் என்ன நேருமோ? இதயம் அதிர்கிறதே.


    அதேசமயத்தில் நான் இருக்க பயம் ஏன்??? அஞ்சாதே என அபயக்குரல் தோன்ற கடலே உடலாக, நில வானமே தோகையாக, மயில் மேல் நீ வா ஐயா, கம்பீர ஆண்மை மயிலைக் கண்டதும் முந்திய எருமை பிந்தும். மறம் - கொடுமை, அதை உடையவன் மறலி. அவனிடம் எளியேனைக் குறித்து கந்த மனிதன் நமது அன்பன் என நீர் சொன்னால் போதும். ஞான வாசனை உடையவன், மோசமான விசய வாசனைகளை மோந்து கொள்ளாதவன். அருள் மண அனுபவி என இப்பொருள்கள் கந்த மனிதன் எனும் சொல்லில் இருக்கிறது. நம் அன்பர் கூட்டத்தில் ஒருவன், நம் அன்பிற்கு பாத்திரம் ஆனவன் எனும் பொருள்கள் நமது அன்பன் என்பதில் நடம் இடுகின்றன.


    காம, க்ரோத, லோப மோக, மத, மாச்சர்யாதி வாசனைகளை இடையறாது மோந்து இருப்பவரை நான் எனது எனும் அகங்காரங்களில் அன்பு வைத்தவர்களை எமன் பிடிப்பான் அடிப்பான். கந்த மனிதர்களை அன்பர்களை தொடுகைக்கும் அருகதை அற்ற எமன் உமது மொழிகளைக் கேட்டு ஓடியே போவான் அதன் பின் அடியேன் அமைதி அடைவேன் என எண்ணி கலங்கியவர்களும் பேறான சாந்தியைப் பெறுவர். இப்பேறு நேரமயிலில் மேல் வா ஐயா. விடுதலை விழைய எமணிடம் இது சொல் ஐயா
    என்று இறைஞ்சியபடி



    விளக்கக் குறிப்புகள்


    கடும்பு - சுற்றம். தலை நவிர் - தலை மயிர். பயம் - பால்.
Working...
X