Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    24.கமலமாதுடன்


    கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
    சொலவொ ணாதம டந்தையர் சந்தன
    களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய்
    களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
    விழியின் மோகித கந்தசு கந்தரு
    கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே
    அமல மாகிய சிந்தைய டைந்தகல்
    தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
    அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே
    அறியு மாறுபெ ரும்படி அன்பினின்
    இனிய நாதசி லம்புபு லம்பிடும்
    அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
    குமரி காளிப யங்கரி சங்கரி
    கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
    குடிலை யோகினி சண்டினி குண்டலி எமதாயி
    குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
    வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
    குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன்
    மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
    அணிக ஜானன விம்பனொர் அம்புலி
    மவுலி யானுறு சிந்தையு கந்தருள் இளையோனே
    வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
    இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
    மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே.



    - திருச்செந்தூர்





    சுருக்க உரை


    கலைமகள், திருமகள் இருவருக்கும் ஒப்பு என்று சொல்ல முடியாத அழகு வாய்ந்த விலை மாதர்களின், கலவைச் சாந்து அணிந்த கொங்கைகளிலும், கண்களிலும், கரிய கூந்தலாலும், சந்திரன் போன்ற முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், தூய மனதுடன் அறம், பொருள், இன்ப நூல்களை ஓதி, உணர்ந்து, பிறகு உனது திருவருள் உண்மையை அறிந்து கொள்ள, சிலம்புகள் அணிந்த உன் திருவடியைத் தந்து அருள வேண்டும்.


    பல விதமான ஆகமங்களால் போற்றப்படுபவளும், பல வேறு நாமங்களால் அழைக்கப் படுபவளும் ஆகிய பார்வதி அருளிய குமரனே, எலியை வாகனமாக உடையவனும், அரையில் பாம்பை அணிந்தவனுமாகிய யானை முகத்தனனான கணபதி மனம் மகிழ்ந்தருளும் தம்பியே, வாழை, மஞ்சள், இஞ்சி எப்போதும் விளங்கும் திருச் செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடிகளைத் தாராய்.






    விளக்கக் குறிப்புகள்


    அ. குடிலை ..... பிரணவ மந்திரத்திற்கு உரியவளாய் இருத்தலின் உமா தேவிக்கு இப்பெயர் வந்தது.
    ஆ. யோகினி.. (எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்) என்ற படி இறைவன் யோக வடிவம் கொள்ளுங்கால் தானும் யோக வடிவம் கொண்டு ஆன்மாக்களுக்கு யோக
    ஞானத்தை உணர்த்துவதால் யோகினி என்ற பெயர் வந்தது.
    இ. சிந்தை உகந்தருள் இளையோனே... (ஆதரவா யடியவருக் கருள்சுரக்கு மைங்கரத்தோன் அன்பு கூர்ந்து மாதவமே எனவழைத்துப் புயத்தணைக்கத் திருவுளத்து மகிழுங் கோவே) ---
    சிதம்பர சுவாமிகள் (திருப்போரூர் சந்நிதி முறை).
Working...
X